1049. கண்ணினால் உனது கழற்பதம் காணும்
கருத்தினை மறந்துபாழ் வயிற்றை
மண்ணினால் நிறைத்தல் எனஉண வருந்தி
வலம்பெற வந்தனன் அதனால்
எண்ணினால் அடங்கா எண்குணக் குன்றே
இறைவனை நீ அமர்ந் தருளும்
தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால்
தண்டிக்கப் பட்டனன் அன்றே.
உரை: சிந்தனைக் கடங்காத எண் குணங்களையுடைய குன்று போல்பவனே, இறைவனே, உனது கழலணிந்த திருவடியைக் காணும் எண்ணத்தை மறந்து பாழ்செய்யும் வயிற்றை, மண் கொண்டு பள்ளத்தை நிறைப்பதுபோல உணவினைப் பெய்து மலம் மிகைப்பட வந்தேனாதலால், நீ விரும்பியுறையும் தட்பம் மிக்க ஒற்றியூரின்கண் உன்னால் தண்டிக்கப்பட்டேன். எ.று.
மக்களால் சிந்தித் தளவிடமுடியாத குணமுடையனாயினும், வேதங்களால் அறியப்படாமல் சிவாகமங்களால் ஒருவாறு தொகுக்கப்பட்டவாதலின் எண் குணங்களை, “எண்ணினாலடங்கா எண்குணக்குன்றே” என்று இசைக்கின்றார். “எண்குணங்களும் விரும்பும் நால் வேதத்தாலும் அறிவொண்ணா நடையுடையன்” (முதுகுன்றம்) என ஞானசம்பந்தர் நவில்கின்றார். மக்களின் செய்வினைக்கேற்ப முறை செய்கின்றாராதலால், “இறைவனை” என மொழிகின்றார். “இறையவனை மறையவனை எண் குணத்தினானை” (கானாட்டுமுள்ளூர்) என்று நம்பியாரூரர் கூறுகின்றார். கிழக்கிற் கடலும் மேற்கில் நன்செய் வயலும் பொருந்திக் குளிர் காற்றுலவி இருத்தலால் ஒற்றியூரைத் “தண்ணினாலோங்கும் ஒற்றி” என்று புகழ்கின்றார். தண் - தட்பம். கழலா வினைகளைக் கழற்றுவனவாதலின் திருவடியைக் “கழற்பதம்” என்று சிறப்பிக்கின்றார். “கழலா வினைகள் கழற்றுவ காலவனங் கடந்த அழலார்ஒளியன காண்க வையாறன் அடித்தலமே” (ஐயாறு) என்று திருநாவுக்கரசர் தெளியவுரைப்பது காண்க. சிறுதுண்ணினும் பெரிதுண்ணினும் நோய் செய்து அறிவைக் கெடுத்தலால் “பாழ்வயிறு” என்று பழிக்கின்றார். மண்ணைப் பிசைந்து அப்பிப் பள்ளத்தை நிறைப்பதுபோல உணவைப் பிசைந்து வயிற்றை நிறைத்தல் தோன்ற “மண்ணினால் நிறைத்தல் என வுணவருந்தி” என்றும், உண்டது வயிற்றிற் செரிப்புண்டு மலமாதலால் “மலம் பெற வந்தனன்” என்றும் உரைக்கின்றார். வருதல் - நடந்து வருதலால் உண்ட வுணவு செரிக்கும் குறிப்புப் புலப்பட “மலம் பெற” வந்தனன் என்பாராயினர். திருவடி வழிபாட்டின் கருத்து அதுவன்மையின், தண்டிக்கப்பட்டேன் என்பார், “அதனால் உன்னால் தண்டிக்கப்பட்டனன்” என்று கூறுகின்றார்.
இதனால், உண்டது செரித்தற் பொருட்டு உன் திருமுன் வந்ததாகப் பொருள்படுவது பற்றித் தண்டிக்கப்பட்டேன் என்றாராம். (3)
|