1050.

     நின்முனம் நீல கண்டம்என் றோதும்
          நெறிமறந் துணவுகொண் டந்தோ
     பொன்முனம் நின்ற இரும்பென நின்றேன்
          புலையனேன் ஆதலால் இன்று
     மின்முனம் இலங்கும் வேணிஅம் கனியே
          விரிகடல் தானைசூழ் உலகம்
     தன்முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால்
          தண்டிக்கப் பட்டனன் அன்றே.

உரை:

     மின்போலும் ஒளி திகழும் சடையுடைய கனி போன்றவனே, நின்னுடைய திருமுன்பு நின்று நீலகண்டம் என்று உரைத்து வழிபடும் நெறியை மனத்திற் கொள்ளாமல் உணவுண்டு, ஐயோ, பொன்னின் முன் இரும்பு நிற்பதுபோல் யான் நிற்பேனாயினேன்; புலைத்தன்மையுடையனாதலால், இன்று, விரிந்த கடலை ஆடையாகச் சூழக் கண்ட நிலவுலகில் உள்ள ஊர்களில் முன் வைத்துப் பேசும் சிறப்புடைய ஒற்றியூரில் உன்னால் நன்கு தண்டிக்கப்பட்டேன். எ.று.

     சிவன் முடிமேற் சடை மின்போல்வதாகலின், “மின் முனம் இலங்கும் வேணியங் கனியே” என விளம்புகின்றார். “மின்னியலும் வார்சைடையெம் பெருமான் கண்டாய்” (மழபாடி) என்று நாவுக்கரசர் பரவுவது காண்க. கடலை நிலமகட்கு ஆடையாகக் கூறும் மரபுபற்றி “விரிகடல் தானை சூழ் உலகம்” என்று உரைக்கின்றார். “கருதரிய கடலாடை யுலகுபல” (தனிச் செய்யுள்) என்று துறைமங்கலம் சிவப் பிரகாச அடிகள் பாடுவது காண்க. பலவூர்களைக் கொண்டது உலகமாதலால், உலகம் ஆகு பெயராய் ஊர்கள் மேலதாயிற்று. “உலகம் தன் முனமிலங்கும் ஒற்றி” என்பது, “ஊர் பரந்தவுலகில் முதலாகிய ஓரூர் இதுவென்னப் பேர்பரந்த பிரமாபுரம்” (பிரமபுரம்) என ஞானசம்பந்தர்கூறுவதை ஒட்டி நிற்பது காண்க. உண்டற்கும் உறங்குதற்கும் முன்பு “நீலகண்டம்” என்றோ, நீலகண்டப் பதியத்தின் முதற்றிருப்பாட்டையோ ஓதுவது தொண்டை நாட்டுச் சைவச் சான்றோர் மரபாதலின், “நீலகண்டம் என்றோதும் நெறி” எனவும், அதனை மறந்து உணவுண்டதற்கு வருந்தி, “அந்தோ உணவு கொண்டு” எனவும், “நின் முனம் நின்றேன்” எனவும் உரைக்கின்றார். நின்ற நிலை, பொன்மேனிப் பெருமானாகிய சிவன் திருமுன் தாம் நிற்பது பொன்னின் எதிரில் இரும்பை நிறுத்துவது போல்கிறதென விளக்குதற்குப் “பொன்முனம் நின்ற இரும்பென நின்றேன்” என்று புகல்கின்றார்.

     இதனால், நீலகண்டம் ஓதாது உணவுண்டு புலையன்போல உன் திருமுன் வந்த குற்றத்துக்காக நன்கு தண்டிக்கப்பட்டேன் என்றவாறாம்.

     (4)