47. ஆற்றா விண்ணப்பம்

திருவொற்றியூர்

    அஃதாவது பலவகையால் தோன்றிய ஆற்றாமையைச் சிவபெருமான் பால் முறையிட்டுக்கொள்வதாம். முறையீடும் விண்ணப்பமாதலால் இஃது ஆற்றா விண்ணப்பம் என்று பெயர் பெறுகிறது. இஃது அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது.

    இதன்கண், சிவனொருவனது உறவின்றிப் பிறர் எவருடைய ஆதரவையும் விரும்பாத மனமாண்பும், பிற தெய்வங்களைத் தொழாத இயல்பும், மரணவேதனைக் கஞ்சும் திறமும், இறந்தால் மாறி வரும் பிறப்பில் உடம்பு வேறுபடுதலைத் தவிர்க்கும் வகைதெரியாத வருத்தமும் கூறப்படுகின்றது, பொல்லாக் களிமகனாயினும், மனவாட்டம் கண்டு இரங்காமையும், நஞ்சினை யுண்ட பெருமான் தன்னை யேலாமை நஞ்சினும் கொடுமை யுணர்த்துதலாற் கைவிடின் எய்தும் ஆற்றாமையும், மனம் நைந்து வருந்தாதே என்னாமையால் பிறக்கும் ஆற்றாமையும் சிவனுறையும் இடம் கேட்பார்க்குச் சொல்ல மாட்டாமையும், அவனால் ஆட்கொள்ளப்படும் தகுதியின்மை கண்டு ஆற்றாமையும் தெரிவிக்கப்படுகின்றன. முடிவில், தொண்டு புரியும் ஆட்கள் பலர் இருப்பினும் என்னையும் ஆட்கொள்க என்பதும், வீணனாய் வெறியனாய் அற்பனாகியது கண்டும் ஆண்டு்கொண்டதால் சிவபிரான் தாயிற் பெரிய தயவுடையன் என்பதும் இன்பம் தருகின்றன.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1088.

     அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே
          அம்பலத் தாடல்செய் அமுதே
     பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே
          போதமே ஒற்றிஎம் பொருளே
     உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன்
          உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
     என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல்
          இருக்கின்ற இவ்வெளி யேனே.

உரை:

     தாயினும் மிக்க இனியது செய்யும் என்னுடைய அருளரசே, திருச்சிற்றம்பலத்தில் ஆடல்புரியும் அமுதமே, பொன்போன்று ஒளி செய்யும் சடையையுடைய கனி போன்றவனே, ஞான வடிவினனே, ஒற்றியூரில் எழுந்தருளும் சிவபரம் பொருளே, உன்னை விடுத்து அயலராகிய பிற தேவர்களோடு உறவு கொண்டு உன்னை அடைய விரும்பேன்; இது உண்மை. என் உள்ளக் கருத்தை நீ அறிவாயன்றோ; என்னை நீ கைவிடுவாயாயின் ஒதிமரம்போல் வளர்ந்திருக்கின்ற எளியனாகிய யான் என்ன செய்வேன். எ.று.

     “தாயினும் நல்ல சங்கரன்” (ஆதியு) என்று நாவுக்கரசர் முதலிய சான்றோர் பலரும் உரைப்பதால், “அன்னையிற் பெரிதும் இனிய என் அரசே” என்று புகழ்கின்றார். உலகில் வாழும் உயிர்கள் வாழ்ந்து உய்தி பெறும் பொருட்டு அம்பலத்தில் ஆடுகின்றானாதலின், “அம்பலத் தாடல் செய் அமுதே” என்று உரைக்கின்றார். பொன்னிற முடையதாகலின் சிவனுடைய திருமுடிச் சடையை, “பொன்னையொத் தொளிரும் புரிசடைக் கனியே” என்று புகல்கின்றார். திருநாவுக்கரசர், “செம்பொன்னாற் செய்தழகு பெய்தாற் போலும் செஞ்சடை யெம்பெருமானே” (அதிகை) என்பது காண்க. போதம் - ஞானம்; ஆசிரியனால் போதிக்கப்படுதலால் ஞானம் ‘போதம்’ எனப்படுகிறது. “போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தி” (142) என்று திருமந்திரம் கூறுவதறிக. ஞானமே சிவனுக்கு வடிவமாதல் பற்றிப் “போதமே” எனப் புகல்கின்றார். “ஞானந்தான் உருவாகிய நாயகன்” (கந்தபு. 3 : 21 : 128) என்று கச்சியப்ப சிவாச்சாரியார் கூறுவது காண்க. அயலார் - சிவனோடு உடனெண்ணப்படும் திருமால் நான்முகன் ஆகியோர் அவர்களும் மக்களால் வழிப்படும் தேவர்களாயினும் மாயா மண்டல எல்லைக்குள் நிற்பவராதலின், அவருடைய “உறவு கொண்டு அடையேன்” என்று கூறுகின்றார். “ஞாலமுள்ளதோர் பரம்பொருள் நாமெனப் புகலும் மாலும் வேதனும் மாயையாம் வரம்பினுட் பட்டார்” (கந்தபு. 3 : 21 : 131) என்று கந்தபுராணம் உரைப்பது காண்க. நினைப்பார் நினைவின்கண் நினைப்பவை அனைத்தையும் அறிபவனாதலால், “என் உள்ளம் நீ அறிவாய்” என இசைக்கின்றார். “நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றார்க்கு, உணர்வினோ டிருப்பார் போலும் ஒற்றியூருடைய கோவே” (ஒற்றி. நேரிசை) என்று சான்றோர் உரைப்பது காண்க. உள்ளத்து உரனின்றி ஒதிமரம்போல் உள்ளேன் என்று தம்மை யிகழ்வாராய், “ஒதிபோல் இருக்கின்ற இவ்வொளி யேனே” என்று இயம்புகின்றார். “விட்டிடில்” என்றது, விட மாட்டார் என்ற நம்பிக்கையைக் காட்டுகிறது.

     இதனால், அயலார் உறவு கொள்ளேனாதலால் என்னை விடலாகாது, விடில் ஆற்றேன் என்று முறையிட்டவாறாம்.

     (1)