1078. மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன்
மருவும் நின்அருள் வாழ்வுற அடையாச்
சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
வறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா
வண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே
பொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே
போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
உரை: மாணிக்கத்தின் மலை போன்றவனே, பொறுமைப் பண்பு உடையவனே, ஒற்றியூரில் எழுந்தருளும் பரமனே, வழிபடுவோர் யாவராயினும் அவர்க்கெல்லாம் நடுநிற்கும் பெருமானே, மறுமை இன்மையாகிய இருமையிலும் வளம் பெறும் விருப்புடையேனல்லேன்; பொருத்தமுடைய நின் திருவருள் நிழலிற் பெறும் வாழ்வை யடைதற் கில்லாத என் சிறுமை யியல்பை நினைந்து மனம் மருளுகின்றேன்; சிவனே, சிறுமை யுடையாருள்ளும் சிறுமையேனாகிய யான் செய்யக் கூடியது யாது என அருளுக; அறிவால் வறியனாகிய எனது வருத்தம் நீ அறியாதொழிதற்கு வழி யுண்டோ? எ.று.
மாணிக்கமாகிய செம்மணியாலான மலைபோல் நிறமும் நிலைமையுமுடையனாதலால் “மாணிக்க மலையே” என்று சிறப்பிக்கின்றார். “மருவார் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலைபோல வருவார் விடைமேல்” (கட. மயா.) எனச் சுந்தரர் புகலுவது காண்க. மடமை அறியாமைகளால் மிகையாயின செய்தவழி பொறுத்தருளுவது பற்றி “பொறுமையாளனே” என்று உரைக்கின்றார். பிற சமய நெறிக்கண் நின்று போற்றினும் போற்றுவார்க்கு நடுநின்று அருள் வழங்கும் தன்மையுடைமை தோன்றப், “போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே” என்றும் புகழ்கின்றார். மறுமை - மேலுலக வாழ்வு. இம்மை - இம்மண்ணுலக வாழ்வு. இருவகை வாழ்வும் நிலையில்லாமையும் துன்பமுடைமையும் பொருந்தி யிருத்தலால், “மறுமை இம்மையும் வளம் பெற வேண்டேன்” எனத் தெரிவிக்கின்றார், திருவருளாகிய சத்தியைத் தன் கூறாகக் கொண்ட சத்திமான் என்றற்கு “மருவும் நின் அருள்” என்று மொழிகின்றார். ஞானவொளி நிலவும் இன்பப் பெருவாழ்வாதலால் “திருவருள் வாழ்வடைய” விரும்புகிறார்; பெறப்படும் அருளின் பெருமையையும் பெறவிரும்பும் தமது சிறுமையையும் எண்ணுகின்றபோது, அருமை தோன்றி மனத்தை மருளச் செய்தலால், வள்ளற் பெருமான், “அடையாச் சிறுமை எண்ணியே திகைக்கின்றேன், சிவனே” என்று செப்புகின்றார். அடையாச் சிறுமை - அடையாமைக்கேதுவாகிய சிறுமை; இதனை ஏதுப்பொருட்டாய பெயரெஞ்சு கிளவியென்பர். சிறுமையை நினைக்கும்போது ஏனைச் சிறியோர் பலருள்ளும் மிக்க சிறுமை தம்பால் உளதாக நினைந்து, “சிறியருட் சிறியேன்” என்றும், அதனால் திருவருளை அடையும் திறம் புலப்படாமை கண்டு “நான் செய்வது என்னை?” என்றும் வருந்துகின்றார். சிவபரம் பொருள் பேரருட் பெருமானாதலின், திருவருள் வாழ்வை நயந்து, பெறும் நெறியறியாமல் வருந்தும் நிலையினை அறியின், அறிவு நல்குவா யெனின், எனது மனநிலையினை அறியா திருக்கின்றாயோ; அவ்வாறிருப்பதும் உண்டோ என வினவுவாராய், “வறுமையாளனேன் வாட்டம் நீ அறியாவண்ணமும் உண்டுகொல்” என்று கேட்கின்றார். எதிர் மறையும்மை விகாரத்தால் தொக்கது. வறுமை, அறிவின்மை குறித்து நின்றது.
இதனால், திருவருள் வாழ்வு அடைதற்குரிய நெறியறியாச் சிறுமையெண்ணி வருந்துமாறு கூறியவாறாம். (2)
|