1089. எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன்
என்செய்வேன் என்செய்வேன் பொல்லாக்
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும்
கருணைசெய் திலைஅருட் கரும்பே
அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே
அருமருந் தேவட வனத்துத்
தளியனே ஒற்றித் தலத்தமர் மணியே
தயையிலி போல்இருந் தனையே.
உரை: அருட்சுவை நல்கும் கரும்பே, இரக்கமுடையவனே, திருச்சிற்றம்பலத்தின்கண் திகழும் ஞானவொளி யுடையவனே, பெறற்கரிய தேவரமுது போன்றவனே, திருவாலங்காட்டில் கோயில் கொண்டவனே, திருவொற்றியூரில் எழுந்தருளும் மாணிக்க மணி போல்பவனே, எளியனாகிய யான் மயக்கம் பொருந்திய மனமுடையவனாய் வருந்துகிறேன்; பொல்லாத கட்குடியன் போன்ற என் வாட்டத்தைக் கண்டும் கருணை செய்யாமல் தயை யில்லாதவன் போல் வாளா இருக்கின்றாயே; இனி என்ன செய்வேன்? எ.று.
கரும்பிடத்துப் பெறலாகும் சாறு இனிமை தருவதுபோல ஞானவின்பம் தருவதுபற்றி, “அருட் கரும்பே” என்றும், இரக்கமேயுருவாயிருத்தல் பற்றி, “அளியனே” என்றும் கூறுகின்றார். “ஆலைப்படு கரும்பின் சாறுபோல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான் காண்” (வீழி) என்று சான்றோர் கூறுதல் காண்க. திருச்சிற்றம்பலத்தில் ஞான நாடகம் புரிதலால், “திருச்சிற்றம்பலத் தொளியே” என்கின்றார். தேவர் முனிவர் முதலிய யாவர்க்கும் பெறற்கரிய ஞானத் திரளாய் நின்று பிறப்பிறப்பென்னும் பிணியைப் போக்குதலால் “அருமருந்தே” என்று இயம்புகின்றார். “ஞானத் திரளாய் நின்ற பெருமான்” (அண்ணா) என ஞானசம்பந்தர் நவில்கின்றார். தளி - கோயில். தயையிலி - தயாவுணர்வு இல்லாதவன் என்செய்வேன் என்செய்வேன் என இரட்டித்தது ஆற்றாமை தோன்ற என்க.
இதனால், எளியேன் எய்திய வாட்டம் கண்டும் இரங்காதிருப்பதனால் ஆற்றேனாகின்றேன் என்பதாம். (2)
|