1051.

     குழிக்குமண் அடைக்கும் கொள்கைபோல் பாழும்
          கும்பியை ஓம்பினான் அல்லால்
     செழிக்கும்உன் திருமுன் நீலகண் டந்தான்
          செப்புதல் மறந்தனன் அதனால்
     விழிக்குள்நின் றிலங்கும் விளங்கொளி மணியே
          மென்கரும் பீன்றவெண் முத்தம்
     தழிக்கொளும் வயல்சூழ் ஒற்றியில் உன்னால்
          தண்டிக்கப் பட்டனன் அன்றே.

உரை:

     கண்ணுக்குள் இருந்து விளங்கும் ஒளியுடைய மணியே, குழிக்கு மண் அடைக்கும் கொள்கைபோலப் பாழ் விளைக்கும் வயிற்றுக்கு உணவிட்டுப் போற்றினேனே யன்றி அருள் வளம் செழித்த நின் திருமுன்னரேனும் நீலகண்டத்தை ஓத மறந்தேனாதலால், மெல்லிய கரும்பீன்ற முத்தைத் தன்னகத்தே படிவித்துக் கொள்ளும் நன்செய்கள் சூழ்ந்த ஒற்றியூரில் உன்னால் பெரிதும் தண்டிக்கப்பட்டேன். எ.று.

     கண்ணுள் விளங்கும் கருமணி இயற்கையொளி யுடையதாகலின் அதனை, “விழிக்குள் நின்றிலங்கும் விளங்கொளி மணியே” என்று கூறுகின்றார். கண்ணிற் கருவிழி கண்ணிட மெங்கும் திரிந்து விளங்க, அதன் உள்ளிருக்கும் மணி யசைவதில்லாமையால் “நின்றிலங்கும் மணியே” எனவும், அதன்கண் திகழும் ஒளியை விதந்து “விளங்கொளி மணியே” எனவும் சிறப்பிக்கின்றார். திருநாவுக்கரசர், கருவிழியைக் கருமணி (cornea) யென்றும், அதனுள் நின்று திகழும் ஒளிமணியைப் பாவை (pupil) யென்றும் கொண்டு “கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்” (ஆவடு) என வுரைக்கின்றார். திருவள்ளுவரும் “கருமணியிற் பாவாய்” (குறள்) என்று கூறுவது காண்க. கண்ணிற் சிறந்த உறுப்பில்லையாயினும், அதனுள் மணி சிறந்தமையின், சிவனை “ஒளிமணி” என்று குறிக்கின்றார். இயற்கையாகவே கரும்பு மென்மை பொருந்தியதாதலால் “மென் கரும்பு” என இயற்கை யடை தந்து அதன் கணுவிற் றோன்றும் முத்து வயலின்கண் உதிருமாயின் நன்செய் வயற்சேறு அதனைத் தன்கண் புதைந்து மறையச் செய்வது பற்றி, “மென் கரும்பீன்ற வெண்முத்தம் தழிக் கொள்ளும் வயல்” என்று எடுத்துரைக்கின்றார். வயிற்றுக்கு உணவிடுதலைக் குழிக்கு மண்ணிடும் கொள்கைபோல் என்பது அச்செயலை இழித்துரைக்கும் குறிப்பினதாகும். சிவன் திருமுன் நீலகண்டம் ஓதுதலைச் சீருத்திரம் ஓதுதல் என்பர். திருமயானம் கல்வெட்டொன்று (54/1906) இதனைக் குறிக்கின்றது. சீருத்திரம் ஓத மாட்டாதார் நீலகண்டத் திருப்பதியம் ஓதுவது முறையென்பர் தவத்திரு. வாலையானந்த சுவாமிகள். நீலகண்டம் ஓதா தொழிந்த குற்றத்தால் தண்டிக்கப்பட்டேன் என்பார். “திருமுன் நீலகண்டம் தான் சொல்லுதல் மறந்தன னதனால் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன்” என்று முறையிடுகின்றார்.

     இதனால், சிவன் திருமுன் நீலகண்டம் ஓதாக் குற்றத்தால் தண்டிக்கப்பட்டமை தெரிவித்தவாறாம்.

     (5)