1085.

     சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது
          சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது
     சித்தம் என்னள வன்றது சிவனே
          செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
     நித்தம் நின்னடி அன்றிஒன் றேத்தேன்
          நித்த னேஅது நீஅறி யாயோ
     புத்த ருந்தமிழ் ஒற்றியூர் அரசே
          போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.

உரை:

     புதுமை யமைந்த அரிய தமிழ் வழங்கும் ஒற்றியூரில் எழுந்தருளும் அருளரசே, போற்றுவோர் அனைவர்க்கும் பொதுவாயுள்ளவனே, தூய நெஞ்சுடைய நல்லவரோடு சேர்த்தாலும், சோம்பல் படிந்த நெஞ்சுடை யாரோடு சேரச்செய்யினும் அது நின் திருவுள்ளமாகும்; என்னுடைய கருத்தளவில் நிற்பதன்று; சிறியவர்களுட் சிறியவனாதலால் யான் செய்தற்கு யாது உளது? நின்னுடைய திருவடியை யன்றி நாளும் நான் வழிபடுவது வேறில்லை; என்றும் உள்ளவனாகிய நீ அதனை அறிவாயன்றோ? எ.று.

     சென்ற நூற்றாண்டிலேயே, வள்ளற்பெருமான் வாழ்ந்த நாளிலேயே வாணிகம் அரசியல் என்ற துறைகளில் நாளும் வளரலுற்றமையின், பல்வேறு நாட்டுப் பல்வகை மொழி பேசும் மக்கள் போந்து வாழ்க்கை மேற்கொண்டமையின், மக்களிடையே பொதுவாய் நிலவிய தமிழ், புதுச் சொற்களும் புத்தொலியும் கலந்து புதுமையும் விளங்குத லருமையும் பெற்றமையின், “புத்தருந் தமிழ் ஒற்றியூர்” என்று புகல்வாராயினர். இன்றும் அதுவே நிலைமையாதல் திருவொற்றியூர்க்குச் செல்வோர் இனிது காண்பர். நற்செயலும் நன்மொழியு முடையார் கூட்டத்தைச் “சுத்த நெஞ்சர்” என்றும், தீச்செயலும் தீமொழியும் உடையாரைச் “சோம்பல் நெஞ்சர்” என்றும் குறிக்கின்றார். இருதிறத்தார் நெஞ்சின் இயல்பை யான் அறிதல் கூடாமையால், அவரோடு கூட்டுவிப்பது நின்னுடைய திருவருட் குறிப்பாகும் என்பார். “நினது சித்தம்” என்றும், நெஞ்சின்கண் நிகழ்வனவற்றை நேர்பட அறிபவன் சிவனொருவனே யாதலால், “சிவனே, அது என்னளவன்று” என்றும் கூறுகின்றார். அவரவர் உள்ளத்தில் நின்று சிவன் ஆட்டுவிக்கின்றா னென்பதைத் திருநாவுக்கரசர், “என்னுள்ளே புகுந்து நின்றிங், கெம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே உழிதர்வேன்” (தனி, நேரிசை) என்று தெரிவிப்பது காண்க. செய்தற்குரியதனை நீ செய்வித்தாலன்றித் தனிப்பட யான் செய்வதொன்றும் இல்லை என்பார், “நான் செய்வது என்னை” என்றும், யான் நாளும் செய்வது இது வென்றற்கு, “நித்தம் நின் அடியன்றி ஒன்று ஏத்தேன்” என்றும், என்னோடுடனிருக்கும் நீ நன்கு அறிந்தது என்று கூறுவாராய், “அது நீ அறியாயோ” என்றும் கூறுகின்றார். ஒன்று என்ற விடத்து, முற்றும்மை தொக்கது.

     இதனால், நல்லவர் தீயவர் என்பாரொடு என்னைச் சேர்த்து வாழச் செய்வது சிவனது திருவுளப் பாங்கு என்பது தெரிவித்தவாறு.

     (9)