109. பன்னருவன் றுயரால் நெஞ்சழிந்து நாளும்
பதைத்துருகி நின்னருட் பால் பருகக் கிட்டா
துன்னரும் பொய் வாழ்க்கை யெனும் கானத்திந்த
வூர் நகைக்கப் பாவியழல உணர்ந்திலாயோ
என்னருமை யப்பா வென்ஐயா என்றன்
இன்னுயிர்க்குத் தலைவா விங்கெவர்க்கும் தேவா
தன்னியல் சீர் வளர்தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.
உரை: தன்னியல்பால் உளவாகிய நலங்களால் புகழ் கொண்ட தணிகை மணியே, சீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே, எனக்கு அருமையாக வாய்த்த தந்தையே, ஐயனே, என் இனிய உயிர்க்குத் தலைவனே, இவ்வுலகில் எத்தகையவர்க்கும் தெய்வமாயவனே, சொல்ல முடியாத கொடுந்துயரத்தால் மனவலியிழந்து நாடோறும் பதைத்து உருகி நின்னுடைய திருவருளாகிய பால் உண்ணக் கிடைக்காமையால் பொய் நிறைந்த வாழ்க்கை யென்னும் காட்டில் ஊரவர் கண்டு நகைக்குமாறு பாவியாகிய யான் அழுது புலம்புவதை நீ மனத்திற் கொள்ளவில்லையே! எ. று.
செயற்கையால் இன்றியே இயற்கையாய் வளம் அமைந்து அழகுற்று விளங்குவது தணிகைப் பதி என்றற்குத் “தன்னியல் சீர்வளர் தணிகை” என்று கூறுகிறார். உடல் பொருள்கட்கு உயிர் தலைமை யுறுவது போல உயிர்க்கு இறையருள் தலைமை தங்குதலால், “என் இன்னுயிர்க்குத் தலைவா” எனவும், பிற வுயிர்க் கெல்லாம் தெய்வமாய்த் திகழ்கின்றான் முருகப் பெருமான் என்பது புலப்பட, “இங்கு எவர்க்கும் தேவா” எனவும் இயம்புகிறார். நீக்க முடியாதவாறு நெருக்கி வருத்தும் துன்பத்தை “வன் துயர்” என்றும், அதனால் மனம் வலி யிழந்தழிதலால், “நெஞ்சழிந்து” என்றும், இவ்வாறு நாடோறும் வருந்தி முருகனை நினைந்து உள்ளமும் உடம்பும் மெலிவுற்றுத் திருவருளைப் பெற்றாலன்றி வாழ மாட்டாத நிலையினை எய்தினமை தோன்றப், “பதைத்து உருகி அருட்பால் பருகக் கிட்டாது” என்றும் கூறுகின்றார். திருவருட்பாலை யுண்டுறையும் அருள் வாழ்வு எய்தாவிடத்து உலகியற் பொய் வாழ்விலே கிடக்க நேர்தலால் “உன்னரும் பொய் வாழ்க்கை யெனும் கானத்து” உழல்கின்றேன் என வுரைக்கின்றார். செல்லும் வழி துறை யின்றிக் கொடு முட்புதர்ளும் கடுவிலங்கும் கொண்டு அகப்பட்டாரைத் துன்புறுத்தும் காடு போலப் பொய்யும் வழுவும் நிறைந்து வாழ்வார்க்கு மிக்க துன்பம் விளைவிப்பது கருதிப், “பொய் வாழ்க்கை யென்னும் கானம்” என்று புகல்கின்றார். கானத்தின் நடுநின்று புலம்புவோர் குரல் பயனின்றிக் கெடுவது போல் எனது புலம்பு குரல் நின் திருவுள்ளத்திற் கொள்ளவில்லையோ என்பாராய்ப், “பாவியழல் உணர்ந்திலாயோ” என்று உரைக்கின்றார். உணர்வின்மை இறைவன்பால் இல்லை யென்பதறிந்தும், துன்ப மிகுதி பற்றி இவ்வாறு இயம்புகின்றார்.
இதனால் திருவருள் எய்தாமையால் பொய் வாழ்க்கைத் துன்பத் துழன்று புலம்பும் குரலை உள்ளத்திற் கொண்டிலை போலும் என்று முறையிட்டவாறாம். (7)
|