1073.

     ஆட்டு கின்றநீ அறிந்திலை போலும்
          ஐவர் பக்கம்நான் அடுகின் றதனைக்
     காட்டு கின்றவான் கடலிடை எழுந்த
          காள முண்டஅக் கருணையை உலகில்
     நாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய
          நாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும்
     தீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே
          திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.

உரை:

     எழுதப்படுகின்ற நல்ல புகழை யுடைய திருவொற்றியூர் அரசே, திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற ஞானவொளி விளக்கே, உலகில் உயிர்களை ஆட்டி வைக்கின்ற நீ, ஐம்புலன்களின் பக்கம் நின்று நான் ஆடுவதை அறியவில்லை போலும்; பரந்து தோன்றுகிற பெரிய கடலின்கண் எழுந்த விடத்தை யுண்டருளிய பேரருளை உலகில் நிலை பெறச் செய்குவையாயில், கொடுமையுடைய நாய்போன்ற எனக்கும் உன்னுடைய அருளைச் செய்ய வேண்டும். எ.று.

     ஊர்களின் புகழ் கல்லிலும் ஏட்டிலும் பொறித்து வைப்பது தொன்று தொட்ட மரபாதலால், “தீட்டுகின்ற நற்புகழ் ஒற்றி” என்று உரைக்கின்றார். திருவொற்றியூரின் புகழ் அவ்வூர்த் திருக்கோயிற் சுவர்களிலும் சைவத் திருமுறை யேடுகளிலும் பொறிக்கப் பட்டுள்ளமை, அரசின் கல்வெட்டுத் துறை வெளியீடுகளிலும் ஆண்டறிக்கைகளிலும் காணப்படுகிறது. அவ்வூர்க்கண் கோயில் கொண்டு அருளரசு புரிவதுபற்றித் திருவொற்றியூர்த் தியாகப் பெருமானை “ஒற்றியரசே” என ஓதுகின்றார். சிவன் உயிர் வகைகளை வாழ்விக்கும் செயலே ஆட்டுவிக்கும் செயலாகும். அவனின்றி ஓரணுவும் அசைவதில்லை யாதலால், அவன் ஆட்ட உயிர்கள் ஆடுகின்றன எனச் சான்றோர் அறிந்துரைக்கின்றார்கள். அதனால் சிவனை, “ஆட்டுகின்ற நீ” என்று கூறுகின்றார். ஆட்டுகின்ற திறத்தை மணிவாசகப் பெருமான், “வானாகி மண்ணாகி வளியாகி, ஒளியாகி, ஊனாகி யுயிராகி யுண்மையுமாய் இன்மையுமாய், கோனாகி யான் எனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே” (சதக) என்றதனால் நன்கறியலாம். ஐவர் என்றது, ஐம்புலன்களை. “ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்ற லொட்டார்” (வலிவலம்) என்று ஞானசம்பந்தரும், “கூட்டமாய் ஐவர் வந்து கொடுந்தொழிற் குணத்தராகி, ஆட்டுவார்க் காற்ற கில்லேன” (கொண்டீச்) என்று நாவுக்கரசரும் உரைப்பது காண்க. புலன்கள் ஐந்தும் ஆசையைத் தூண்டித் தத்தம் நெறியில் மனத்தை ஈர்த்து அலைப்பது ஆட்டுவிப்பது போலுதலால் “ஐவர் பக்கம் நான் ஆடுகின்றனன்” என மொழிகின்றார். நாவுக்கரசரும் புலன்களின் செயலை “ஆட்டுவார்” என்று குறிப்பது காண்க. பெருங்கடல் அகன்று ஆழ்ந்து தோன்றுவதால் “காட்டுகின்ற வான்கடல்” என்றும், அதனிடை எழுந்த விடம் கருமை நிறமுடைமை புலப்படக் “காளம்” என்றும், உலகம் உய்ய வேண்டுமென்றெழுந்த கருணையால் அக் காளவிடம் உண்ணப்பட்டமையின் “காளமுண்ட அக்கருணை” என்றும் விதந்து கூறுகின்றார். ஞானசம்பந்தரும், “கருணையாய் உண்பரிய நஞ்சதனை உண்டு உலகமுய்ய அருள் உத்தமன்” (மாணி) என்று நவில்கின்றார். கடல்விடமுண்டது பழங்கதையாய் விட்டமையின், மீண்டும் அது கதையன்று உண்மையென்று நிலைநாட்டுவதாயின் நாய் போன்ற எனக்கும் அருள் புரிய வேண்டும் என்பாராய், “நாட்டுகின்றனையாயின் இக்கொடிய நாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும்” எனவுரைக்கின்றார்.

     இதனால், கடலிற் எழுந்த நஞ்சினை உலகு உய்ய வேண்டுமென்ற கருணையால் உண்டாய் என்பதை நாட்டுதற்கு, எனக்கு உன் அருளை நல்குக என விண்ணப்பித்தவாறாம்.

     (7)