1065.

     ஒருக ணப்பொழு தேனுநின் அடியை
          உள்கி டாதுளம் ஓடுகின் றதனால்
     திருக ணப்பெறும் தீயனேன் செய்யும்
          திறம்அ றிந்திலேன் செப்பலென் சிவனே
     வருக ணத்துடல் நிற்குமோ விழுமோ
          மாயு மோஎன மயங்குவேன் தன்னை
     அருக ணைத்தருள் ஒற்றியூர் இறையே
          அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

உரை:

     ஒற்றியூர்க்கண் எழுந்தருளும் இறைவனே, தில்லையம்பலத்தில் “அண்டமுற நின்று” ஆடல் புரிகின்ற அருளமுதமே, ஒரு கணப்பொழுதாயினும் நினது திருவடியை நினைப்பதின்றி எனது உள்ளம் பொறிகளினூடே ஓடிய வண்ணமிருப்பதால் குற்றங்கள் சேரப் பெறுகின்ற தீயனாகிய யான் சிவனுக்கு ஆகும் நற்பணிகளைச் செய்யும் கூறுபாடு அறிந்திலேன்; சிவனே, யான் வேறு செப்புவது என்னை? நிலையா இயல்பினதாலின் வருகணத்திலேயே எனது உடல் நிற்குமோ, நில்லாமல் வீழ்ந்து மாயுமோ என மயங்கி வருந்தும் என்னை, உனது அருகே அணைத்து அருள் புரிக. எ.று.

     கணம் - இமை, நொடி, மாத்திரை என்பனபோலும் காலவளவு. இது வடநூல் வழக்கு. பொறிகளும் அவை யிடமாக நின்று உலகியற் காட்சிகளில் ஆசை யுறுவித்து ஈர்க்கும் புலன்களும் பலவாய் உயிரைப் பிணித்து அலமருவித்தலின், இறைவன் திருவடிக்கண் ஒன்றி நில்லாமை பற்றி, “ஒருகணப் பொழுதேனும் நின்னடியை உள்கிடாது உளம் ஓடுகின்றது” என்றும், அதனால் ஆசை பெருகித் துன்பத்துக் கேதுவாகிய குற்றங்கள் மிகுவது கண்டு, “அதனால் திருகு அணப்பெறும்” என்றும், அதுபற்றித் தம்மைத் “தீயனேன்” என்றும் சொல்லுகின்றார். திருகு அணப்பெறுதல் - குற்றங்கள் சேர்தல். தீயதை விடுத்துச் சிவம் பெருக்கும் திருத்தொண்டு புரிதற்கு நெறிமுறை தெரியாமை புலப்படுத்துவாராய், “செய்யும் திறம் அறிந்திலேன்” என்றும், மாட்டாமையை வெறிதே யுரைத்தலாற் பயனின்மை காண்டலின், “செப்பல் என் சிவனே” என்றும் உரைக்கின்றார். சிவம் பெருக்கும் நற்றொண்டு புரியாமையின், யாக்கை நிலையாமை தோன்றி வருத்துமாறு விளங்க “வருகணத்து உடல் நிற்குமோ, விழுமோ மாயுமோ என மயங்குகின்றேன்” என்றும், தெளிவு எய்தும்பொருட்டு அருகில் அணைத்துத் திருவருள் ஒளியில் இருத்தி மகிழ்வித்தல் வேண்டும் என்றற்கு “அருகணைத்தருள்” என்றும் இசைக்கின்றார்.

     இதன்கண், சிவத்தொண்டு புரியேனாயினும் யாக்கை நிலையாமையுணர்ந்து மயங்குமாறு தெரிவித்துத் தன்னை அருகணைத்து அருளொளியில் நிறுத்துகவென்று முறையிடுமாறு காணலாம்.

     (9)