45. வழிமொழி விண்ணப்பம்

திருவொற்றியூரும் திருத்தில்லையும்

    அஃதாவது முன்னையோர் கருத்துக்களை எடுத்தோதித் தம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டுவதாகும். வழி மொழியென்பது வழித் தொண்டர் மொழியெனவும் பொருள்கொள நிற்றலால், இதன்கண் தம்மை வழிவழி வரும் தொண்டர் இனத்திற் சேர்த்தருளி, அவர் போல் தொண்டு புரியவும், அவர்க்குள்ள திண்மை எய்தவும் அருளுமாறு வேண்டுகின்றார். பின்பு, சரண் புகுந்தாரைக் காவாமல் மறுத்தொதுக்குதல் முறையன்று; புகலடைந்தார் பொருட்டு நஞ்சுண்டருளிய இறைவனது தன்மை மாறுவதாயின் உலகனைத்தும் அழிந்துபடும். என் போன்றார்பால் இரக்கமின்மை இயல்பு; இரக்கமே யுருவாய் நஞ்சுண்ட நின் கருணையை எங்கட்குக் காட்டி யருளுதல் வேண்டும். கணந்தோறும் வாழ்நாள் கழிகிறதேயன்றி எங்கள்பால் பொய்ம்மை முதலிய குற்றங்கள் நீங்குவதில்லை; இக்குற்றங்கள் காரணமாக என்னை எத்துணைக் காலம் வருந்தச் செய்யினும் முடிவில் காப்பது இறைவன் பாரம்; காலன் வரின் என் நிலைமை என்னாம் என்று அஞ்சுகின்றேன்; அறிவிற் சிறியவனாதலால் என் பிழையைத் திருவுள்ளத்திற் கொள்ளல் முறையாகாது; எனது இவ்விண்ணப்பம் மயங்கு மொழியு மன்று; வஞ்சனையுமன்று; எனக்கு அருள் செய்க என்று வடலூர் வள்ளல் முறையிடுகின்றார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1067.

     நீல னேன்கொடும் பொய்யல துரையா
          நீசன் என்பதென் நெஞ்சறிந் ததுகாண்
     சால ஆயினும் நின்கழல் அடிக்கே
          சரண்பு குந்திடில் தள்ளுதல் வழக்கோ
     ஆலம் உண்டநின் தன்மைமா றுவதேல்
          அகில கோடியும் அழிந்திடும் அன்றே
     சீல மேவிய ஒற்றியம் பரனே
          தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.

உரை:

     நல்லொழுக்கம் நிலவும் ஒற்றியூரில் எழுந்தருளும் பரமசிவனே, தில்லையம்பலத்தில் விளங்குகின்ற ஒளி விளக்கே, யான்அரக்கப் பண்புடையவனும் பொய்யன்றி வேறு பேசாத நீசனும் ஆவேன் என்பது என்னுடைய நெஞ்சம் மிகவுமறிந்த செய்தி யாயினும் நின்னுடைய கழலணிந்த திருவடிக்கண் புகலடையின் ஏலாது, புறத்தே செல்ல விலக்குவது நினக்கு முறையாகாது; பிறர் உய்யும் பொருட்டு விடமுண்டருளிய நின் தன்மை மாறுவதாயின் அப்பொழுதே அகில கோடியண்டங்களும் அழிந்து போமன்றோ? எ.று.

     நீலன் - கருநிறங் கொண்ட அரக்கன். பொய்யே யுரைக்கும் செயலால் கீழ்மையுற்றவன் என்றற்குப் “பொய்யலது உரையா நீசன்” என்றும், என் பொய்மையைப் புறத்தே பிறர் அறியராயினும் எனது நெஞ்சம் நன்கறிந்தது என்பார், “என் நெஞ்சம் சால அறிந்தது காண்” என்றும் கூறுகின்றார். பொய் யொழுக்கினனாயினும் நின்னுடைய திருவடியல்லது என்னுயிர்க்குப் புகலிடம் வேறில்லை என்பதறிந்து வந்துள்ளேன்; என்னை மறுத்துப் புறம்போக விடுவது முறையாகாது என்பாராய், “நின் கழலடிக்கே சரண் புகுந்திடில் தள்ளுதல் வழக்கோ” என்று புகல்கின்றார். உலகனைத்தும் உய்தல் வேண்டுமென்று கடல் விடத்தை யுண்டது சிவனது தனிப் பேரருட் பண்பாதல் விளங்க, “ஆலமுண்ட நின் தன்மை” என்று சிறப்பிக்கின்றார். இந்த அருட் சிறப்பைத் திருஞான சம்பந்தர், “இறையே கருணையாய் உண்பரிய நஞ்சுதனை உண்டுலக முய்யவரும் உத்தமன்” (மாணி குழி) என்று புகழ்கின்றார். நினது தனிப்பெருங் கருணை மாறுமாயின், மாறும் அக்கணத்தேயே இவ்வுலகமே யன்றி அண்ட கோடிகள் அனைத்தும் கெட்டழிவது ஒருதலை என்றற்கு “நின் தன்மை மாறுவதேல் அன்றே அகில கோடியும் அழிந்திடும்” என்று அறிவிக்கின்றார். சீலம் - ஒழுக்கம். தில்லைப் பதியிலுள்ள திருக்கோயிலின்கண் அமைந்த அம்பலம் என்று தெரியக் காட்டல் வேண்டித் “தில்லையம்பலம்” என்றும்; ஞானவொளி விளங்க அம்பலத்திற் காட்சி வழங்குவதுபற்றி “திகழொளி விளக்கே” என்றும் உரைக்கின்றார்.

     இதனால், மனமறியப் பொய்யுரைக்கும் தீய செயலினை யுடையனென்றுணர்ந்து சரண் புகுந்தேனாதலால், என்னைப் புறக்கணித்தல் நின் பண்புக் கொவ்வா தென விண்ணப்பித்த வாறாம்.

     (1)