1083.

     அல்லல் என்னைவிட் டகன்றிட ஒற்றி
          அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர்த்
     தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே
          செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
     ஒல்லை இங்குவா என்றருள் புரியா
          தொழிதி யேல்உனை உறுவதெவ் வணமோ
     புல்லர் மேவிடா ஒற்றிஅம் பரனே
          போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

உரை:

     நல்லொழுக்க மில்லாத அற்பர்கள் பொருந்தாத ஒற்றியூர்ப் பெருமானே, போற்றுவோர் அனைவருக்கும் பொதுவில் நிற்பவனே, துன்பமானது என்னை விட்டகல வேண்டுமாயின் திருவொற்றியூரை அடுத்து வழிபட்டொழுக வேண்டுமெனவும் அல்லது தில்லையிலுள்ள பெரும்பற்றப் புலியூரை அன்புற்றடைய வேண்டுமெனவும் பெரியோர் கூறுவர்; ஒன்றும் செய்யும் நெறியறியேன் சிறியருட் சிறியனாகிய யான்; சிவபெருமானே, யான் செய்ய வல்லது யாது? நீ விரைந்து இங்கே வா என்று அருள் புரியாயின் உன்னை யான் அடைவது எவ்வண்ணமாம்? எ.று.

     புல்லர் - நல்லறிவும் நல்லொழுக்கமும் இல்லாதவர். கடவுளுணர்வு வழிபாட்டு விருப்பமும் இல்லாதவராதலின், “புல்லர் மேவிடா ஒற்றியம் பரனே” என்று பரவுகின்றார். அறியாமை காரணமாகப் பிறக்கும் துன்பம் அல்லல் எனப்படும்; “அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்திராது நீர் நல்லதோர் நெறியினை நாடுதும் நடமினோ” (கோடிகா) என்று பெரியோர் குறிப்பது காண்க. “அடைவார் வினைகள் அறுப்பான் என்னை, உடையா னுறையும் ஒற்றியூரே” என்று நம்பியாரூரர் கூறுவதால், “ஒற்றியடுத்து நிற்கவோ” என்றும், தில்லையில் திருச்சிற்றம்பலமுடைய கோயிற் பகுதி புலியூர் என்றும், பெரும்பற்றப் புலியூர் என்றும் சான்றோர்களால் குறிக்கப்படுவதுபற்றித் “தில்லைப் புலியூர் மேவவோ” என்றும் இயம்புகின்றார். “அடுத்தார்க்கருளும் ஒற்றிநகர் ஐயர்” என்பது இங்கிதமாலை. செய்யுளாதலின் எதுகை நயம் பற்றிப் புலியூர் தில்லையென மாறி நிற்கிறது. தில்லையிற் கூத்தப் பெருமான் திருக்குறிப்பு, “என்று வந்தாய்” என்பது போறலின், அந்த நலம் நினைந்து “தில்லைப் புலியூர் மேவவோ” என்று வள்ளலார் உரைக்கின்றார். சிறியருட் சிறியராதலின் ஒற்றியூரை அடுத்து நிற்கும் நெறியையும் தில்லைப் புலியூரை மேவி நிற்கும் முறையையும் அறியேன் என்பது புலப்பட, “சிவனே, அறிந்திலேன்” என்றும், இனி நீ அறிவித்தாலன்றி யான் செய்வது இன்னதெனத் தெரியவில்லை என்றற்குச் “செய்வதென்னை நான்?” என்றும், என் அறிவுச் சிறுமை கண்டு, அறிவிப்பதை விடுத்து இங்கே விரைந்து வா என்று பணிப்பது நன்று; அதுவும் செய்யாயாயின் யான் உன்னை அடையு மாறில்லை என்பார், “ஒல்லை இங்குவா என்று அருள்புரியாது ஒழிதியேல் உன்னை உறுவது எவ்வணமோ?” என்றும் கையுறவுபடுகின்றார். ஒல்லை - விரைவுக் குறிப்பு.

     இதனால், ஒற்றியூரை அடுத்து நிற்கவும்; தில்லைப் புலியூரை மேவவும் அறியேனாகலின் இங்கு ஒல்லைவா என்று அருளுக என்று வேண்டிக் கொண்டவாறாம்.

     (7)