1045. விச்சை வேண்டினை வினையுடை மனனே
மேலை நாள்பட்ட வேதனை அறியாய்
துச்சை நீபடும் துயர்உனக் கல்லால்
சொல்லி றந்தநல் சுகம்பலித் திடுமோ
பிச்சை எம்பெரு மான்என நினையேல்
பிறங்கும் ஒற்றியம் பெருந்தகை அவன்பால்
இச்சை கொண்டுநான் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
உரை: வினை செய்தலை யுடைய மனமே, நீ உலகியற் கல்வி வேண்டுகின்றாய்; அதுகுறித்து முன்னை நாட்களில் பட்ட துன்பத்தை நீ அறியாது மறந்தாய்; கீழான நீ பட்ட துயர்தான் உனக்குப் பயனாய் எய்துவதல்லது சொல்லுக்கெட்டாத நற்சுகம் வாய்க்குமோ? வாயாது காண்; பிச்சை யேற்பவன் எங்கள் பெருமான் என்று நினையாதே; உயர்ந்த திருவொற்றியூர்க்கண் உறையும் பெருந்தகை; அவன்பால் அன்புற்று நான் செல்கின்றேன்; உனக்கும் இதனை யுரைக்கின்றேன்; நீ வாராவிடில் என் மேற் பழியில்லை, காண். எ.று.
விச்சை - வித்தை; அஃதாவது உலகியற் கல்வி யறிவு. உயிர்கள் செய்யும் வினையனைத்துக்கும் தலையாய முதற் காரணம் மனம்; சொல்லும்மெய்யும் பின்னிற்பன. இவற்றின் அசைவு அசைவின்மைதான் வினை தோன்றுதற்குக் காரணம். “இருவினை யென்ப மனமுதன் மூன்றினியற்றுறும் இதமகி தங்கள்” (நந்தி. 111) என்று தணிகைப் புராணம் கூறுவது காண்க. இதனாற்றான், “வினையுடை மனனே” என்று விளம்புகின்றார். உலகியற் பொருளும் புகழும் பயப்பது உலகியல் விச்சை; அவ்விரண்டும் வேண்டி மக்கள் இரவும் பகலும் இடையறவின்றி யுழைத்துத் துன்புறுவது உணர்த்தற்கு “மேலை நாள்பட்ட வேதனை யறியாய்” எனக் கூறுகின்றார். துயர் வினைகளைச் செய்த நீ அத்துயரை நுகர வேண்டுமே யன்றிப் பிறர் எவரும் ஏலார் என்றற்கு “துச்சை நீ படும் துயர் உனக்கு” என்றும், துன்ப வினை செய்தார்க்கு ஈறில் இன்ப வாழ்வாகிய நற்சுகம் எய்தா தென்றற்குச் “சொல்லிறந்த நற்சுகம் பலித்திடுமோ” என்றும் எடுத்துரைக்கின்றார். ஈறில் இன்பம், நற்சுகம், பரபோகம், சிவபோகம், நிரதிசயவின்பம் என்றெல்லாம் பேசுவது வீடுபேற்றின்பத்தையேயாகும். திருவொற்றியூர்ப் பெருமான், பிச்சைத் தேவராய் மனைதோறும் சென்று பலியேற்பதை நினைவிற் கொண்டு “பிச்சை யெம் பெருமான் என நினையேல்” என்று கூறுகின்றார். சிவனைத் தரிசிக்கச் செல்வோர் உண்மையன்புடன் செல்ல வேண்டுமாதலின், “அவன்பால் இச்சை கொண்டு நான் செல்கின்றேன்” என மொழிகின்றார்.
இதனால், வித்தை வேண்டி நீ பட்ட வேதனை யுன்னையே சாரும்; அதனால் நற்சுகம் எய்தாது; அன்புடன் தியாகப் பெருமானைச் சென்று காண் என அறிவுறுத்தியவாறாம். (9)
|