1064.

     மறைவ தென்னையும் மறைப்பது பொல்லா
          வஞ்ச நெஞ்சமென் வசப்படல் இலைகாண்
     இறைவ நின்னருட் கென்செய்வோம் எனவே
          எண்ணி எண்ணிநான் ஏங்குகின்றனனால்
     உறைவ துன்னடி மலர்அன்றி மற்றொன்
          றுணர்த்தி லேன்இஃ துண்மைநீ அறிதி
     அறைவ தென்னநான் ஒற்றியூர் அரசே
          அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

உரை:

     திருவொற்றியூர்க்கண் எழுந்தருளும் அருளரசே, தில்லையம்பலத்தில் யாவரும் காண நின்று ஆடல் புரியும் ஞானவமுதமே, என்னில் மறைவதும் என்னை மறைப்பதுமாகிய பொல்லாத வஞ்சம் புரியும் நெஞ்சம் என் வழிப்படுவது இல்லை; இறைவனே, நின்னுடைய திருவருளைப் பெறுதற்கு என்ன செய்யலாம் என்று பன்முறையும் எண்ணி யெண்ணி நான் ஏங்குகின்றேன்; அடைந்து தங்குதற்குரியது உன்னுடைய திருவடித் தாமரையல்லது வேறு ஒன்றும் உணர்ந்தேனில்லை; இஃது உண்மையென்று நீ நன்கறிவாய்; இனி நான் உரைத்தற்கு யாது உளது? எ.று.

     ஆன்ம சிற்சத்திக்கு அடங்கி அதன்வழி நிற்குங்கால் மனம் இருக்குமிடம் புலப்படாது மறைந்தொடுங்குதல் பற்றி, “மறைவதும்”, மறையாது பொறிபுலன் வழியினின்று ஆன்ம வறிவை “மறைப்பதும்” செய்தலின் “பொல்லா வஞ்ச நெஞ்சமே” என்று மொழிகின்றார். நலந் தீங்குகளை உள்ளவாறு உணராவாறு ஆன்மவறிவை வஞ்சித்தலால் “பொல்லா வஞ்ச நெஞ்சம்” என்பது பொருத்தமாகிறது. நெஞ்சை நெறிக்கண் நிறுத்தற்கு எத்துணை முயலினும் அறிவு இளைத்தொடுங்குதல் உண்மையால் “நெஞ்சம் என் வசப்படல் இல்லை காண்” என்று உரைக்கின்றார். நெஞ்சினை நிறுத்தியாளுதற்குரிய அறிவாற்றல் பெறுதற்கு ஆன்ம சிற்சக்தியை எண்ணி யெண்ணி இளைப்பதை வள்ளலார் உணர்கின்றாராதலின், “நின் அருட்கு என் செய்வோம் இறைவ, என எண்ணி யெண்ணி நான் ஏங்குகின்றனன்” என்று இயம்புகின்றார். உலகின்கண் உறையுங்காறும் உலகியற் பொருளின்ப நுகர்ச்சிகளில் தோயுங்காறும் மனம் என் வழி நில்லாது; நின் திருவடி மலர்க்கீழ் உறைய லுற்றாலன்றி மனம் அடங்கும் நிலை வேறில்லை என வுணர்ந்து கொண்டேன்; இது பொய்யன்று என்பாராய், “உறைவது உன் அடிமலர் அன்றி மற்றொன்றுணர்ந்திலேன்; இஃது உண்மை; நீ அறிதி” என்றும், வேறு நான் உரைத்தற்கில்லை யென்றற்கு “அறைவது என்னை நான்” என்றும் இயம்புகின்றார்.

     இதன்கண், மனத்தை ஆன்ம வழிப்படுத்தி நற்பேறு எய்துதற்கு இறைவன் திருவடி மலர்க்கீழ் உறைவதல்லது வேறில்லை யென்பது உணர்த்தியவாறு.

     (8)