1046. தூக்கம் உற்றிடும் சோம்புடை மனனே
சொல்வ தென்னைஓர் சுகம்இது என்றே
ஆக்கம் உற்றுநான் வாழநீ நரகில்
ஆழ நேர்ந்திடும் அன்றுகண் டறிகாண்
நீக்கம் உற்றிடா நின்மலன் அமர்ந்து
நிகழும் ஒற்றியூர் நியமத்திற் கின்றே
ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே.
உரை: தூக்கத்தை எய்துவிக்கும் சோம்பலை யுடைய மனமே நான் உனக்குச் சொல்லக்கூடியது என்னை? ஒற்றிப்பெருமான் நல்கும் அருள் வாழ்வு ஆகிய இதுதான் ஒப்பற்ற சுகம் என்று நினைந்து ஒழுகி, அருளாக்கமுற்று நான் வாழ்க்கையில் நரகில் வீழ்ந்து நீ ஆழுங்காலத்தில் உண்மையைக் கண்டறிக; நம்மின் நீங்காது உறையும் நின்மலனாகிய தியாகப் பெருமான் அமர்ந்துறையும் ஒற்றியூர்த் திருக்கோயிற் கேகி அருள்பெற்றிலமே என்ற ஏக்கமில்லாத பெருநிலை அடையச் செல்கின்றேன்; உனக்கும் தெரிவிக்கின்றேன்; இனி என்மேற் பழியில்லை காண். எ.று.
சோம்பல் உடலைப் பற்றியவழி உறக்கம் வந்து இடம் பெறுதலால் “தூக்கம் உற்றிடும் சோம்பு” என்று சிறப்பிக்கின்றார். திருவருள் வாழ்வு தான் இன்பமே நிறைந்த வாழ்வு என்று சொல்வது மிகை என்றற்கு “சொல்வதென்னை ஓர் சுகம் இது என்றே” என உரைக்கின்றார். திருவருளே செல்வமாதலின், அச் செல்வ நிறை வாழ்வை, “ஆக்கமுற்று நான் வாழ” என்றும், மனத்தை உணர்வும் உறுப்பும் உடையதுபோல் வேறு பிரித்து நிறுத்திப் பேசுதலால் “நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண்” என்றும் கூறுகின்றார். உலகுயிர்ப் பொருளிடத்துப் பிரியாது இருப்பது பற்றி, “நீக்கமுற்றிடா நிமலன்” எனவும், மலமுடைய பொருள்களோடு கலந்திருந்தானாயினும், மலக்கலப் பெய்துபவனல்லன் என்றற்குச் சிவபெருமானை “நீக்கமுற்றிடா நின்மலன்” எனவும் உரைக்கின்றார். செழுங்கலைக் கோயிலை மணிமேகலை யாசிரியர் ‘செழுங்கலை நியமம்’ என்றாற்போல நம் வள்ளற் பெருமான், ஒற்றிப் பெருமான் உறையும் திருக்கோயிலை “ஒற்றியூர் நியமம்” எனக் குறித்து அருள்கின்றார். சோழ பாண்டிய ராட்சியில் பெருநூல் வியாக்கியானங்கட்கும், பின்னாளில் வியாகரண விளக்கத்துக்கும் திருக்கோயில்கள் இடமாய் நிலவியது பற்றி இங்ஙனம் கூறுகின்றார்.
இதனால், ஒற்றிப்பெருமான் நல்கும் அருள் வாழ்வுதான் ஒப்பற்ற சுகம் என்பதை வலியுறுத்தியவாறாம். (10)
|