107.

    கல்லளவா நெஞ்ச மென வஞ்சமாதர்
        கண்மாய மெனும் கயிற்றாற் கட்டுவித்துச்
    சொல்லளவாத் துன்பமெனும் கடலில் வீழ்த்தச்
        சோர்கின்றே னந்தோ நல்துணை யொன்றில் லேன்
    மல்லளவாய்ப் பவமாய்க்கும் மருந்தா முன்றன்
        மலர்ப்பாதப் புணைதந்தால் மயங்கே னெந்தாய்
    சல்லமுலாத் தருந் தணிகை மணியே சீவ
        சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

உரை:

     மேகம் தவழும் தணிகை மலையில் எழுந்தருளும் மணியே, சீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகசவாழ்வே, கருங் கல்லின் தன்மையையுடைய என் நெஞ்சத்தை வஞ்சம் பொருந்திய மங்கையரின் மயக்கென்னும் கயிற்றால் பிணிப்பித்துச் சொல்லும் அளவைக் கடந்த துன்பமாகிய கடலில் தள்ளுவதால் தளர்கின்ற எனக்கு நல்ல துணையில்லை; வளமிக்க பிறப்பென்னும் பெருநோய்க்கு மருந்தாகும் உனது மலர் போன்ற திருவடியாகிய புணையைத் தந்தருள்வாயாயின் சிறிதும் மயங்கேனாதலால் எந்தையே எனக்கு அதனைத் தந்தருள்க, எ. று.

     மேக மெனப் பொருள் தரும் சொல்லாகிய செல்லென்பது சல்லெனச் சிதைந்து அம்முப் பெற்றுச் சல்ல மென வந்தது; இனிச் சல்லமென்றே கொண்டு காட்டுப்பன்றிகள் திரியும் தணிகை எனினும் அமையும். சல்லம்-பன்றி. கல்லொக்கும் நெஞ்சமென்பார் “கல்லளவா நெஞ்சமென்றார். இளமையிற் பெண்மை காட்டி முதுமையில் பேயாய் மாறி உடன் வாழ்வார் மனநிலையைக் குலைத்து அலைத்தலால் “வஞ்ச மாதர்” என வுரைக்கின்றார். கண்மாயம்-பொய்ம்மை. “கண்டும் கண்டிலேன் என்னகண்மாயமே” (சதகம். 46) எனத் திருவாதவூரரும், “அண்ணலார் செய்கின்ற கண்மாயமே” எனத் திருநாவுக்கரசரும் உரைப்பது காண்க. கண்மாயத்தைக் கண்கட்டு வித்தை என்பவரும் உண்டு. சொல்ல முடியாத அளவுக்கும் பெருகிய துன்பம் என்பார், “சொல்லளவாத் துன்பம்” எனக் குறிக்கின்றார். இறக்கும் துன்பத்தை நல்குவது தோன்றச் “சோர்கின்றேன்” என்று சொல்லுகிறார். அச் சோர்வினை அகற்றித் துணை செய்து தாங்குவாரில்லை என்பார், “துணை யொன்றில்லேன்” என்றும், துணை யொன்று உளதாயின், நின் திருவடி யல்லது இல்லை என யாப்புறுத்தற்கு “உன் மலர்ப்பாதம் புணை தந்தால் மயங்கேன்” என்றும் இயம்புகின்றார். துன்பக் கடலில் வீழ்ந்தார்க்குப் புணையாவதே யன்றிப் பிறவியாகிய நோய்க்கும் மருந்தாகும் எனக் குறிப்பாராய் “மல்லளவாய்ப் பலநோய்க்கு மருந்தாம்” என்று கூறுகின்றார். பல நோய்-பிறவியாகிய நோய். மல்லல், மல்லெனக் குறைந்தது’ மிகுதிப் பொருட்டு.

     இதனால் திருவடியன்றித் துணைவேறில்லை என முறையிட்டவாறாம்.

     (5)