105. புன்புலைய வஞ்சகர்பாற் சென்று வீணே
புகழ்ந்துமன மயர்ந்துறுகண் பொருந்திப் பொய்யாம்
வன்புலைய வயிறோம்பிப் பிறவி நோய்க்கு
மருந்தாய நின்னடியை மறந்தே னந்தோ
இன்புலைய வுயிர்கொள்வான் வரினென் பாலவ்
வியமனுக்கிங் கென்சொல்வேன் என்செய்கேனே
தன்புகழ் காணருந்தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: தனது அரிய புகழைத் தானே காண்பதற்கரிய தணிகை மணியே, சீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே, புல்லிய புலைத்தன்மையுடைய வஞ்சகரிடம் சென்று அவர்களை வீணாகப் புகழ்ந்து மனம் தளர்ந்து வருத்த முற்று அவர் எறிந்த புல்லிய பொருளைப் பெற்றுப் பொய் பொருந்திய மிக்க புலால் நாறும் வயிற்றை வளர்த்துப் பிறவிப் பிணிக்குப் பெரு மருந்தாகிய உன்னுடைய திருவடியை நினையாமல் மறந்து கெட்டேன்; நாளை என் மன மகிழ்ச்சி கெட்டொழியுமாறு எனது உயிரைக் கோடற் பொருட்டு வருவானாயின் இயமனுக்கு இவ்வுலகில் யான் என்ன சொல்லுவேன்; எதனைச் செய்ய வல்லவனாவேன், எ. று.
தனது பெரும் புகழ் எல்லை கடந்து விளங்குதல் தோன்றத் “தன் புகழ் காணரும் தணிகை மணியே” என்று பரவுகின்றார். புலைய வஞ்சகர்-புலைத்தன்மையுடைய வஞ்ச நெஞ்சர். “மாடமது வார்சடைய வள்ளலையு மொக்கும்” (சீவக) என்றாற் போல, வஞ்சர் செய்த வஞ்சத்தின் மிகுதி தோன்றப் “புன்புலைய வஞ்சகர்” எனப் புகல்கின்றார். புகழ்ந்துழன்ற அளவுக்கு மாறாக அவர்கள் வஞ்சம் புரிந்து மிகச் சிறிதே வேண்டாதது நல்கி விடுத்தமை இனிது விளங்க, “வீணே புகழ்ந்து மனம் அயர்ந்து உறுகண் பொருந்தி” என்று கூறுகின்றார். உறுகண் - துன்பம். “நிலைமலி புடைய மன்னுயிர்க் குறுகண் துன்னியாங் கருந்தல்” (ஞானா. 26) என்பது காண்க. வஞ்சரைப் புகழ்ந்ததனால் எய்திய ஏமாற்றத்தால் உளதாகும் மனநோய், ஈண்டு “உறுகண்” எனப்படுகிறது. காலைதோறும் தவறாது உண் பொருளைப் பெய்யினும் மறுகாலை இடாதது போல் பசித்துப் பொய்த்தலின் வயிற்றைப் “பொய்யாம் வயி” றென்றும், அதன் உள்ளகம் புழுவும் புலால் நாற்றமும் நிறைந்திருக்குமாறு பற்றி, “வன்புலைய வயிறு” என்றும் பழிக்கின்றார். வன்மை, மிகுதி மேற்று. பிறவி நோய்க்கு நன் மருந்தென்று சான்றோர் உரைத்தலால், முருகப் பெருமான் திருவடியைப் “பிறவி நோய்க்கு மருந்தாய நின்னடியை” என்று போற்றுகின்றார். இன்பம், ஈறு கெட்டு இன்பு என வந்தது, உலைதல்-கெடுதல். பிறவி பெற்றது உய்தி பெறற் கன்றே அது குறித்து. நீ செய்தது யாதென இயமன் உயிர் கொள்ள வரும் போது வினவுவனென்று அஞ்சுமாறு புலப்பட, வயிறோம்பும் வேட்கையால் மயங்கி நின் திருவடிப் பேற்றை மறந்தேன்; இப்போது நினைவு கூர்ந்து சொல்வதும் செய்வது மறியாமல் மாட்டாமை யுற்று வருந்துகிறேன் என்பார், “நின் அடியை மறந்தேன் அந்தோ” என்றும், உயிர் கொள்ள வரின் இயமனுக்கு “என் சொல்கேன் என்செய்கேனே” என்றும் இயம்புகின்றார்.
இதனால், வயிறோம்பும் வேட்கை மயக்கத்தால் இறைவன் திருவடியை மறந்தமைக்கு வருந்தியவாறாம். (3)
|