1074. உய்ய ஒன்றிலேன் பொய்யன்என் பதனை
ஒளித்தி லேன்இந்த ஒதியனுக் கருள்நீ
செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே
செய்வ தென்னைநான் திகைப்பதை அன்றி
மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை
மறந்தி லேன்இது வஞ்சமும் அன்றே
செய்ய மேனிஎம் ஒற்றியூர் வாழ்வே
திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
உரை: சிவந்த மேனியை யுடையராய் எங்கள் ஒற்றியூரவர்க்கு வாழ் முதலாக வுள்ளவனே, திருச்சிற்றம்பலத்தில் விளங்கும் ஞான விளக்கமே, உய்தி பெறுதற்குத் துணையாவ தொன்றும் இல்லாதவன் பொய்யன் என்பதைச் சிறிதும் மறைக்கவில்லை; இந்த ஒதி மரம் போல் பவனாகிய எனக்கு அருள் செய்க; அங்ஙனம் ஒன்றும் செய்ய வேண்டுவதில்லை என்பாயாயின், சிவனே, நான் திகைப்புண்டு வருந்துவதின்றிச் செய்யக் கூடியது என்ன இருக்கிறது? மயக்கம் படிந்த நெஞ்சினை யுடையவனாயினும், நான் உன்னை மறந்ததில்லை; யான் கூறுவது வஞ்சனை யன்று. எ.று.
செம்மேனி யம்மானாதலின் சிவபெருமானைச் “செய்ய மேனியெம் ஒற்றியூர் வாழ்வே” என்றும், ஒற்றியூர் மக்களுடைய வாழ்வுக்கு ஆக்கமும் அரணுமாய் விளங்குமாறு தோன்ற, “ஒற்றியூர் வாழ்வே” என்றும் இயம்புகின்றார். “செய்ய மேனியீர்” (வீழி) என்பர் திருஞானசம்பந்தர். வாழ்க்கைத் துன்பங்களினின்றும் உய்ந்து போதற்கு வேண்டிய உறுதிப்பொருள் யாதும் தன்பால் இல்லை என்றற்கு “உய்ய ஒன்றிலேன்” என்பதும், பொய் கூறுபவன் என்றற்குப் “பொய்யன்” என்பதும் நன்கறிந்தவை என்பார். “என்பதனை ஒளித்திலேன்” என்றும், எனவே நீ எனக்குத் திருவருள் வழங்கவே வேண்டும் என வற்புறுத்துவாராய், “இந்த ஒதியனுக்கு அருள் நீ” எனவும் உரைக்கின்றார். ஒதியன் - ஒதிமரம் போல்பவன், அருள் செய்தே தீர வேண்டுமென்பதில்லை; வற்புறுத்த வேண்டா என்று சொல்லுவாயாயின், யான் திகைப்புண்டு வருந்துவதின்றி என்னால் செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை என்பார், “செய்ய வேண்டுவ தின்றெனில் சிவனே திகைப்பதை யன்றிச் செய்வது என்னை” என்று உரைக்கின்றார். இந்நிலையில் அவர் மனம் மயங்குகிறது; எண்ணம் இருள்கிறது; சிவனையே நினைக்கின்றார். அதனை, “மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை மறந்திலேன்” என்று கூறுகின்றார். கூறுவது அருள் பெறுதற்காகச் செய்யும் வஞ்சனை என்று கருதப்படுமோ என்று அஞ்சுகின்றார். அதனால், “இது வஞ்சமும் அன்றே” என்று இயம்புகின்றார்.
இதனால், திருவருட் பேற்றுக்காகச் செய்யப்படும் தமது விண்ணப்பம் வஞ்சனையெனக் கருதப்படலாகா தென முறையிட்டவாறாம். (8)
|