108.

    அன்னை முதலாம் பந்தத் தழுங்கி நாளும்
        அலைந்து வயிறோம்பி மனமயர்ந்து நாயேன்
    முன்னை வினையாற் படும்பா டெல்லாம் சொல்லி
        முடியேன் செய்பிழை கருதி முனியேல் ஐயா
    பொன்னைநிக ரருட்குன்றே ஒன்றே முக்கட்
        பூமணமே நறவே நற்புலவர் போற்றத்
    தன்னை நிகர்தரும் தணிகை மணியே சீவ
        சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

உரை:

     நல்ல புலவர்கள் பரவத் தனக்குத் தானே ஒப்பாய் விளங்கும் தணிகை மணியே, சீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே, பொன்னின் நிறத்தையுடைய அருள் மலையே, ஒன்றாகிய பரம்பொருளே, மூன்று கண்களையுடைய சிவமாகிய பூவின் நறுமணமாகியவனே, அப்பூவிடத் தூறும் தேனேயாகிய முருகப் பெருமானே, தாய் முதலாக எண்ணப்படும் உறவினரால் உளதாகிய பிணிப்பினால் மனம் கவன்று நாடெங்கும் அலைந்து வயிற்றை வளர்த்து உளம் சோர்ந்துள்ள நாயனைய யான் முன்பு செய்த வினைகளால் எய்துகின்ற துன்பம் பலவற்றையும் சொல்லி முடியேனாய் நின் திரு முன் செய்கின்ற குற்றங்களை யெண்ணி எளியேனை வெறுப்புற்று விலக்காதே என வேண்டுகிறேன், எ. று.

     நல்வினை செய்து மேலுலகடைந்து வாழும் தேவர்களை “நற்புலவர்” என்பர்; நல்ல நூலறிவால் புலவராயினவர் எனினும் அமையும். புலவர் பாடும் புகழ் படைத்த தணிகை மலை தனக்குவமை யில்லாத சிறப்புடைய தென்றற்குத் “தன்னைநிகர்தரும் தணிகை” எனக் கூறுகிறார். ஆராயும் உள்ள மெல்லாம் அருளாகப் பொன்னின் நிறம் கொண்ட திருமேனி யுடையனாதல் பற்றிப் “பொன்னைநிகர் அருட் குன்றே” என்றும், பல்வேறு மூர்த்தங்களைக் கொள்ளினும் உள்ளுறு பொருள் ஒன்றாகிய பரம் என்றற்கு “ஒன்றே” என்றும், சிவ மூர்த்தத்தை மலரென உருவகம் செய்தலின், “முக்கட்பூ” என்றும், அதனிடத்து ஞான மயமாய்த் தோன்றினமை புலப்பட, “முக்கட் பூமணமே” என்றும், நறுமணமாய்க் கழியாமல் தேனாய் இன்பம் செய்தலின் “நறவே” என்றும் நவில்கின்றார். உறவினருட் பெற்ற தாயினும் பெருமை யுடையவர் பிறர் இல்லாமை யெண்ணி, “அன்னை முதலாம் பந்தம்” எனக் கூறுகிறார். பந்தம் - உறவால் உளதாகும் உள்ளத் தொடர்பு; பிணிப்புமாம். தாய் தந்தை முதலாயினார்க்கு எய்தும் துயர் தனக்கு வந்தாற் போல் வருத்தம் விளைவித்தலால், “பந்தத் தழுங்கி” என்றும், அவர்கட்கு வேண்டுவன உதவும் பொருட்டுப் பொருள் நாடி நாடெங்கும் அலைந்து வருந்துதல் தோன்ற, “நாளும் அலைந்து” என்றும், அலைவது சிறப்பாக உணவின் பொருட்டாதலால் “வயிறோம்பி” என்றும், ஓய்வின்றி நாடோறும் இதுவே நிகழ்தலால் மனம் சோர்வுறுவதை எடுத்துரைப்பாராய், “மனம் அயர்ந்து” என்றும், சோர்வின்கண் நினை வெழுந்து நாயாய் அலைவது காட்டி இதற்குக் காரணம் முன்பு செய்த வினையின் விளைவு எனக் காட்டுதலால் “முன்னை வினையாற் படும்பாடு” என்றும் இயம்புகின்றார். படுகின்ற துயரனைத்தும் நெஞ்சில் மிக்கவிடத்து வாயிற் சொல்லாய் வெளி வருதலால், முன்னிருப்பவர் கேளாவிடினும் முடிவின்றிப் பன்னிப் பன்னிச் சொல்லிய வண்ணமிருப்பதைப் “படும்பாடு எல்லாம் சொல்லி முடியேன்” எனவும், தன் துயரத்தைப் பிறர் செவியிற் படவுரைத்து அவர்க்கு மனம் நோவுறச் செய்வது குற்றமாதலையும் நினைக்கின்றாராதலின், “செய்பிழை கருதி முனியேல்” எனவும் மொழிகின்றார். முனிவு-வெறுப்பு.

     இதன்கண், உறவு முறைப் பந்தத்தால் எய்தும் துன்பங்களை முடிவின்றிச் சொல்லுமாற்றால் தான் செய்யும் பிழையைப் பொறுத்தருள வேண்டுமாறு காணலாம்.

     (6)