1060. என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா
தேகு கின்றதிவ் ஏழையேன் மனந்தான்
உன்ன தின்னருள் ஒருசிறி துண்டேல்
ஒடுக்கி நிற்பனால் உண்மைமற் றின்றேல்
இன்ன தென்றறி யாமல இருளில்
இடர்கொள் வேன்அன்றி என்செய்வேன் சிவனே
அன்ன துன்செயல் ஒற்றியூர் அரசே
அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
உரை: திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் அருளரசே, தில்லையம்பலத்தின்கண் நின்று ஆடல் புரிந்தின்புறுத்தும் ஞானவமுதே, எத்தகைய சுடுசொற் சொல்லி நிறுத்தினும், இந்த ஏழையேனாகிய என் மனம், நிற்றலின்றிப் பொறிவழி யோடுகின்றது; உன்னுடைய திருவருள் சிறிது எனக்கு எய்துமாயின், இம்மனத்தை ஒடுக்கி நின் வழி நிறுத்தி நிற்பேன்; இது உண்மை; திருவருள் துணையில்லையாயின், இத்தன்மையதென வுணரவாராத மலவிருளில் வீழ்ந்து துன்புறுவதன்றி வேறே யான், சிவனே, யாது செய்வேன்; இனி அஃது உன் செயல். எ.று.
ஞானம் தந்து இன்பம் செய்தலின் “அமுதே” என்கின்றார். “ஒட்டிய உறுப்புடையது போல், மறுத்துரைப்பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும்” (பொ. பொரு. 2) எனத் தொல்காப்பியம் கூறுதலால் நெஞ்சினை வேறுபட வைத்து மொழிகின்றார். நெஞ்சினை முன்னிறுத்தி “மனமெனுமோர் பேய்க்குரங்கு மடப்பயலே” (v. தான் பெற்ற பேறு : 2) என்பது போலும் சுடுசொற்களைச் சொல்லி நிறுத்திய குறிப்பை, “என்ன நான் சொலி நிறுத்தினும்” என்றும், நில்லாமல் பொறிவழியோடி உலகியற் பொருளின்பங்களில் தோய்வது கண்டு, “நில்லாது ஏகுகின்றது இவ் வேழையேன் மனம்தான்” என்றும் சொல்லுகின்றார். தன்னை மதியாமைக்கு ஏது கூறுவார். “இவ்வேழையேன்” என்று கூறுகின்றார். இறைவன் திருவருளிலும் ஆற்றலுடையது பிறிதின்மை புலப்படுத்தற்கு, “உன்ன தின்னருள் ஒருசிறிது உண்டேல் ஒடுக்கி நிற்பனால்” என்றும், தனது சொல்லின் உறுதி வற்புறுத்தற்கு உண்மை” என்றும் இயம்புகின்றார். மலவிருள் இத் தன்மைத்தென விளங்காமையின், “இன்ன தென்றறியா மலவிருள்” என்றும், திருவருள் ஒளிமயமாதலின், அஃது இல்வழி மலவிருள் படர்ந்து அறியாமை சூழ்ந்து துன்புறுவேன் என்பார், “மலவிருளில் இடர் கொள்வேன்” என்றும், வேறு செயல் தமக்கு இல்லாமை இனிது விளங்க, “என் செய்வேன் சிவனே” என்றும் உரைக்கின்றார்.
இதன்கண், திருவருள் துணையின்றேல் மலவிருளிற் கிடந்து உயிர் துன்புறுமென்பது காட்டப்படுகிறது. (4)
|