106. பெருங் களப மூலை மடவார் என்றும் பொல்லாப்
பேய்க் கோட்பட் டாடுகின்ற பித்தனேனுக்
கிரும்புலவர்க் கரியதிரு வருளீ வாயேல்
என்சொலா ரடியரதற் கெந்தா யெந்தாய்
கரும்பினிழிந் தொழுகு மருட் சுவையே முக்கண்
கனிகனிந்த தேனே யென்கண்ணே ஞானம்
தரும் புனிதர் புகழ் தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: உண்மை ஞானம் அறிவுறுத்தும் தூயவர்கள் புகழ்ந்து பரவும் தணிகை மணியே, சீவ சாட்சியாய் நிறைந்து விளங்கும் சகச வாழ்வே, கரும்பிலிருந்து ஒழுகும் அருட் சுவை மிக்க சாறு போல் அண்ணிப்பவனே, மூன்று கண்களையுடைய சிவமாகிய மரத்திற் பழுத்த கனியும், அக்கனியிடத்து நிறைந் தொழுகும் தேனுமானவனே, என் கண்ணே, களப மணித்த பெரிய முலைகளையுடைய மகளிர் என்கின்ற பொல்லாத பேய்களாற் கொள்ளப்பட்டு அறிவு திரிந்து ஆடுகின்ற பித்தனாகிய எனக்குப் பேரறிஞர்க்கும் பெறற்கரிய சிவஞானத்தை நல்குவாயாயின், அது குறித்து நினக்கு அடியராயினார் எத்துணையும் உயர்ந்த புகழை எடுத்துச் சொல்வார்களல்லவா? எந்தாய், இதனை நினைந்தருள்க, எ. று.
எல்லோரும் இருளின் நீங்கி இன்பம் பெற வேண்டுபவராதலால் மனம் தூயராய பெருமக்கள் தணிகை போந்து முருகனை வணங்கிக் காணப்படுபவர்க்கு உன்னைப் புகழ்ந்து திருவருள் ஞானத்தை வழங்குகின்றன ரென்பார், “ஞானம் தரும் புனிதர் புகழ் தணிகை மணியே” என்று புகழ்கின்றார். சிவபெருமானை உயர்ந்த மரமாகக் குறித்துப் பரவுதலால் சிவன்பால் தோன்றிய அருமை விளங்க “முக்கண் கனி கனிந்த தேனே” என்று சிறப்பிக்கின்றார். அருள் ஞானத் திருமேனியனாதலால், “கரும்பின் இழிந் தொழுகும் அருட்சுவையே” எனக் கூறுகிறார். கரும்பை ஆலையிலிடச் சொரியும் சாறு போலாது சிவன்பால் தானே நிறைந்தொழுகும் அருள் வடிவினனாதல் தோன்றக் “கரும்பின் இழிந்தொழுகும் அருட்சுவையே” என்கின்றார். களபம் - சுண்ணப்பொடி. களபப் பெருமுலை எனற் பாலது, பெருங் களபமுலை, என மாறிற்று. இயற்கை யெழிலாலும் செயற்கை வனப்பாலும் இளமைக்கண் இன்பமும் பணிவுமுடைய பெண்ணாய்த் தோன்றி முதுமைக் கண் பேயாய் மாறி ஆண் மக்களை அலைத்து வருத்துவது பற்றி, “மடவா ரென்னும் பொல்லாப் பேய்” என்றும், அவர் தொடர்பால் உளதாகும் காம மயக்குற்றவர் அவரையே நினைந்து திரிவதால் “பேய்க் கோட்பட்டு ஆடுகின்ற பித்தனேன்” என்றும் பேசுகின்றார். இரும்புலவர்-பெரிய அறிஞர்கள்; நூலறிவு மிக்கவர் என்றற்குப் “புலவர்” எனக் குறிக்கின்றார். நூலறிவு மிக்கும் திருவருள் ஞானச் செந்நெறி சேராதார் உளராதலின், “இரும்புலவர்க்கரிய திருவருள்” எனவும், அத் திருவருள் ஞானத்தைக் காமப் பித்தர்க்கு நல்குவ தில்லையாதலின் எளியனாகிய எனக்கு அருளினால் மெய்யடியார் கொள்ளார் என நினைந்தருள வேண்டா; “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற உள்ளத்தவராதலால் எத்துணையும் உயர்வாகவே நின்னைப் புகழ்வர் என்பாராய், “என்சொலார் அடியர்” எனவும் இயம்புகின்றார். என் சொலார் - என்னும் சொல்லார் என உம்மை விரித்துச் சிறிதும் குறை கூறார் என வுரைக்க
இதனால் காமப் பித்தனாயினும் எனக்குத் திருவருள் நல்கினால் நினக்கு அடியராயினார் சிறிதும் குறை கூறார் என உரைக்குமாறு காண்க. (4)
|