1080. வெல்லு கின்றனர் வினைப்புல வேடர்
மெலிகின் றேன்இங்கு வீணினில் காலம்
செல்லு கின்றன ஐயவோ சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
சொல்லு கின்றனன் கேட்கின்றாய் கேட்டும்
தூர நின்றனை ஈரமில் லார்போல்
புல்லு கின்றசீர் ஒற்றிஅம் பரனே
போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
உரை: பொருந்திய புகழையுடைய திருவொற்றியூரில் எழுந்தருளும் பரம்பரனே, போற்றுவோர் அனைவருக்கும் நடுவே பொதுப் பொருளாய் இருப்பவனே, சிவபெருமானே, வினைசெய்தற் கேதுவாகிய ஐம்புல வேடர்கள் என்னுள் வெற்றி கொள்கின்றமையால் யான் அறிவால் மெலிகின்றேன்; காலக் கூறுகள் கணந்தோறும் வீணிற் கழிகின்றன; ஐயனே, சிறுமையுற்றோருள் மிகச் சிறயவனாதலால் செய்யத்தக்கது யாதென அறியேன்; யான் சொல்லுவதைக் கேட்டருளுகின்றாயாயினும் கேட்டும் இரக்கமில்லாதவர்போல் என்னினின்றும் சேய்மையில் விலகி நிற்கின்றாய்; இது கூடாது காண். எ.று.
சீர், ஈண்டுப் புகழ் மேற்று, புகழ்க்கெல்லாம் நிலைபெறற்கு ஆதாரமாவது நிலவுலக மாதலால், நிலக்கூறாகிய ஒற்றியூரை விதந்து, “புல்லுகின்ற சீர் ஒற்றி” என்றும், எல்லாப் பொருட்கும் தெய்வங்கட்கும் மேலாயவனாதல் பற்றிப் “பரனே” என்றும் கூறுகின்றார். வழிபடுவோர் எத்தன்மையோராயினும் அவர் பலரும் பயன் எய்த நடுநின்று அருள்புரியும் நலம் பரவுவாராய், “போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே” எனப் புகழ்கின்றார், “பரவுவாரையும் உடையார் பழித் திகழ்வாரையும் உடையார் விரவு வாரையு முடையார்” (திருவாழ்கொளி) என ஞானசம்பந்தர் ஓதுவர். வினைசெயற்கு இன்றியமையாத அறிவு நல்கும் கண் காது முதலிய அறிகருவிகளை “ஐம்புலம்” என்றும், அவை உயிரறிவைத் தம் வயப்படுத்தி ஒளி ஒலி முதலியவற்றின் வாயிலாக உலகப் பொருளிடைச் செலுத்தி ஆசை கொள்வித்துத் துன்பத்துக் குள்ளாக்குவது கண்டு “வினைப்புல வேடர்” எனவும், அதனால் அறிவு இயற்கை வன்மையிழந் தொழிவது புலப்படுத்தற்கு வினைப்புல வேடர் என்னைத் தாக்கி வென்று அடிமைப்படுத்துகின்றார்கள் என்பது தோன்றப் புலவேடர் “வெல்லுகின்றனர் மெலிகின்றேன்” எனவும் சொல்லி வருந்துகின்றார். இம் மெலிவில் கிடந்து துயர்உறுவதால் இவ்வுலக வாழ்வு நாள் என்னும் பெயரால் வீணே குறைகின்றமை பற்றி, “இங்கு வீணிற் காலம் செல்லுகின்றன” என்றும், காலத்தின் அருமை நினைந்து வருந்துவார் “ஐயவோ” என்றும், கழிந்த காலத்தை மீளவும் எவராலும் பெறலாகாமையால் கையறவு படுவது விளங்கச் “செய்வதென்னை” என்றும், அறிவினாலாகாததில்லை யன்றோ எனவெழும் வினாவுக்கு விடை கூறுவாராய், “நான் சிறியருட் சிறியேன்” என்றும் இயம்புகின்றார். காலக் கழிவு வாழ்நாளைக் குறைக்கும் திறத்தை, “நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின்” (குறள்) எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. வாழ்வில் சிலபல நிகழ்ச்சிகள் இறைவனை வேண்டியாங்கு நிகழ்ந்தமை கண்டுளராதலின், “சொல்லுகின்றனன் கேட்கின்றாய்” எனவும், இப்போது நான் சொல்வதைக் கேளாதாய் போலவும், விலகிச் சேய்மையில் புறக்கணித்து நிற்பாய் போலவும் இருக்கின்றாய் என்பார், “கேட்டும் தூர நின்றனை” எனவும், அருளே யுருவாய் இலங்குபவனாகிய நீ இவ்வாறு இருத்தல் கூடாது என்பார், “ஈரமில்லார் போல்” எனவும் முறையிடுகின்றார்.
இதனால், ஐம்புல வேடர்க்கு அடிமையுற்று வீண் செயல்களிற் காலம் கழிகின்றமை தெரிவித்துத் தமது விண்ணப்பத்தை ஏற்க வேண்டியவாறாம். (4)
|