1066.

     யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ
          என்வ சப்படா திருத்தலை உரைத்தேன்
     தீது செய்யினும் பொறுத்தெனைச் சிவனே
          தீய வல்வினை சேர்ந்திடா வண்ணம்
     பாது காப்பதுன் பரம்இன்றேல் பலவாய்ப்
          பகர்தல் என்னகாண் பழிவரும் உனக்கே
     ஆது காண்டிஎம் ஒற்றியூர் அரசே
          அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.

உரை:

     திருவொற்றியூரில் எழுந்தருளும் எம் அருளரசே, அம்பலத்தில் நின்று ஆடல் புரியும் ஞானவமுதமே, நின் திருவுள்ளக் கருத்து யாதோ அதனை யான் அறியேன்; மனமும் என்வழி நில்லா தோடுதலைப் பலமுறை எடுத்துரைத்தேன்; சிவபெருமானே, தீது செய்தாலும்என்னைப் பொறுத்தருளி, தீமை பயக்கும் வலிய வினைகள் என்னைச் சேராவண்ணம் என்னைப் பாதுகாப்பது உனக்குக் கடனாகும்; இல்லையாயின், பல சொல்லுவானேன், உனக்குத்தான் பழி உண்டாகும்; அதனை நீயே காண்பாய். எ.று.

     மக்களினத்திற் கூடி யுரையாடி வாழும்போதே ஒருவர் உள்ளக் கருத்தை ஒருவர் உணர்வது இயலுவதில்லையாக, இறைவன் திருவுள்ளத்தை அறிவதென்பது முற்றிலும் இயலாத செயல் என்பார், “யாது நின்கருத்து அறிந்திலேன்” என்றும், கருத்தறியாமைக்கு ஏது மனம் தன்னை யுடையோன் உணர்வுவழி நில்லாமை என்பார், “மனமோ என் வசப்படாதிருத்தலை யுரைத்தேன்” என்றும் இயம்புகின்றார். அடங்காமையும் ஒருவழி நில்லாமையுமுடைய மனத்தோடு கூடி ஏனைக் கருவிகளைக் கொண்டு செய்வது தீதாய் முடிதலின், நீதான் பொறுத்தருளல் வேண்டும் என்பாராய், “தீய செய்யினும் பொறுத்து” என்றும், இக்கரணங்களையும் கருவிகளையும் கொண்டு வினைகளனைத்தும் செய்யப்படுகின்றன; மேலும், அவை வினையாகிய தம்மால் விளையும் பயனைத் தம்மைச் செய்தவன் நுகர்ந்து கழிக்குமளவும் அவனை விடாது பிணிக்கும் வன்மையும், பிறவி மாறினும் விடாது தொடரும் தீச் செய்கையுமுடைமை பற்றித் “தீய வல்வினை” என்றும், வினைப்பயனைச் செய்தவனோடு சேர்த்தலும் சேர்க்காமையும் வல்லவன் சிவபெருமானாதலின், “சேர்ந்திடா வண்ணம் பாதுகாப்பது உன் பரம்” என்றும் உரைக்கின்றார். “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு” (குறள்) என்று திருவள்ளுவர் கூறுவதனால் இதனை அறிக. ஒருமுறை கூறினும் பன்முறை கூறினும் பொருளும்பயனும் ஒன்றேயாதலால், “பலவாய் பகர்தல் என்னை காண்” எனவும், காப்பவன் காவாவழிப் பழியுண்டாம் என்னும் உலகியல் முறைமை கொண்டு “பழிவரும் உனக்கே” எனவும் பகர்கின்றார். அது என்னும் சுட்டு விகாரத்தால் நீண்டது.

     இதனால், செய்வினை தீண்டாவாறு பொறுத்துப் பாதுகாத்தல் வேண்டும் என்று முறையிடுமாறு அறிக.

     (10)