1070.

     இரக்கம் என்பதென் னிடத்தலை எனநீ
          இகழ்தி யேல்அஃதி யல்புமற் றடியேன்
     பரக்க நின்அருட் கிரக்கமே அடைந்தேன்
          பார்த்தி லாய்கொலோ பார்த்தனை எனில்நீ
     கரப்ப துன்றனக் கழகன்று கண்டாய்
          காள கண்டனே கங்கைநா யகனே
     திரக்கண் நெற்றியாய் ஒற்றியாய் தில்லைத்
          திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.

உரை:

     விடம் பொருந்திய கரிய கழுத்தை யுடையவனே, கங்கைக்குக் கணவனே, நிலைத்த கண்ணை நெற்றியி லுடையவனே, ஒற்றியூரனே, தில்லையில் திருச்சிற்றம்பலத்தின்கண் ஒளிரும் ஞான ஒளிவிளக்கே, பிறவுயிர்களைக் கண்டு இரங்கும் பண்பு என்னிடத்தே இல்லையென்று நீ என்னை இகழ்வாயாயின், அஃது எனக்குள்ள இயல்பாகும்; ஆனால், யான் நின்னுடைய அருள்பெறும் பொருட்டு மிகவும் துயரமுற்றேன்; அதனை நீ பார்க்கவில்லை போலும்; பார்த்தாயாயின், உனதருளை வழங்கி விடுவாய்; வழங்காமை நினக்கு அழகாகாது. எ.று.

     திரக்கண் - இமைத்தல் இல்லாத கண். ஏனைக் கண்கள்போல அசைவதில்லாமையால் “திரக்கண்” என்று சிறப்பிக்கின்றார். தில்லையம்பலத்தைச் சிற்றம்பலம் என்பது வழக்காதலால் “தில்லைத் திருச்சிற்றம்பலம்” என்று கூறுகின்றார். சிற்றம்பலம் பிற்காலத்தே சிதம்பரம் என மருவிவிட்டது. காள கண்டம் - கரிய கழுத்து. பிறவுயிர்களைக் கண்டால் இரக்கமின்றி யொழுகுவது எனக்கு இடையில் தோன்றாத இயல்பு. இயல்பென்பது, பொருள் தோன்றுங்கால் உடன் தோன்றி அழியுங்காறும் உடனிருப்பது; இரக்கமுடைமை உனக்கு இயல்பு என்பது கருத்து. அதனால் என்னிடத்தில் இரக்கமில்லை எனக் குற்றங்கண்டு இகழ்ந்து புறக்கணிப்பது நன்றன்று என்பாராய், “இரக்கமென்பது என்னிடத்து இல்லையென நீ இகழ்தியேல் அஃது இயல்பு” என வுரைக்கின்றார். இரங்குதல் - துயரப்படுதல். பிறவுயிர்பால் கொள்ளற்குரிய இரக்கப் பண்பு என்னிடத்து இல்லையாயினும், ஒன்றைப் பெறாவிடினும் பெற்று இழப்பினும் துயரப்பட்டழுவதாகிய இரக்கம் என்னிடம் உண்டு என்பார், “மற்று அடியேன் பரக்க நின் அருட்கு இரக்கமே யடைந்தேன்” எனக் கூறுகின்றார். பரக்க, மிகுதிப் பொருளது , இரக்கமின்மை கண்டு அருள் வழங்க மறுப்பது உன் அருட் பண்புக்கு அழகு தராது என்பாராய், “கரப்பது உன்றனக் கழகன்று கண்டாய்” என மொழிகின்றார்.

     இதனால், இரக்கமில்லாமை என்ற குற்றம் என்னிடம் இருப்பது இயல்பெனக் கொள்ளாமல் அருள் வழங்காதிருத்தல் கூடாது என விண்ணப்பித்தவாறாம்.

     (4)