1062.

     மூட நெஞ்சம்என் மொழிவது நில்லா
          மோக வாரியின் முழுகுகின் றதுகாண்
     தேட என்வசம் அன்றது சிவனே
          திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல்
     நாட நாடிய நலம்பெறும் அதனால்
          நானும் உய்குவேன் நல்கிடம் வேண்டும்
     ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர்
          அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

உரை:

     உலகியலனுபவத்துக்கமைந்த ஒற்றியூரை யுடையவனே, பெரும்பற்றப் புலியூரிடத்துப் பொன்னம்பலத்தில் நின்று ஆடல் புரியும் ஞானவமிர்தமே, அறியாமை யிருளால் மூடப்பட்ட என் நெஞ்சம் என் சொற்படி நில்லாமல் மோகமாகிய கடலில் இருப்பு விளங்காதவாறு மூழ்கி மறைகின்றது; தேடிப்பற்ற அஃது என் வசப்படுகிறதில்லை; சிவனே, நின்னுடைய திருவருட்கடலில் சிறு துளி யொன்று எனக்கு எய்துமாயின், உலகமெல்லாம் கண்டு நாடுமாறு யான் நாடுகின்ற நலத்தை என் நெஞ்சம் பெறும்; அதனால் நானும் உய்தி பெறுவேன்; ஆகவே, உனதருளில் ஒரு சிறிது நல்குக. எ.று.

     ஆடல் - அனுபவத்துக் கமைந்தவிடம்; இவ்வாறு நாலாயிரப் பிரபந்தத்துக் குரைகண்ட பெரியோர்கள் பொருளுரைக்கின்றார்கள். பெரும்பற்றப் புலியூர் - தில்லைப் பெருங்கோயிலில் பொன்னம்பலத்துக்கு வேறாகச் சிவலிங்க மூர்த்தமுள்ள திருக்கோயில்; அதனைப் பெரும்பற்றப் புலியூர் என இந்நாளையோர் வழங்குவர்; முன்னாளில் அதனைப் பெரும்பற்றப் புலியூர் என்றனர். சிவன் கோயில் எல்லாவற்றிலும் சிவலிங்கம் இருக்கும் திருமூலத்தானமே சிறப்பிடமாதலின், வள்ளற்பெருமான், பெரும்பற்றப் புலியூர் அம்பலம் என்று விளங்கவுரைக்கின்றார். அறியாமை இருள் சூழ்ந்திருக்கின்றமை யுணர்த்த மூட நெஞ்சம் என்றும், அதனால் சேதனப் பொருளாகிய உயிர் வழிநில்லாது ஓடுகிறதென்பது தோன்ற, “என் மொழிவழி நில்லாது” என்றும் இயம்புகின்றார். நில்லாது பெயரும் அந்நெஞ்சு சென்று நிற்குமிடம் இதுவென்பாராய், “மோக வாரியில் முழுகுகின்றது காண்” என மொழிகின்றார். மோக வாரி - மோகக் கடல்; அஃது ஈண்டுக் காம மோகத்தின் மேற்று. மோகம் - மயக்கம். மோகக் கடலில் மூழ்கிப் பிறர் காண்பரிதாய், அதனையுடைய என்னாலும் தேடிப் பிடித்தற் கரிதாயுளது என்பார், “சிவனே, அது தேட என்வசம் அன்று” என்று சிவன்பால் முறையிடுகின்றார். சிவனது திருவருள் சிறிது கிடைப்பின் நெஞ்சினை என்வசம் நிறுத்தவும், ஞான நாட்டம் பெற்று நலம் உறவும் இயலும் என்பாராய் “திருவருட் கடல் திவலையொன்று உறுமேல் நாட நாடிய நலம் பெறும்” என்றும், நலத்தால் யான் சிவபோகப் பேறு பெறுவேன் என்றற்கு, “நான் உய்குவேன்” என்றும் தெரிவித்து, அத் திருவருளை யளித்திடல் வேண்டும் என்பாராய், “நல்கிடல் வேண்டும்” என்றும் விண்ணப்பிக்கின்றார். அருள் சிறிது அளித்தலால் கேடில்லை என்பது புலப்படத் “திருவருட் கடல்” என்கிறார்.

     இதன்கண், அறியாமையால் மூடமாகிய நெஞ்சம் மோகக் கடலில் மூழ்கி விட்டமை கூறி, திருவருள் ஞானம் நல்க வேண்டும் என முறையிடுமாறு காணலாம்.

     (6)