1071. யாது நான்பிழை செய்யினும் பொறுப்பான்
எந்தை எம்மிறை என்றுவந் தடைந்தேன்
தீது நோக்கிநீ செயிர்த்திடில் அடியேன்
செய்வ தென்னைநின் சித்தமிங் கறியேன்
போது போகின்ற தன்றிஎன் மாயப்
புணர்ச்சி யாதொன்றும் போகின்ற திலைகாண்
சீத வார்பொழில் ஒற்றியம் பரனே
திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
உரை: குளிர்ந்த நீண்ட சோலைகள் சூழ்ந்த திருவொற்றியூரில் எழுந்தருளும் பரமனே, திருச்சிற்றம்பலத்தில் ஒளிரும் ஞானவொளி விளக்கே, யான் எத்தகைய பிழை செய்தாலும் எந்தையும் எங்கட்கு இறைவனுமாகிய சிவபெருமான் பொறுத்தருளுவான் என்று உன் திருமுன்பு வந்துள்ளேன்; என் குற்றம் நோக்கி நீ வெறுத்து நீக்குவாயாயின், யான் செய்யக் கூடியது யாது? நின்னுடைய திருவுள்ளக் குறிப்பை அறியேன்; வாழ்நாள் கழிகிறதே யன்றி என் பொய்க் கொள்கைகளில் ஒன்றும் என்னைவிட்டுப் போகவில்லை. எ.று.
மரங்கள் செறிந்து நெடுந்தூரம் பரந்து நிழல்செய்து நிற்றலின் “சீதவார் பொழில்” என்று சிறப்பிக்கின்றார். தந்தையாய்ப் பேணலும் இறைவனாய் அருளுதலும் நினைந்து “எந்தை எம்மிறை” என்றும், குற்றம் பொறுத்தருளும் பண்பு நோக்கி, “நான் யாது பிழை செய்யினும் பொறுப்பான்” என்றும், அந்த நினைவால் சிவன் திருமுன் அடைந்தமை விளங்க “என்று வந்தடைந்தேன்” என்றும் கூறுகின்றார். அடைந்த விடத்துத் திருவருள் கிடைக்காமை நோக்கி, இதற்குக் காரணம் தன்பால் குற்றமுண்மை கண்டு வெறுப்புற்றமை யென எண்ணுகின்றாராதலின் “தீது நோக்கி நீ செயிர்த்திடில்” என்றும், இறைஞ்சி வேண்டுவதன்றி வேறு செய்யலாகாமையால் “செய்வதென்னை” என்றும், தான் நினைப்பது போலின்றி இறைவன் குறிப்பு வேறாகலாம் என்ற நினைவு தோன்றவும், “நின் சித்தம் இங்கு அறியேன்” என்றும் மொழிகின்றார். “மற்றும் நான் பெற்ற தார்பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசிக் குற்றமே செயினும், குணமெனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்” (வடமுல்லை) என்றும், “பிழை யுளன பொறுத்திடுவ ரென்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய்” (வெண்பாக்) என்றும் சுந்தரர் கூறுவது காண்க. மாயப் புணர்ச்சி, பொய்க் கொள்கைகள். வாழ்க்கையில் பலரொடு கூடிப் பயிலுதலாற் சேர்ந்த பொய்யான கருத்துக்களும் கொள்கைகளும் மாயப்புணர்ச்சி எனப்படுகின்றன. இச் சொற்றொடர் சங்க நூல்களிற் காணப்படுவது. “பசலையும் அம்பலும் மாயப்புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க” (கலி.39) என்பது காண்க. வாழ்நாள் கழிகின்றதேயன்றி என்னை வந்தடைந்த பொய்யொழுக்கங்களும் கொள்கைகளும் ஆகியவற்றுள் ஒன்றேனும் ஒழியவில்லை யென்பார், “போது போகின்ற தன்றிஎன் மாயப் புணர்ச்சி யாதொன்றும் போகின்ற திலை காண்” என்று புகல்கின்றார்.
இதனால், என்பாற் குற்றம் காண்பதாயின் எனக்கு உய்தியில்லை; என் வாழ்வில் நாள் கழிகிறதே யன்றி என் பொய்ம்மை போகிறதில்லை என முறையிட்டவாறாம். (5)
|