1054. கண்நுதல் கரும்பே நின்முனம் நீல
கண்டம்என் றோதுதல் மறந்தே
உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல்
உன்முனம் நின்றனன் அதனால்
நண்ணுதல் பொருட்டோர் நான்முகன் மாயோன்
நாடிட அடியர்தம் உள்ளத்
தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால்
தண்டிக்கப் பட்டனன் அன்றே.
உரை: கண் பொருந்திய நெற்றியையுடைய கரும்பு போன்ற சிவனே, உன்னுடைய திருமுன்னர் நின்று நீலகண்டம் என்று ஓதுவதை மறந்து உண்டற்கொருப்பட்டு அமர்ந்து உண்டு பின்னர் ஒதி மரம்போல உன் முன்னே வந்து நின்ற காரணத்தால் உன்னுடைய திருமுடியையும் திருவடியையும் கண்டு உன்னை அடைதற் பொருட்டு நான்முகனும் நாரணனும் முறையே தேடியயரவும், அடியார்களின் உள்ளத்தில் குளிர்ச்சியுண்டாகக் கலந்து கொண்ட உன்னால் திருவொற்றியூரில் நன்கு தண்டிக்கப்பட்டேன். எ,று.
கண்ணை நெற்றியிலே யுடையனாய்க் காண்பார்க்கும் நினைவார்க்கும் கரும்பின் சுவை நல்குவனாதலால் சிவபெருமானைக் “கண்ணுதற் கரும்பே” என்று சிறப்பிக்கின்றார். “கரும்பொப்பானைக் கரும்பின் கட்டியை” (நெல்வாயில் அரத்துறை) என்பர் திருநாவுக்கரசர். உண்டற் கழைத்த காலை நீலகண்டம் ஓதாமல் இசைந்து சென்று உண்டமை நினைக்கப்படுதலால் “நீலகண்டம் என்று ஓதுதல் மறந்தே உண்ணுதற்கு இசைந்து உண்டு” என்றும், உண்டபின் சிவபிரான் திருமுன்பு சென்று நின்றதை நினைந்து வருந்துகின்றாராதலால், “உண்டுபின் ஒதிபோல் உன்முகம் நின்றனன்” என்றும், அது குற்றமாதல் பற்றி யான் தண்டிக்கப்பட்டேன் என்பாராய், “அதனால் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன்” என்றும் இசைக்கின்றார். உள்ளீடாகிய வலிமையில்லாமைபற்றி, “ஒதிபோல்” என உரைக்கின்றார். “ஒதி பெருத்தாலும் தூணாகாது” என்பது பழமொழி. திருமாலும் பிரமனும் முறையே அடிமுடி காணாத செய்தியை, “மாலொடயன் மேலொடு கீழ் அறியாவண்ணம், வெந்தழலின் விரிசுடராய் ஓங்கினான் காண்” (வீழிமிழலை) என்றும், மாலயன் அறியொண்ணாத சிவபிரான் அடியார் உள்ளத்து அமர்ந்து இன்பம் செய்தலை, “மதுவும் பாலும் ஆலையிற் பாகும்போல அண்ணித்திட் டடியார்க்கென்றும் வேலையின் அமுதர்” (வீழிமி) என்றும் நாவுக்கரசர் நவில்கின்றார். தண்ணுதல் - குளிர்வித்தல்.
இதனால், நீலகண்டம் ஓதாமல் உண்டு வந்த குற்றம் காரணமாகத் தண்டிக்கப்பட்டமை தெரிவித்தவாறு. (8)
|