1068. கண்ணுண் மாமணி யேஅருட் கரும்பே
கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே
எண்ணுள் உட்படா இன்பமே என்றென்
றெந்தை நின்றனை ஏத்திலன் எனினும்
மண்ணுள் மற்றியான் வழிவழி அடியேன்
மாய மன்றிதுன் மனம்அறிந் ததுவே
திண்ணம் ஈந்தருள் ஒற்றியூர் அரசே
தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
உரை: ஒற்றியூர் அருளரசே, தில்லையம்பலத்தில் திகழும் ஞானவொளியுடைய விளக்கமே! கண்ணுள் இருக்கும் மணி போல்பவனே, அருட்சுவை நிறைந்த கரும்பானவனே, ஞானநூற் கல்வியாற் செம்மையுற்ற நெஞ்சம் உருகுவிக்கும் கனியே, எண்ணற் காகாத இன்பமே என்று பன்முறையும் எந்தையாகிய நின்னை ஏத்துவது இல்லேன் என்றாலும், மண்ணுலகில் யான் வழிவழியாக அடிமைபூண்ட அடியனாவேன்; யான் உரைக்குமிது பொய்யன்றென்பது உன் திருவுள்ளம் அறிந்த ஒன்றாதலின், என் அறிவுக்குத் திண்மை தந்தருள்க. எ.று.
கண்ணிற் கருவிழிக்குள் காணப்படும் பாவை கண்ணுண் மணியாகும்; சிறந்த வுறுப்பாகிய கண்ணுக்குச் சிறப்புத் தருவது மணியாதலின், அதனையொத்து அறிவுக்கு ஞானக் காட்சி நல்குவதால் “கண்ணுள் மாமணியே” என்று சிறப்பிக்கின்றார். பிழிந்த வழி அண்ணிக்கும் உலகியற் கரும்பு போலாது நினைந்த வழி நினைவின்கண் அண்ணிப்பது பற்றி “அருட் கரும்பே” என்று புகழ்கின்றார். உலகியற் கல்வி போலாது ஞானநூற் கல்வி மனமாசு போக்கி மென்மை யுறுவித்துச் சிவத்தை நினைந்தவழி விரைந்து உருகி நன்கு பழுத்த கனிபோல் இலகுவித்தலின், “கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே” என்றும், இன்பச் சுவை நுகர்ச்சிக்கு இடமாயினும், சிவம் பயக்கும் இன்பம் எண்ணத்தின் அகப்புற எல்லைக்கப்பால் மிக்குநிற்பது பற்றி, “எண்ணுள் உட்படா இன்பமே” என்றும் ஏத்துதல் குறிக்கின்றார். ஒருமுறை இருமுறை யன்றிப் பன்முறையும் ஏத்துதல் இயல்பாதலால் “என்றென்று” என்கின்றார். அடுக்கு, பன்மை சுட்டி நின்றது. இவ்வாறு ஏத்தக் கடவ யான் அது செய்யவில்லை என்பார் “எந்தை நின்றனை ஏத்திலன்” என்றும், மண்ணிற் பிறந்துள்ள யான் வழிவழியாக அடிமைப்பணி புரிந்து போந்த அடியவன் என்பார். “மண்ணுள் மற்றுயான் வழிவழி அடியேன்” என்றும் கூறுகின்றார். இவ்வாறு அடியார் குடியிற் பிறந்து வழிவழியாக அடித்தொண்டு புரியும் தொண்டர் வழித்தொண்டர் எனப்படுகின்றனர். “மண்ணுலகிற் பிறந்தும்மை வாழ்த்தும் வழி யடியார், பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்” (நொடித்தான்) என்றும், வழி வழி வரும் சிறப்பை, “எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமையாண்ட பெம்மான்” (ஆலங்காடு) என்றும் சுந்தரர் சொல்லுவது காண்க. வழிவழி யடியராம் மாணலம் கண்ட திருநாவுக்கரசர், “அடியார் அடிமை யறிவாய் போற்றி” (கயிலை) என்று போற்றுவதும், “கடல் நாகைக் காரோண என் வழிவழி யாளாகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே” என்று வேண்டுவதும் ஈண்டு நோக்கற்பாலன. மாயம் - பொய். “மாயச்சூல் தேறி மயங்கு நோய் கைமிக” (கலி. 85) என்பதனாலறிக. அடியாரது அடிமைத் திறத்தை நன்கு அறிதல் பற்றி, “மனம் அறிந்ததுவே” என்று மொழிகின்றார். அறிவின் கண் திண்மையமைந்தா லொழிய மனமும் செயலும் திட்ப முறாவாதலின்; அதனை நல்கும் பரமசிவனைத் “திண்ணமீந்தருள்” என்று உரைக்கின்றார். திண்மை, திண்ணம் என வந்தது. திண்மை அறிவுக்கு இன்றியமையாது வேண்டப்படுவது.
இதனால், வழிவழி வந்த அடியனாதலின் எனக்கு அறிவுத் திண்மை நல்குக என விண்ணப்பித்தவாறாம். (2)
|