1052.

     கமரிடை மலநீர் கவிழ்த்தல்போல் வயிற்றுக்
          கடன்கழித் திட்டனன் அல்லால்
     அமரிடைப் புரமூன் றெரித்தருள் புரிந்த
          ஐயனே நினைத்தொழல் மறந்தேன்
     சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர்
          சங்கர சிவசிவ என்றே
     தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால்
          தண்டிக்கப் பட்டனன் அன்றே.

உரை:

     முப்புரம் எரித்தருளிய ஐயனே, ஆழ்ந்த குழியின்கண் மலமும் சிறுநீரும் கழிப்பது போல வயிற்றுக் குழியில் சோறும் நீரும் பெய்வதாகிய கடன் கழித்தேனே யன்றி, நினைப்பு மறப்புக்கள் நின்று போராடும் மனமுடைய யான் நின்னைத் தொழுவதாகிய நற்பணியை மறந்தொழிந்தேன்; அதனால் முனிவர்களாகிய சிவத்தொண்டர்கள் தம்மவராகிய பிற தொண்டரொடு கூடிச் சங்கரா, சிவ சிவ என்று முழங்கும் ஒற்றியூரில் உன்னால் நன்கு தண்டிக்கப்பட்டேன். எ.று.

     கமர் - ஆழ்ந்த குழி. மனைப் புறத்தும் ஊர்ப் புறத்தும் ஆழ்ந்த குழிகள் தோண்டி அவற்றில் மலநீர் கழிப்பர்; வயிறும் மலநீர் நிறைந்திருத்தலால், மலநீர்க் கமரை உவமம் செய்கின்றார். மலநீர் கழித்தல் கடனாதல் போல சோறும் நீரும் வயிற்றுக் கிடுவது கடனாதல்பற்றி, “வயிற்றுக் கடன் கழித்திட்டனன்” என வுரைக்கின்றார். முப்புரத்தசுரர் தொடுத்த போரின்கண் குறுநகையிற் பிறந்த தீயால் அவர்கட் கரணாகிய மதில் மூன்றையும் எரித்ததோடு சரண் புகுந்தார்க்கு நல்லருளும் செய்தானென்பது பற்றி “அமரிடைப் புர மூன்று எரித்தருள் புரிந்த ஐயனே” என்று பரவுகின்றார். மனத்தின்கண், நினைப்பும் மறப்பும்தோன்றி ஒன்றை யொன்று வீழ்த்தி மேம்படுவதுபற்றித் தன்னைச் “சமரிடை மனத்தேன்” என்றும், அதனால் சிவனை வழிபட மறந்தமை விளங்க, “நினைத்தொழல் மறந்தேன்” என்றும் இயம்புகின்றார். நினைத்தல் நன்றும், மறத்தல் தீதுமாகலின், தீது புரிந்த குற்றத்துக்காகத் திருவொற்றியூரில் உன்னால் நன்கு தண்டிக்கப்பட்டனன் என்பாராய், “ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டேன்” என்று கூறுகின்றார். சிவ நினைவுக்கும் சிவப்பணிக்கும் ஆகாதவற்றை முனிகின்றவராதலால் சிவத் தொண்டரை, “முனிவர்” என்று குறித்து அவர்கள் தம் போலும் தொண்டரொடு கூடிச் சங்கரா என்றும், சிவசிவ என்றும் ஓதும் முழக்கம் மிக்கிருப்பது தோன்ற, “முனிவர் சங்கரா சிவசிவ என்று தமரிடை யோங்கும் ஒற்றி” என்று சொல்லுகின்றார். சங்கர என்பது திருப்பெயர் ஓதும் வகை; சிவசிவ என்பது திருவைந்தெழுத்து ஓதும் வகை. இரண்டும் வழிபாட்டுக்குரியன வாதலால் “சங்கர சிவசிவ” என்று சேரக் குறிக்கின்றார், “நாவால் நாதன் நாமம் ஓதி நாடோறும், பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூர்” (அரிசிற்) என்று ஞானசம்பந்தரும், “மறவாது சிவாய வென்றெண்ணினார்க் கிடமாவெழில் வானகம் பண்ணினார்” (பாலைத்துறை) என்று திருநாவுக்கரசரும் உரைப்பன காண்க.

     இதனால், மறக்கும் மனத்தினால் சிவனைத் தொழல் மறந்த குற்றத்தால் தண்டிக்கப்பட்டேன் என தெரிவித்தவாறாம்.

     (6)