1079.

     உய்ய வல்லனேல் உன்திரு அருளாம்
          உடைமை வேண்டும்அவ் உடைமையைத் தேடல்
     செய்ய வல்லனோ அல்லகாண் சிவனே
          செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
     பெய்ய வல்லநின் திருவருள் நோக்கம்
          பெறவி ழைந்தனன் பிறஒன்றும் விரும்பேன்
     பொய்யி தல்லஎம் ஒற்றிஅம் பரனே
          போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

உரை:

     எங்கள் ஒற்றியூரில் எழுந்தருளும் பரமசிவனே, போற்றுகின்ற பல்வகை மக்கட்கும் நடுநின்று அருள் புரிபவனே, பிறவித் துன்பச் சூழலினின்று உய்திபெற வல்லனாக வேண்டுமாயின் நான் உனது திருவருளாகிய செல்வம் உடையனாக வேண்டும்; அச் செல்வத்தைத் தேடிப் பெறத்தக்க வல்லமை எனக்கு இல்லை; சிறியராயினார் எல்லாருள்ளும் சிறியனாதலால், சிவனே, யான் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை; அச் செல்வத்தை நல்கவல்ல நினது திருவருட் பார்வை என்மேல் உண்டாக விரும்புகின்றதன்றி, வேறு யாதும் யான் விரும்பவில்லை; யான் கூறுகின்ற இவை பொய்யுரைகள் அல்ல. எ.று.

     திருவருள் ஞானமாகிய செல்வமுடையாரே பிறவித்துன்பச் சுழற்சியினின்றும் உய்தி பெறுவர்; அச் செல்வமில்லாதார்க்கு உய்தியில்லை என்பது மெய்யுணர்ந்தோர் அருளுரையாதலால், “உய்ய வல்லனேல் உன் திருவருளாம் உடைமை வேண்டும்” என எடுத்து மொழிகின்றார். அருட்செல்வத் தண்ணலும், அதனைத் தந்தாள்பவனும் ஆதி முதல்வனாகிய சிவனாதலின், அவனையன்றிப் பிறர் எவரும் அச்செல்வத்தைச் செய்து கொள்ளலாகா தென்பதுபற்றி “அவ்வுடைமையைத் தேடல் செய்ய வல்லனோ அல்ல காண் சிவனே” என்று இயம்புகின்றார். “அண்ணல் ஆரருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதியே” (பிரம) என்று ஞானசம்பந்தர் அறிவுறுப்பது காண்க. நின் திருவருளை நீயே நயந்து நல்கினல்லது உலகியற் பொருள்போல உடல் பொருள் உயிர் என்ற மூன்றனுள் ஒன்றைத் தந்து பெறுவதன்றாதலால், “நான் செய்வதென்னை” என்று கூறுகின்றார். வேண்டுவார் வேண்டுமளவினும் மிக்க நலங்களைத் தருவது நின் திருவருள் என்பார். “பெய்ய வல்லநின் திருவருள்” என்று சிறப்பித்து, நின் திருவருள் நாட்டம் உண்மையை உள்ளவாறு காட்டும் ஒட்பமுடையதாகலின் அதனையே பெறற்கு விரும்புகின்றேன் என்பார், “நின் திருவருள் நோக்கம் பெற விழைந்தனன்” என்று உரைக்கின்றார். “எந்தை நின்திருவருள் நாட்டம் கருணையிற் பெறலும், யாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்ற, மேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை” (கழுமலமும்.10) என்று பட்டினத்தடிகள் தெரிவிப்பது காண்க. “பிறவொன்றும் விரும்பேன்” என்றது, விழைந்த விழைவை வற்புறுத்தவாறு, சிறியருட் சிறியனாதலின், சிறுமைக்குரிய ஏதுக்களில் பொய்யுரையும் ஒன்றாதலால், அதுகுறித்து யான் கூறும் இவற்றைப் பொய்யெனத் தள்ளி விடலாகா தென்பார், “பொய்யிதல்ல” என்று முடிக்கின்றார்.

     இதனால், உய்தி பெறற்குத் திருவருள் நோக்கம் இன்றியமையாதாகலின் அதனை நல்குக என்று வேண்டிக் கொண்டவாறாம்.

     (3)