1058. மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா
வண்ண மென்தனை வலிக்கின்ற ததனால்
தீயன் ஆயினேன் என்செய்வேன் சிவனே
திருவ ருட்குநான் சேயனும் ஆனேன்
காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம்
கலங்கு கின்றனன் களைகண்மற் றறியேன்
ஆய ஒற்றி்யூர் அண்ணலே தில்லை
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
உரை: அழகிய திருவொற்றியூர் உறையும் அண்ணலே, தில்லையம்பலத்தின்கண் நின்று ஆடல் புரியும் ஞானவமுதே, என் மாய நெஞ்சம் நின்னுடைய திருவடியை வணங்கி வழிபடா வண்ணம் என்னை வேறுவழியில் இழுக்கின்றது; ஆதலால் யான் தீயனாய் விட்டேன்; சிவனே, இனி யான் என் செய்குவேன்; நினது திருவருட்குப் புறம்பாயினேன்; உடலோடு கூடிய உலக வாழ்க்கையில் விரும்பியன நுகர்ந்து மனம் கலங்குகின்றேன்; எனக்குக் களைகணாவார் நின்னின் வேறு ஒருவரையும் காண்கிலேன்; ஆதலால் நீயே எனக்குக் களைகணாதல் வேண்டும். எ.று.
ஊர்க்கு அழகு தரும் நலம் பலவும் உள்ள திருவொற்றியூர் என்ற பொருள்பட “ஆய ஒற்றியூர்” என்றும், அதனையுடைய தலைவன் என்றற்கு “அண்ணல்” என்றும் உரைக்கின்றார். ஆடல் நின்ற விடத்து உலகனைத்தும் கெட்டு உயிரோடே ஒன்றி ஒடுங்குமாதலால் “நின்று ஆடல் செய் அமுதே” என்று சிறப்பிக்கின்றார். மாயையின் காரியமாய் ஐயமும் திரிபுமாகிய காட்சிகளை நல்கி உயிரறிவைக் குற்றப்படுத்தும் புலனுணர்வுகளோடு கூடி, உடலின் அகத்தும் புறத்தும் சுழன்று பொய்யும் வழுவும் புகுத்துவதுபற்றி நெஞ்சினை, “மாய நெஞ்சம்” எனவும், இறைவன் திருவடிக்கண் பெறலாகும் வழிப்பாட்டின்பத்தில் ஈடுபடாதவாறு உயிரறிவை விலக்கி உலகியற் புலனின்பத்திற் செலுத்துவதுபற்றி “மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா வண்ணம் என்றனை வலிக்கின்றததனால் தீயனாயினேன்” என்று தெரிவிக்கின்றார். தீய செய்தார்க்கு எய்தும் துன்பம் வந்து தாக்குதற் கஞ்சுகின்றமையின், “என் செய்வேன் சிவனே” என்று வருந்துகின்றார், கருவி கரணங்களோடு கூடிய உடலைப் படைத்து, அதன்கண் உயிரைப் புகுத்தி, உலகின்கண் வாழச் செய்வதோடு, வாழ்க்கைக்கு இன்றியமையாத உணர்வும் செய்கையும் உதவுவது திருவருளாதலின், அதனை மறந்து உலகியற் சூழலிற் சிக்கியலமருவதுபற்றி, “திருவருட்கு நான் சேயனுமானேன்” என்று கூறுகின்றார். சேயன் - தூரத்தே நீங்கியுள்ளவன். காய வாழ்க்கை - உடலொடு கூடி நடத்தும் உலகியல் வாழ்க்கை. காமம் - வேண்டும் நுகர்ச்சிகள். வேண்டுவன முயன்று பெற்று ஆரவுண்ட வழியும், நுகர்ச்சி மிகினும் குறையினும் மனம் துயருறுவது பற்றிக் “கலங்குகின்றனன்” என்றும், அந்நிலையில் அருளாளராய்த் தோன்றி “மனக்கலக்கம் போக்கி இன்புறுத்துவோர் வேறின்மை கண்டு இறைவனிடம் “களைகண் மற்றறியேன்” என்றும் இயம்புகின்றார்.
இதன்கண், உயிர்கட்குக் களைகணாய் நின்று ஆரருள் செய்பவர் இறைவனையன்றிப் பிறர் இலர் என்பது உணர்த்தியவாறு காணலாம். (2)
|