1082. கந்த மும்மல ரும்என நின்றாய்
கண்டு கொண்டிலேன் காமவாழ் வதனால்
சிந்தை நொந்தையர் கின்றனன் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
எந்த நல்வழி யால்உனை அடைவேன்
யாதுந் தேர்ந்திலேன் போதுபோ வதுகாண்
புந்தி இன்பமே ஒற்றிஅம் பரனே
போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
உரை: புத்தி தத்துவத்தின் கண் தோன்றும் இன்பமாகிய சிவனே, ஒற்றியூர்ப் பரமசிவனே, போற்றுகிற எவ்வெவர்க்கும் பொதுவாய் நிற்கும் பரம்பொருளே, காமவேட்கை நிறைந்த வாழ்வில் கிடத்தலால் மலரும் மணமும் போல எங்கும் விரவி நிற்கும் உன்னைக் கண்டு கொள்ளேனாயினேன்; அதனாற் சிவனே, யான் மனம் நோயுற்றுத் தளர்கின்றேன்; நான் சிறியருட் சிறியவனாதலால் செய்யக்கூடியது இன்னதெனத் தெரியேன்; எத்தகைய நல்வழியால் உன்னை அடைவது? யாதும் என்னால் தெரிய முடியவில்லை; என்னுடைய காலமோ நில்லாது கழிகிறது, காண். எ.று.
அராக தத்துவத்தால் கிளரப்பட்ட ஆன்ம இச்சா சத்தி, நல்லதன் நலம் கண்ட புத்தி தத்துவத்தில் தோய்ந்த நலம் தரும் இன்பத்தை நுகரும்; நுகரப்படும் இன்பத்தின் இயல்பை ஆன்ம சிற்சத்தி புத்தி வாயிலாக உணரும்; அங்ஙனம் உணரப்படும் இன்பவடிவம் சிவமாதலின் “புந்தி யின்பமே” என்று புகல்கின்றார். “அருந்தின்பத் துன்பம் உள்ளத்தறி வினுக் கராக மாதி தரும்” என்றும், “அது தன் வேதனையாம் காட்சி” என்றும் கூறும் சிவஞான சித்தியாரிலும், அதன் உரைகளிலும் இக்கருத்து விளக்கமுறுதல் காண்க. இதனைச் சித்தாந்த நூல்கள் ‘சுவவேதனாப் பிரத்தியட்சம்’ என்றும், ஆன்ம சிற்சத்தி உபாதீதப் பிரமாணம் என்றும் கூறுகின்றன. புத்தியின்கண் இன்பவடிவாய சிவத்தைத் தன்னின்வேறாக வைத்துக் காண்பதால் “பரனே” என்றும், “யாவர்க்கும் பொதுவில் நின்றவனே” என்றும் இயம்புகிறார்; இது பொருட்குப் பொருத்தமாக இருக்கிறது. பூவும் மணமும் போல் உலகில் இறைவன் உளன் என்பது பலரும் கூறும் உண்மையாதலின், “கந்தமும் மலரும் என நின்றாய்” என உரைக்கின்றார். “பூவினில் வாசம் புனலிற் பொற்புப் புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு நாவினிற் பாடல் நள்ளாறுடைய நம் பெருமான்” (நள். கூடலால) என ஞானசம்பந்தரும், “பூவாகிப் பூவுக்கோர் நாற்றமாகிப் புக்குளால் வாசமாய் நின்றானாகி” (நின்ற தாண்ட) என நாவுக்கரசரும், “பூவில் வாசத்தைப் பொன்னினை மணியை” (நள்ளா) என நம்பியாரூரரும், “நறுமலர் எழுதரு நாற்றம் போற்பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்” (அதிசயம்) என மணிவாசகனாரும் பிறரும் உரைக்கின்றனர். அறிவும் இச்சையும் காம நுகர்ச்சியில் ஆழ்ந்து போயினமையின் மலர் மணம்போல் பொருள்களில் கலந்திருக்கும் உன்னைக் காணதொழிந்தேன் என்பார், “காம வாழ்வதனால் கண்டு கொண்டிலேன்” என்றும், அதனால் இப்போது உன் அருளைப் பெறும் அருமை கண்டு மனம் வருந்துகின்றேன் என்பார். “அதனால் சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே” என்றும், இந்நிலையில் என் அறிவாற்றலின் சிறுமை புலனாதலின் செய்யத்தகுவது இன்னதெனத் தெரியாது திகைக்கின்றேன் என்பார், “செய்வதென்னை நான் சிறியருட் சிறியேன்” என்றும் கூறுகின்றார். காம வாழ்வோ பொருள் வாழ்வோ சிவனை அடைதற்கு நல்வழியாகா தென அறிந்து, நல்வழியாதாம் என்று எண்ணுகையில், காலம் கழிந்தமை யன்றி நேரிய வழி புலனாகாமை தோன்ற, “எந்தநல் வழியால் உனை யடைவேன் யாதும் தேர்ந்திலன் போது போவதுகாண்” என்று உரைக்கின்றார்.
இதனால், மலரும் மணமும் போல் இறைவன் நிற்பதைச் சான்றோர் உணர்த்தக் கண்டு உணரும் வழி யறியாமை தெரிவித்துக் கொண்டவாறாம். (6)
|