1059.

     உன்னை உன்னிநெக் குருகிநின் றேத்த
          உள்ளம் என்வசம் உற்றதின் றேனும்
     என்னை ஆளுதல் உன்கடன் அன்றேல்
          இரக்கம் என்பதுன் னிடத்திலை அன்றோ
     முன்னை வல்வினை முடித்திடில் சிவனே
          மூட னேனுக்கு முன்னிற்ப தெவனோ
     அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே
          அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

உரை:

     அம்மையப்பனாகிய கடவுளே, ஒற்றியூர்க்கண் கோயில் கொண்டருளும் அருளரசே, தில்லையம்பலத்தில் நின்று கூத்தாடும் ஞானவமுதமே, உன்னை நினைந்து நெக்குருகி நேர்நின்று ஏத்தி வழிபட முற்பட்டால் மனம் என்வழி நிற்கின்றதில்லை; எனினும், எளியனாகிய என்னை ஆட்கொள்ளுதல் உனக்குக் கடனாகும்; கடனன்றென்னில், சிவனே, இரக்கமென்னும் பண்பு உன்னிடத்தில் இல்லை யென்பதாக முடியுமன்றோ? எனக்குத் தடையாக முன்னே நிற்பது முன்னே செய்துள்ள வல்வினை; அதனை யழித்துவிடில் மூடனாகிய எனக்குத் தடையென முன் நிற்பது யாதும் இல்லையாம். எ.று.

     ஒருபால் அம்மையின் கூறும் ஒருபால் அப்பனாகிய சிவனது கூறும் பொருந்திய திருமேனி யுடையனாதலின், சிவபெருமானை “அன்னை அப்பனே” என்று கூறுகின்றார். உன்னுதல் - ஊன்றி நினைத்தல். அன்பால் ஊன்றிச் சிவனை நினைந்த வழி, நினைக்கும் நெஞ்சம் நெகிழ்வுற்று உருகுமாதலின், “உன்னை யுன்னி நெக்குருகி” என்றும், உருக்கத்தின் ஆற்றல் உடலெங்கும் பரவுதற்கு நிற்றல் நன்றாதலால் “நின்று ஏத்த” என்றும், அந்நிலையில் நெஞ்சின் உள்ளுறையாகிய உள்ளம், உயிரின் உணர்வுவழி நிற்றல் இன்றியமையாதது; அஃது இன்மை தோன்ற, “உள்ளம் என் வசம் உற்றதின்று” என்றும் உரைக்கின்றார். உயிர்வழி நிற்றலொழிந்த உள்ளம், உடலுணர்வின் வழி நின்று உலமருதல் கண்டு, தனது மெலிவுநோக்கி ஆளுதல் சிவன் கடன் என நினைக்கின்றார்; ஆனால் அஃது உயிரறிவின் கடனாம்; “ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசராய் உளம் நிற்கும்” எனச் சிவஞான போதம் தெரிவிப்பதறிக. அதனை யெண்ணாமல், “என்னையாளுதல் உன்கடன் அன்றேல் இரக்கம் என்பது உன்னிடத்து இல்லையன்றோ” என்று இசைக்கின்றார். மேலும் இரக்கத்துக்குக் குறையில்லை; முன்னை நீ செய்த வினை வந்து தடை செய்கிறதெனப் பரமன் கூறுவதாக நினைந்து, முன்னை என்னாற் செய்யப்பட்ட வினை வலிதாயினும் நினக்கு ஆகாததன்றென்றும், அதனை அழித்தொழியின் என்னைத் தடுத்து இடர்படுத்துவ தொன்று மின்றாம் என்றும் கூறுவார். “முன்னை வல்வினை முடித்திடில் சிவனே மூடனேனுக்கு முன் நிற்பது எவனோ” என்று மொழிகின்றார். முடித்தல் - அழித்தல். வினையின் வன்மையும் அது தீரும் வாயிலும் அறிந்த நீ, அதனையேன் செய்தாயெனின், யான் மூடன் என்பார், “மூடனேன்” என்று கூறுகின்றார்.

     இதனால், இறைவன் திருமுன் வந்து நின்று ஏத்தியின்புறுதற்குத் தடையாக முன்னை வினையால் மனம் உயிரறிவு வழி நில்லாது உலமருகிறது என்பது காட்டப்படுகிறது.

     (3)