1081. ஏறு கின்றிலேன் இழிகிலேன் நடுநின்
றெய்க்கின் றேன்பவம் என்னும்அக் குழியில்
தேறு கின்றிலேன் சிக்கெனச் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
கூறு கின்றதென் கடவுள்நீ அறியாக்
கொள்கை ஒன்றிலை குன்றவில் லோனே
பூறு வங்கொளும் ஒற்றிஅம் பரனே
போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
உரை: மேரு மலையை வில்லாகக் கொண்டவனே, ஆதிபுரி என்னும் சிறப்புறும் ஒற்றியூரில் எழுந்தருளும் பரமனே, வழிபடுவோர் அனைவர்க்கும் பொதுவாய் நிற்பவனே, பிறப்பென்று சொல்லப்படும் அக்குழியில் வீழ்ந்துள்ள யான் மேலே ஏறவும் மாட்டேனாய், கீழே இறங்கவும் மாட்டேனாய், நடுவே நின்று தளர்கின்றேன்; திண்ணமாகத் தெளியவும் மாட்டேனாய் உள்ளேன்; சிவபரம்பொருளே, சிறியவருட் சிறியவனாகிய யான் என்ன செய்ய வல்லேன்? கடவுளாகிய நீ யறியாத கொள்கை யொன்றும் என் மனத்தில் இல்லையாதலால் வேறே யான் கூறக் கூடியது யாது? எ.று.
திரிபுரம் எரித்தகாலை மேருமலையை வில்லாக கொண்ட செய்தியை நினைந்து “குன்ற வில்லோனே” என்றும்; திருவொற்றியூரைப் புராணிகர் ஆதிபுரி யெனவும், சிவனை ஆதி புரீசர் எனவும் கூறுதலால், “பூறுவம் கொளும் ஒற்றி” என்றும் உரைக்கின்றார். பூருவம், பூறுவம் என வந்தது. இரண்டு் மூன்றும் நூற்றாண்டுகட்குமுன் ஆங்காங்கே காளான்கள் போல் தோன்றிய தலபுராணக்காரர்கள் புகுத்திய பெயர்களில் ஆதிபுரீசர் என்பது ஒன்றாதலின், இது சைவத் திருமுறைகளிலோ, அவற்றின் பிற்காலத்தே தோன்றிய பல்லவ பாண்டிய சோழ வேந்தர்களின் கல்வெட்டுக்களிலோ காணப்படவில்லை. ஞானசம்பந்தர், “பேரருளாளனாகிய ஆதிமூர்த்தி” என்றும், பட்டினத்தடிகள் “ஆதியாகிய அறுதொழிலாளர், ஓதலோவா ஒற்றியூரை” என்றும் கூறுவனவற்றை நோக்கி, இப்பெயர் புராணிகர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. “பிணங்கும் மாந்தர் பெற்றிமை நோக்கி, அணங்கிய அவ்வர்க் கவ்வவை யாகி அடைபற்றிய பளிங்கு போலும் ஒற்றி மாநகர் உடைய கோனே” (ஒருபா) என்று சான்றோர் உரைத்தலால், “போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே” என்று புகல்கின்றார். பிறவியைக் கடலென்றும் ஆழ்குழியென்றும் பெரியோர் கூறுபவாகலின், “பவம் என்னும் குழி” என்று கூறுகின்றார். அக்குழி என்பதில் அகரம், உலகறி சுட்டு. பவக்குழி யினின்றும் ஏறுபவர் உம்பராவர் எனவும், கீழ் நோக்கி இறங்குபவர் நரகராய்ப் பாதலம் புகுவரெனவும் நூலோர் சொல்லுவர். மண்ணுலகம் இரண்டற்கும் இடையதாய் நடுவாகும் மண்ணுலகில் பிறந்து வருந்தி இளைக்கின்றமை தோன்ற, “ஏறுகின்றிலேன் இழிகிலேன் நடுநின்று எய்க்கின்றேன்” என மொழிகின்றார். நடுநின்று மனம் தளர்வதால் தெளிவிழந்து மெலிவுறுவது புலப்படச் “சிக்கெனத் தேறுகின்றிலேன்” என்றும், சிறியரிற் சிறியனாதலால் செய்வதறியாது கலக்கமுறுகிறேன் என்பாராய், “செய்வ தென்னை நான் சிறியருட் சிறியேன்” என்றும், கொள்கை வேறு உடையனாயின் பல கூறலாம். என் உள்ளத்திற் கிடக்கும் கொள்கை அத்தனையும் நீ அறிந்தவையாதலின், நீ அறியாத கொள்கை வேறு என்னிடம் இல்லை என்பார். “கூறுகின்றதென் கடவுள் நீ அறியாக் கொள்கை ஒன்றிலை” என்றும் கூறுகின்றார். “தேறுகின்றிலேன் இனியுனைச் சிக்கென” என்பது “தேறுகின்றிலம் இனியுனைச் சிக்கென” (சதக) என்ற திருவாசகத்தை நினைப்பிக்கிறது.
இதனால், பிறவிக் குழியில் வீழ்ந்து மேலேறுவதோ கீழிறங்குவதோ இன்றி நடுநின்று வருந்துகின்ற நிலைமை கூறி முறையிட்டவாறாம். (5)
|