1055. கற்றவர் கினிதாம் கதியருள் நீல
கண்டம்என் றுன்திரு முன்னர்
சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத்
துருத்தியில் அடைத்தனன் அதனால்
செற்றமற் றுயர்ந்தோர் சிவசிவ சிவமா
தேவஓம் அரகர எனும்சொல்
சற்றும்விட் டகலா ஒற்றியில் உன்னால்
தண்டிக்கப் பட்டனன் அன்றே.
உரை: கல்வி கற்ற நல்லோர்க்கும இன்பமேயான சிவகதியை அளிப்பதாகிய நீலகண்டம் என்ற மறையை உன்னுடைய திருமுன்பு ஓதுவதை மறந்து அழுக்குப் பொருந்திய துருத்தி போன்ற வயிற்றில் சோற்றைப் பெய்தேனாதலால், பகையுணர்வில்லாமல் போக்கிய உயர்ந்தோர் கூடி நின்று ‘ஓம் சிவ சிவ சிவ மாதேவ, அரகர’ என்னும் சொல் லொலி சிறுதும் விட்டு நீங்காத ஒற்றியூரில் உன்னால் நன்கு தண்டிக்கப்பட்டேன். எ. று.
கற்றவர் - ஞான நூல்களைக் கற்றுணர்ந்தொழுகும் சான்றோர், அவர்கட்கு உரியதாதல் கண்டு சிவபோகம் துய்க்கும் சிவகதியருளுதல் முறையாதலால், “கற்றவர்க்கு இனிதாம் கதியருள்” என்றும், அதற்குரிய நெறி நீலகண்டம் என்ற அருமறையை ஓதுவதென்பார். “நீலகண்டமென்று உன் திருமுன் சொற்றிடல்” என்றும், அதனை மறத்தல் குற்றமென்றற்கு, “சொற்றிடல் மறந்தேன்” என்றும் கூறுகிறார். நீலகண்ட மந்திரத்தை யோதியுண்பது விதியாகவும், அதனை மறந்து உணவு கொண்ட குற்றத்துக்காக மனம் வருந்துகின்றமையின், “சோற்றினை ஊத்தைத் துருத்தியில் அடைத்தேன்” என்று இயம்புகின்றார். மலம் பொதிந்த துருத்தி போலுதல் பற்றி “ஊத்தைத் துருத்தி” என்று உரைக்கின்றார். வயிற்றின் உணவு வேட்கை மீதுர்ந்து நீலகண்டம் ஓதும் முறையை மறப்பித்தமையின், வயிற்றை இவ்வாறு பழிக்கின்றாரென வுணர்க. செற்றம் - பகையுணர்வு. கொலை முதலிய குற்றங்கட்குக் காரணமாதலால் “செற்றமற் றுயர்ந்தோர்” எனச் செற்றத்தை எடுத்தோதுகின்றார். திருவொற்றியூரில் சிவன் திருமுன் எழுப்பப்படும் முழக்கத்தை விளக்குதற்கு “ஓம் சிவசிவ சிவ மாதேவ அரகர எனும் சொல்” ஒலி என உரைக்கின்றார்.
இதனால், நீலகண்டம் ஓதுவதை மறந்துண்ட குற்றத்துக்குத் தண்டிக்கப்பட்டது தெரிவித்தவாறாம். (9)
|