1086. தத்து மத்திடைத் தயிரென வினையால்
தளர்ந்து மூப்பினில் தண்டுகொண் டுழன்றே
செத்து மீளவும் பிறப்பெனில் சிவனே
செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
தொத்து வேண்டும்நின் திருவடிக் கெனையே
துட்டன் என்றியேல் துணைபிறி தறியேன்
புத்தை நீக்கிய ஒற்றியம் பரனே
போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.
உரை: புத்த சமய இடம் பெறாதவாறு விலக்கிய திருவொற்றியூர்ப் பெருமானே, போற்றுவோர் அனைவர்க்கும் பொதுவாய் நின்றருளுபவனே, ஆடுகின்ற மத்திற் கடையப்பட்ட தயிர் போல வினையால் அலைப்புண்டு முதுமையிற் கையிற் கோல்கொண்டு உழன்று, இறந்து மீண்டும் பிறப்பது எனில், சிறியருட் சிறியனாகிய யான் அதிலிருந்து உய்தற்குச் செய்யக்கூடியது யாது? கூறுக; உன்னுடைய திருவடிக்கண் என்னைப் பற்றுவிக்க வேண்டும்; பொல்லாதவ னென்று தள்ளுவாயாயின் எனக்குத் துணையாவது வேறொன்றும் அறியேன். எ.று.
கடவுளுண்மையை வற்புறுத்தாமையின் புத்த சமயம் தமிழ்நாட்டில் இடம் பெறாதொழிந்த குறிப்புத் தோன்ற “புத்தை நீக்கிய ஒற்றியம் பரனே” என உரைக்கின்றார். புத்தம், புத்தென வந்தது. “புலையறமாகி நின்ற புத்தொடு சமணம்” (திருமாலை. 7) என்பர் தொண்டரப்பொடி யாழ்வார். கடைகின்ற காலத்தில் மேலும் கீழுமாய் ஏறி யிறங்குவது பற்றித் தயிர்கடை மத்துத் “தத்தும் மத்து” எனப்படுகிறது. தயிரிடை நின்று மத்துச் சுழலும் போது கட்டிகள் உடைந்து கலங்கி நீராய் விடுவது கொண்டு, வினையலைத்தலால் மனம் கலங்கி யலமருவது விளங்க, “மத்திடைத் தயிரென வினையால் தளர்ந்து” என வுரைக்கின்றார். திருநாவுக்கரசர், “பரவிவந்து சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய, மத்துற தயிரே போல மறுகுமென் உள்ளந்தானும்” (ஆரூர். மூலட். நேரிசை) என்பது காண்க. முதுமைக்கண் கால்கள் வலி குறைதலால் தண்டூன்றிக் கொள்ளுதல் இயல்பாதலால் “மூப்பினில் தண்டு கொண்டுழன்றே” என்றும், செத்தால் அதனோ டொழியாது மீட்டும் பிறந்து வளர்ந்து மூப்பும் சாக்காடும் எய்துவது நினைந்து, “செத்து மீளவும் பிறப்பெனில்” என்றும் இசைக்கின்றார். சிறியருட் சிறியனாதலால், இத் தொல்லையினின்றும் நீங்குதற்குரிய செய்வகை யறியேன் என்பாராய், “செய்வ தென்னைநான் சிறியருட் சிறியேன்” என்று தெரிவிக்கின்றார். தொத்து - பற்றிக் கொள்ளுதல். பிறவிக் குழியில் வீழாதபடி என்னுடைய திருவடியைப் பற்றி அதனை எனக்கு ஆதாரமாகவும் நான் அதன் ஆதேயமாகவும் அமைய அருள வேண்டும் என வேண்டலுற்றுத் “தொத்து வேண்டும் நின் திருவடிக் கெனையே” எனவும், பொல்லாதவனென்று உதறிவிடுவாயாயின், என்னைத் தாங்கி யாதரிக்கும் துணை வேறு காண்கிலேன் என்பாராய், “துட்டனென்றியேல் துணை பிறி தறியேன்” எனவும் கூறுகின்றார்.
இதன்கண், பிறந்து வளர்ந்துள்ள யான் வினையால் தளர்ந்து முதுமையிற் கோலூன்றி யுழன்று இறந்தபின் மீளப் பிறத்தல் உண்டாகாதபடி தாங்குதல் வேண்டுமென முறையிட்டவாறாம். (10)
|