1063.

     கலங்கு கின்றஎன் கண்உன தருள்ஓர்
          கடுகின் எல்லைதான் கலந்திடு மானால்
     விலங்கு கின்றஎன் நெஞ்சம்நின் றிடுமால்
          வேறு நான்பெறும் வேட்கையும் இன்றால்
     மலங்கு கின்றதை மாற்றுவன் உனது
          மலர்ப்பொன் தாளலால் மற்றிலன் சிவனே
     அலங்கு கின்றசீர் ஒற்றியூர் இறையே
          அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

உரை:

     ஒளிர்கின்ற சிறப்பையுடைய திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் இறைவனே, பொன்னம்பலத்தில் நின்று ஆடல் புரிகின்ற ஞானமுதமே, வாழ்க்கை தரும் துன்பங்களால் நிலைகலங்கும் எளியேன்பால் உனது திருவருளில் ஒரு கடுகளவு வந்து கலந்திடுமாயின், குறுக்கிற் பாய்ந்தோடும் எனது நெஞ்சம் என் வழியே நிற்கும்; வேறு நான் பெற விரும்பும் பொருளும் இல்லையாம்; மனம் கலங்கும் நிலையை மாற்றற்குச் சிவனே, உன்னுடைய மலர்போலும் அழகிய திருவடியன்றி வேறு எதனையும் பொருளாகக் கொள்வதில்லேன். எ,று.

     அலங்குதல் - ஒளி செய்தல்; சீர் - புகழ்; அது நிலவுபோல் ஒளிருமென்பது கவிமரபு. வாழ்க்கையில தோன்றும் பலவகை இன்னல்களால் மனநிலை கலங்கி மாழ்குவது மக்கள் இயல்பாதலின், “கலங்குகின்ற என் கண்” என்றும், எத்துணைப் பெரிதாயினும் மக்கள் எய்தும் துன்பமும் துயரும் இறைவன் திருவருள் சிறிது எய்தினும், ஞாயிற்றின்முன் பனித்துளியென மறைந்து போம் என்று அறிஞர் உரைப்பதுபற்றி “உனது அருள் ஓர் கடுகின் எல்லைதான் கலந்திடுமானால்” என்றும், நேர் நில்லாது குறுக்கிற் பாய்ந்து துன்பம் செய்து சுழன்றோடும் நெஞ்சம் என்வசம் நின்று செந்நெறியில் இயங்கி இன்பம் உறுவிக்கும் என்பாராய், “விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால்” என்றும் இசைக்கின்றார். ஈதொழிய அறிவுடைய உயிர் பெறவிரும்புவது வேறு யாதுமின்மையின், “வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால்” என்று கூறுகின்றார். வேட்கை - விரும்புவது . மனம் ஒன்றி நிற்றற்குத் தடையாவது கலக்கம் செய்யும் மலங்கு துயர்; மனம் ஒரு வழி நிற்கின் மலங்குதலொழியுமாதலால், “மலங்குகின்றதை மாற்றுவன்” எனவும், மீள மலங்காவாறு பாதுகாத்தற்குச் சிவபெருமான் திருவடி நினைவு சீர்த்த துணையாதலால், “மலர்ப் பொன் தாளலால் மற்றிலன் சிவனே” எனவும் இயம்புகின்றார்.

     இதன்கண், மலங்குதலின்றி மனம் ஒரு வழி நிற்றற்குச் சிவன் திருவடி நினைவு இன்றியமையா தென்பது வற்புறுத்தவாறு.

     (7)