1076. சிறியர் செய்பிழை பெரியவர் பொறுக்கும்
சீல மென்பதுன் திருமொழி அன்றே
வறிய னேன்பிழை யாவையும் உனது
மனத்தில் கொள்ளுதல் வழக்கல இனிநீ
இறையும் தாழ்க்கலை அடியனேன் தன்னை
ஏன்று கொண்டருள் ஈந்திடல் வேண்டும்
செறிய ஓங்கிய ஒற்றியம் பரமே
திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே.
உரை: சென்றுறைதற் கேற்ற சிறப்புமிக்க ஒற்றியூர்ப் பரம்பொருளே, திருச்சிற்றம்பலத்தில் திகழும் ஞானவொளி விளக்கமே, சிறியராயினார் செய்யும் பிழையைப் பெரியராயவர் பொறுப்பது சீலமாம் என்று சொல்வது நீ யுரைத்த மறைமொழியாகும்; அறிவில்லாத யான் செய்த பிழைகள் அனைத்தையும் உன்னுடைய திருவுள்ளத்தில் கொள்வது முறையாகாது; ஆதலால், நீ இனித் தாமதியாமல் அடியேனை ஏற்றுக்கொண்டு உனது திருவருளை வழங்குமாறு வேண்டுகிறேன். எ.று.
அறிவுரைகள் யாவும் நிறைமொழி மாந்தர் உரைக்கும் மறைமொழியென்றும், திருமொழி யென்றும் கூறுவது மரபு. அப் பெருமக்களின் அறிவினுள் இருந்து இறைவனே அவற்றை உரைக்கின்றானென்பது சிவநெறிக் கொள்கையாதலால், சிறியவர் செய்பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது “உன் திருமொழியன்றோ” என வுரைக்கின்றார். அக் கொள்கை கண்டே மணிவாசகனார், “பொறுப்ப ரன்றே பெரியோர் சிறுநாய்கள்தம் பொய்யினையே” (நீத்தல்) என்று இயம்புகின்றார். உன் திருமொழி என்றது, இத் திருவாசகத்தை, குற்றத்தைச் செய்வோருடைய நலம் கண்ட வழி அக்குற்றத்தைக் குணமாகக் கொள்வது சிவனுக்குக் கொள்கை; இதனை “நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப்போவானும், கற்ற சூதன் நற்சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் என்றிவர்கள். குற்றம் செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டு நின் குரைகழலடைந்தேன்” (புன்கூர்) என்று நம்பியாரூரர் நவில்வது காண்க. வறியனேன் என்பதில், வறுமை அறிவில்லாமைமேல் நின்றது. அறிவின்மையால் சிறியனாகிய யான் செய்த பிழையனைத்தையும் பொறுத்தருளுதல் உன் கொள்கைக்கு ஒத்ததேயன்றித் திருவுள்ளத்திற் கொள்ளுதல் பொருந்தாது என்பாராய் “வறியனேன் பிழை யாவையும் உனது மனத்தில் கொள்ளுதல் வழக்கல” என்று சொல்லி, இனிச் சிறிதும் காலம் தாழ்க்காமல் அடியனாகிய என்னை ஆட்கொண்டு அருள்புரிதல் வேண்டும் என்ற கருத்தால், இனி நீ இறையும் தாழ்க்கலை அடியனேன் தன்னை ஏன்று கொண்டருள் ஈந்திடல் வேண்டும்” என்று வேண்டுகின்றார். நில்லாத வாழ்க்கை யுடையனாதலின் “இறையும் தாழ்க்கலை” என்றும், அருளை நல்கும் இறைவனை நோக்க அதனைப் பெறும் தான் மிகவும் இழிந்துள்ளமையால், ஈந்திடல் வேண்டும்” என்றும் இசைக்கின்றார்.
இதனால், அறிவாற் சிறியனாதலால் என் பிழையனைத்தையும் பொறுத்து ஆட்கொண்டு அருள் செய்தல் வேண்டுமென விண்ணப்பித்தவாறாம். (10)
|