1072.

     தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள்
          சார்ந்த மேலவர் தமைத்தொழு தேத்தா
     நாய்க்கும் நாய்எனும் பாவியேன் பிழையை
          நாடி நல்லருள் நல்கிடா திருந்தால்
     ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும்போ
          தென்கொ லாம்இந்த எண்ணம்என் மனத்தைத்
     தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே
          தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.

உரை:

     ஒற்றியூரில் எழுந்தருளும் சிவபிரானே! தில்லையம்பலத்தில் விளங்கும் ஞானவொளி விளக்கமே, தாய் தந்தையரை ஒத்த நின்னுடைய இரண்டு திருவடிகளையும் நெஞ்சிற் கொண்டிருக்கும் சான்றோர்களைத் தொழுது வழிபடாத, நாய்களிற் கடையாய நாயினும் பாவியாகிய எனது பிழையை ஆய்ந்து நினது நல்லருளைச் செய்யாவிட்டால், ஏமாற்றுகின்ற மயக்கத்தைப் போல் இருள் நிறம் கொண்ட எமன் வரும்போது என்னாம்? இந்த எண்ணம் என்னுடைய மனத்தின்கண் தோன்றித் தீப்போலச் சுட்டெரிக்கின்ற தாதலால், யான் என்ன செய்வேன்? எ.று.

     திருவொற்றியூரிற் கோயில் கொண்டிருப்பது பற்றி “ஒற்றியம் சிவனே” என்று உரைக்கின்றார். ஒரு கால் உமையவட்கும் ஒரு கால் சிவனுக்கும் உரியவாதலின் “தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இருதாள்” என்று குறிக்கின்றார். திருவடிகளை நினைந்து கொண்டிருக்கும் சிவ தொண்டர்களை, “இருதாள் சார்ந்த மேலவர்” என்று சிறப்பிக்கின்றார். சார்தல் - நினைத்தல். திருவடியினும் நெஞ்சில் நினைத்தற்கு மேலாய பொருள் வேறே இன்மையின், திருவடியைச் சிந்திக்கும் பெருமக்களை, “மேலவர்” என்றும், அவர்களைச் சிவனென்றே வழிபடுவது சிவநெறியாதலால், அவரைத் தொழா தொழிவது பெரும் பாவமாதல் கருதி, “மேலவர் தமைத் தொழ தேத்தா நாய்க்கும் நாயெனும் பாவியேன்” என்றும் வெறுத் துரைக்கின்றார். நாயிற் கடையாய நாய் என்றற்கு “நாய்க்கும் நாய்” என்கின்றார். மேலவர் மேன்மையையுணராதவாறு மாயவிருள் மூடிக்கொண்டதனால் என்னிடம் பிழையுண்டாயிற் றென்பார். “பிழையை நாடி நல்லருள்” நல்கிட வேண்டும் என மொழிகின்றார். பிறப்புக் காரணங்களை ஆய்ந்து நீக்கும் இயல்பினன் சிவன் என்பதுகொண்டு “நாடி நல்குக” என்கின்றார். “பணிவார்தம் பல் பிறவி ஆய்ந்தாய்ந்து அறுப்பாய்” (சத்திமு.) என்பர் நாவுக்கரசர். “வல்வினையேன் தன்னை மறந்திட மூடிய மாயவிருளை” (சிவபு.) என்று திருவாசகம் உரைப்பது அறிக. இருளை நீக்கி ஞானவொளி நல்குவது தோன்ற இறையருளை, “நல்லருள்” என்றும், அதனை நல்கா தொழியின் இருள் நிறமுடைய எமன் கைப்பட்டுத் துன்புறுவேன் என்பார். நல்லருள் நல்கிடா திருந்தால் “மால்நிறக் காலன் வந்திடும் போது என் கொலாம்” என்றும் முறையிடுகின்றார். நல்லது போலக் காட்டித் தீதுறுவிக்கும் மயக்கம் ‘மால்’ எனப்படும்; அதனை “ஏய்க்கும் மால்” என்றும், அதன் நிறம் கரியவிருளாதலின் கருநிறமுடைய எமனை “ஏய்க்கும் மால்நிறக் காலன்” என்றும் குறிக்கின்றார். “வெம்மை நமன் தமர் மிக்கு விரவி இழுப்பதன்முன், இம்மை யுன்தாள் என்நெஞ்சத் தெழுதிவை” (சக்தி) என்று திருநாவுக்கரசர் நமன்தமர்களின் வரவுக் கஞ்சுவது காண்க. இந்த அச்சம் காரணமாக எழும் எண்ணம் நெஞ்சினைச் சுட்டு வருத்துகிற தென்பார், “இந்த எண்ணம் என் மனத்தைத் தீய்க்குது என் செய்வேன்” என வுரைக்கின்றார். தீய்த்தல் - தீயாற் சுடல். தீக்கிறது என்பது உலக வழக்கில் தீய்க்குது என வரும்.

     இதனால், காலன் வருங்கால் என்னாம் என்ப தறியேனாதலின் நல்லருள் நல்குக என முறையிட்டவாறாம்.

     (6)