1053. அருமருந் தனையாய் நின்திரு முன்போந்
தரகர எனத்தொழல் மறந்தே
இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த
இயல்புற உண்டனன் அதனால்
கருமருந் தனைய அஞ்செழுத் தோதும்
கருத்தர்போல் திருத்தம தாகத்
தருமநின் றோங்கும் ஒற்றியில் உன்னால்
தண்டிக்கப் பட்டனன் அன்றே.
உரை: பெறுதற்கரிய தேவரமுது போன்ற சிவனே, இருள் பொருந்திய மனமுடையவனாதலால், நின்னுடைய திருமுன்பு வந்து அரகர என்று சொல்லித் தொழுவதை மறந்து, மலத்தினும் இழிவுடைய தன்மை யடையுமாறு உணவுண்டேனாதலால், பிறவிப் பிணிக்கு மருந்தாகிய ஐந்தெழுத்தையோதும் கருத்தினால் திருந்திய சிந்தையுடையாரைப் போல என்பால் திருத்தமுண்டாதற் பொருட்டுத் தருமம் நிலை நின்று ஓங்கும் திருவொற்றியூரில் உன்னால் நன்கு தண்டிக்கப் பட்டேன். எ.று.
மலை கொண்டு கடலைக் கடைந்து பெற்ற அருமை பற்றித் தேவரமுது “அருமருந்து” எனப்பட்டது. சாவதைப் போக்குதல் பற்றி “மருந்து” எனப்படுகிறது. சிவன் திருமுன் அன்பர்கள் அரகர எனச் சொல்லி வழிபடுவ துண்மையின் “அரகர வெனத் தொழல்” என்று கூறுகின்றார். நம்பியாரூரர் கயிலாயம் செல்வதற்கு வெள்ளை யானை வந்தபோது, வானமெங்கும் பரந்தெழுந்த ஒலியை, “அரவொலி ஆகமங்கள், அறிவாரறி தோத்திரங்கள், விரவிய வேத வொலி” (நொடித்தான்) என்று நம்பியாரூரர் உரைக்கின்றார். அறியாமை யிருள் நிறைந்த உள்ள முடையேனாதலால் அரவொலி யெழுப்பித் தொழாமல் மறந்தொழிந்தேன் என்பாராய், “இருளுறு மனத்தேன் அரகர எனத் தொழல் மறந்து” என்றும், தொழாமல் உணவுகொண்டதனால் புறத்தே விலக்குண்ணும் கீழ்மைத்தன்மை யெய்தினேன் என்றற்கு, “மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன்” என்றும் கூறுகின்றார். கருமருந்து - பிறவி நோய் தீர்க்கும் மருந்து. “பேரமுதின் சுவையாய்க் கருமருந்தாகியுள்ளாய்” (ஆலவாய்) என்று திருநாவுக்கரசர் உரைப்பர். உறங்கிக் கிடப்பினும் விழித்திருப்பினும் திருவைந்தெழுத்தை நெஞ்சில் நினைந்த வண்ணம் இருத்தல் வேண்டும் என விதித்தலின், “கரு மருந்தனைய அஞ்செழுத்தோதும் கருத்தர்” என்று இயம்புகின்றார். “துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்திலும், நெஞ்சகம் நைந்து (அஞ்செழுத்தை) நினைமின் நாடொறும்” (பஞ்சாக்கரப்) என்று திருஞானசம்பந்தர் ஓதுவது காண்க. திருவைந்தெழுத்தைக் கருத்திற் கொண்டிருப்பவர் பிழை செய்யின் திருத்தி யருள்வது சிவபெருமானது அருளியலாதலால் அம்முறையில் தம் குற்றத்தைத் திருத்துதற்கு இத்தண்டனை செய்யப்பட்ட தென்பார், “திருத்தமதாக ஒற்றியில் உன்னால் தண்டிக்கப் பட்டனன்” என்று விளம்புகிறார். திருத்தித் திருந்திய செல்வர்கள் செய்தலால் தருமம் நின்று சிறக்கின்றது என்றற்குத் “தருமநின்றோங்கும் ஒற்றி” என்று சிறப்பிக்கின்றார்.
இதனால், இருளுறும் மனத்தால் திருமுன் சென்று அரகர எனத் தொழிதலை மறந்த குற்றத்தை நீக்கிச் சிந்தை திருந்துதற்காகத் தான் தண்டிக்கப்பட்டதாக விளம்பியவாறாம். (7)
|