1069. நல்லன அல்லனான் ஆயினும் சிறியேன்
நான்அ றிந்ததோ நாடறிந் ததுகாண்
சொல்ல வாயிலை ஆயினும் எனைநீ
தொழும்பு கொண்டிடில் துய்யனும் ஆவேன்
வல்ல உன்கருத் தறிந்திலேன் மனமே
மயங்கு கின்றதியான் வாடுகின் றனன்காண்
செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே
தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
உரை: துன்பம் போக்கிய ஒற்றியூர் அரசே, தில்லையம்பலத்தில் திகழ்கின்ற ஞானவொளியை யுடைய விளக்கமே, சிறியவனாகிய யான் நல்லவனல்லனானாலும் நானறிந்த தெல்லாம் நாட்டவர் அறிந்தவையாகும். சிறப்பாக யாதும் சொல்லுதற்குத் திறமை யில்லை என்றாலும், என்னை நீ அடியனாக ஆட் கொள்வாயாயின் சொல் செயல் நினைவுகளில் தூய்மை யுடையவனாய் விடுவேன்; எல்லாம் வல்ல பெருமானாகிய உன் திருவுள்ளம் அறியேன்; அதனால் யான் மனம் மயங்கி வாடுகின்றேன். எ.று.
செல்லல் - துன்பம். துன்பமுற்றவர் போந்து வழிபாடு செய்து அது நீங்கிச் செல்லுவதால், திருவொற்றியூர்க்கே பெருமை யுண்டு பண்ணுகின்றமை தோன்ற, “செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே” என்று இயம்புகின்றார். சிறியேன் - சிறுமை யுடையவன். சிறுமை - அறிவிற் சிறுமை. சிற்றறிவுடையனாதலால் செய்வனவும் சொல்வனவும் நல்லவையாக இல்லை என்பார் “நல்லனல்லன்” என்றும், எனதறிவும் எல்லாரிடத்துமுள்ள பொது அறிவுதான் என்பதுணர்த்தற்கு “நான் அறிந்ததோ நாடறிந்தது காண்” என்றும், நாட்டவர் அறியாத புதுமையான சிறப்பமைந்த அறிவுபெற்ற வனாயின், யாவரும் வியக்க எடுத்துரைக்க வல்லவனா யிருப்பேன்; அச் சிறப்பறிவு இல்லாமையால் “சொல்ல வாயிலை” என்றும் சொல்லுகின்றார். இத்தகைய குறையுடையவனாயினும் என்னை உனக்கு அடியனாக ஏன்று கொள்வாயாயின் மன மொழி மெய்களில் சிறுமை நீங்கித் தூய்மையுடையவனாகுவேன் என்றற்குத் “தூயனுமாவேன்” என்றும், அவ்வருணலம் இன்னும் எய்தமையால் மனம் மயங்கி மெய்யில் வாட்டம் உறுகின்றேன் என்பாராய், “மனம் மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண்” என்றும் முறையிடுகின்றார். தொழும்பு - அடிமை.
இதனால், அறிவு செயல்களில் சிறியனாயினும் என்னைத் தொழும்பு கொள்ளும் வகையில் திருவுள்ளம் அறியாமையால் மனம் மயங்கி வாடுகின்றேன் என விண்ணப்பித்தவாறாம். (3)
|