43. பிரசாத விண்ணப்பம்

திருவொற்றியூர்

    பிரசாதம் எனும் சொல் தெய்வத் திருவருட்குத் தெய்வங்கட்குப் படைத்து அளிக்கப்படும் பொருள்கட்கு வழங்கும் சிறப்புப் பெயராகும். இதுவே முதல் குறைந்து சாதம் என்றாகி உண்ணும் சோற்றுக்குப் பெயராய் வழங்குகிறது. உண்ணும் சாதம் தெய்வத்துக்குப் படைத்து உண்ணப்படின் இந்நாளில் அது பிரசாதம் என்ற பெருமை பெறுகிறது.

    சிவநெறிச் செல்வர்கள் உணவு கொள்ளுமுன், சிவபெருமான் அருளும் பிரசாதமாக அவ்வுணவை யெண்ணி, அவனை நினைந்து உண்பதை சைவவொழுக்கமாகக் கொண்டனர். முன்னை நாட்களில் தொண்டை நாட்டுச் சைவர்கள் உணவு உண்ணுமுன், திருநீலகண்டம் என்னும் மறையை ஓதுவதும், திருநீலகண்டப் பதிகத்தின் முதற்றிருப்பாட்டை ஓதுவதும், தென்னாட்டுச் சைவர்கள் “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்” என்னும் திருப்பாட்டை ஓதுவதும் முறையாகக் கொண்டிருந்தனர். இந்நாளிலும் பல இடங்களில் இம் முறைகள் மாறாமலும் மறையாமலும் உள்ளன. இவ்வாறே திருக்கோயிற்கு வழிபடச் செல்வோர் உண்ணாமற் செல்வதும், கோயில் வழிபாட்டை முடித்தபின் உண்பதும் முறையாகும். ஆயினும், இம் முறைகளை மறந்தொழுகும் நிலை வள்ளலார் காலத்தேயே மக்களிடையே தோன்றிவிட்டது. அவருடைய அன்பரொருவர் உண்பதும் உடுப்பதும் பிறவும் எல்லாம் சிவபெருமான் பிரசாதம் தானே என்று சொல்லிப் பசிபொறாது உணவுண்டு திருக்கோயிற்குப் போந்து வழிபட்டார். திரும்பும்போது வீட்டின் வாயிற்படி யிடறி வீழ்ந்து கையெலும்பு முறிந்து துன்புற்றார். அவர்க்கு உற்றது தமக்குண்டாயதாகக் கொண்டு மனவேதனையுற்ற வள்ளற்பெருமான் அன்றே இப் பிரசாத விண்ணப்பத்தைப் பாடியருளினாரென்பர். இவ்விண்ணப்பத்தில் முறை பிறழ்ந்துண்ட குற்றம் நீங்க வேண்டித் தமக்கு இத் தண்டனையுண்டாயிற்றென வுணர்ந்து கொண்டமை வெளிப்பட முறையிடுகின்றார்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1047.

     பசைஇலாக் கருங்கல் பாறைநேர் மனத்துப்
          பதகனேன் படிற்றுரு வகனேன்
     வசைஇலார்க் கருளும் மாணிக்க மணியே
          வள்ளலே நினைத்தொழல் மறந்து
     நசைஇலா மலம்உண் டோடுறும் கொடிய
          நாய்என உணவுகொண் டுற்றேன்
     தசைஎலாம் நடுங்க ஒற்றியில் உன்னால்
          தண்டிக்கப் பட்டனன் அன்றே.

உரை:

     ஈரமில்லாத கரிய கற்போன்ற மனத்தையுடைய கொடியனாகிய யான் வஞ்சமே வுருவாகியவன்; அதனால் குற்றமில்லாதவர்க்கு அருள் வழங்கும் மாணிக்க மணிபோன்ற வள்ளலாகிய உன்னைத் தொழுவதை மறந்து, விரும்பப்படாத மலத்தைத் தின்றுவிட்டோடும் கொடிய நாய்போல் உணவுண்டு வந்தேன்; உடம்பு முற்றும் தசை துடிக்க திருவொற்றியூரில் உன்னால் தண்டிக்கப்பட்டேன்; அது நன்று. எ.று.

     எத்தனை காலம் நீருட் கிடப்பினும் கருங்கல் ஈரம் உறுவதில்லையாகலின் “பசையிலா கருங்கற் பாறை” என்றும், மனத்தின்கண் அன்புணர்ச்சியின்றிக் கருங்கற் பாறை போல்கின்ற தென்றற்குத் தன்னைப் “பசையிலாக் கருங்கற் பாறைநேர் மனத்துப் பதகனேன்” என்றும் உரைக்கின்றார். பதகன் - கொடியன், படிறு - வஞ்சனை. பிறரை வஞ்சிக்கும் தோற்றம் என்பாலுளது என்பார். “படிற்றுருவகனேன்” எனத் தம்மைத் தாமே பழித்துரைக்கின்றார். வசைக் கேதுவாகிய குற்றமின்றிக் குண நிறைவுடையர்க்கு அருள் வழங்கும் பெருமானாதலாற் சிவனை, “வசையிலார்க் கருளும் மாணிக்க மணியே” என்று பரவுகின்றார். செம்மேனி யம்மானாதலால் செந்நிறமுடைய மாணிக்க மணியை எடுத்து உவமம் செய்கின்றார். உண்ணுமுன்னும் உறங்குமுன்னும் சிவனைத் தொழுவது முறையாக இருத்தலால், அதனைச் செய்யாது உண்டொழிந்தேன் என்று வருந்துகின்றமை தோன்ற, “வள்ளலே நினைத் தொழல் மறந்து உணவு கொண்டுற்றேன்” என்றும், அக்குற்றம் நினைந்து தம்மை மிகவும் நொந்து கொள்வது புலப்பட “நசையிலா மலம் உண்டு ஓடும் கொடிய நாயென” என்றும் கூறுகின்றார். உடலின் உள்ளுறை யுறுப்புக்களால் வேண்டாததென ஒதுக்கிப் புறந்தள்ளப்படுதலால் விரும்பப்படும் தன்மையிலாதாகியது மலமாதலின் “நசையிலா மலம்” எனவும், அதனையும் உண்டு கீழ்மையுறும் நாயை “மலமுண்டோடும் நாய்” எனவும் இகழ்கின்றார், தொழுதலைச் செய்யாது உணவுண்ட குற்றத்தால் திருமுன் வரும் தகுதியில்லாமையால், திருவொற்றியூரில் உடல் தசை சுருங்கி நடுக்கமுற நோய் தந்து ஒறுத்தாய்; அது குற்றம் நினைந்து நெறிநிற்கப் பண்ணும் நீர்மையதாதலால், “தசையெலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன் நன்றே” என இயம்புகின்றார். “நின் பணி பிழைக்கில் புளியம் வளாரால் மோதுவிப்பாய்” (ஏகம்பம்) என்று திருநாவுக்கரசர் கூறினாராக, மாணிக்க வாசகர் “எங்கள் சிவலோகா, உடையாய், கூவிப் பணி கொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே” (குழைந்த) என்று கூறுவதால், வள்ளற் பெருமானும், “தண்டிக்கப்பட்டனன் நன்றே” என்று உரைக்கின்றார்.

     இதனால், தொழுவது மறந்து சிவன் திருமுன் போந்து நின்ற குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டது நன்றெனத் தெரிவித்துக் கொண்டவாறாம்.

     (1)