1061.

     பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப்
          பாவை யார்மயல் படிந்துழப் பதனால்
     சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும்
          செய்கை நின்னதே செப்பலென் சிவனே
     காவி நேர்விழி மலைமகள் காணக்
          கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள்
     ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே
          அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

உரை:

     காவி மலர் போன்ற கண்களையுடைய பார்வதி தேவி காணக் கடலிடத் தெழிந்த நஞ்சையுண்டு திருமால் முதலிய தேவர்கட்கு உயிர் கொடுத்தருளிய திருவொற்றியூரில் எழுந்தருளும் எமது இறைவனே, தில்லையம்பலத்தில் நின்று திருக்கூத்தாடும் ஞானவமுதே, பாவியாகிய நெஞ்சம் என்னிடத்தே இல்லாமல் பொறி வழியோடிப் பாவைபோலும் மகளிர் மயக்கமாகிய சேற்றிற் படிந்து வருந்துமாற்றால் நின்னைக் கண்டு பரவாத எனது குற்றத்தைப் பொறுத்தருளும் செய்கை நின்னதாகும்; சிவனே, அதனை நான் சொல்வது பயனில் கூற்றாம். எ.று.

     பாவத்தையுடையது பாவி; நெஞ்சம் பாவமுடைய தென்றற்குப் “பாவி நெஞ்சம்” எனக் கூறுகின்றார். “என்பாவி நெஞ்சிற் குடி கொண்டவா தில்லையம்பலக் கூத்தன் குரைகழலே” (கோயில்) என்று நாவுக்கரசர் நவில்வது காண்க. என் வசம் நிற்றற்குரிய நெஞ்சம் என்பால் நில்லாது மகளிர்பாற் சென்று அவரது காமமயக்கமாகிய சேற்றிற் புதையுண்டு வருந்துகிறதென்பார், “என்பால் இராது ஓடிப் பாவையார் மயல் படிந்து உழப்பதனால்” என்றும், அதனால் விளைந்த பாவம் இதுவென்பார், சிவனைச் சேவியாமையாகிய பிழை என்றும், அதனைப் பொறுத்தருளல் நினக்குரியது என்பார், “சேவியாத என் பிழை பொறுத்தாளும் செய்கை நின்னது” என்றும், அதனை நின் திருமுன் ஓதுவது வேண்டா கூறல் என்றற்குச் “செப்பல் என் சிவனே” என்றும் இயம்புகின்றார். காவி- கருங்குவளை; நீலமலருமாம். உலகருளன்னையாதலாலும், சிவபரம்பொருட்கு அந்நஞ்சு தீங்குசெய்ய மாட்டாதென்பதை இனிதறிவாளாதலினாலும் “மலைமகள் காணக் கடலின் நஞ்சுண்டு” என்றும், அதனால் கடலருகே இருந்த தேவர் உயிர் உய்ந்தமையின், “கண்ணன் ஆதியர்கள் ஆவி ஈந்தருள் எம் இறை” என்றும் இசைக்கின்றார். ஆதியர்கள் என்பதன் இறுதியில் குவ்வுருவு செய்யுளாதலின் தொக்கது. ஒற்றியூர்க்கண் கோயில் கொண்டிருப்பதுபற்றி, “ஒற்றியெம் இறையே” என்கின்றார்.

     இதன்கண், தன்னோடிருந்து தக்கது செயற்குத் துணையாக வேண்டிய நெஞ்சம் மகளிர் மயக்கில் வீழ்ந்து சிவனைச் சேவியாதது பிழையென்றும், அதனைப் பொறுத்தருளுவது சிவன் செயலென்றும் நினைவுறுத்தியவாறு காணலாம்.

     (5)