1090.

     இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய்
          என்துயர் அறிந்திலை போலும்
     முருந்தனை முறுவல் மங்கையர் மலைநேர்
          முலைத்தலை உருண்டன னேனும்
     மருந்தனை யாய்உன் திருவடி மலரை
          மறந்திலேன் வழுத்துகின் றனன்காண்
     வருந்தனை யேல்என் றுரைத்திலை ஐயா
          வஞ்சகம் உனக்கும்உண் டேயோ.

உரை:

     தேவரமுது போன்றவனே, எந்தையே, நீ என்னுடைய நெஞ்சின்கண் வீற்றிருந்தும் யான் படும் துன்பத்தை நீ அறியவில்லையோ? முருந்து போன்ற பற்களையுடைய மகளிரின் மலைபோன்ற முலைமேற் கிடந்து கூடியிருந்தேனாயினும் உன்னுடைய திருவடித்தாமரைகளை மறவாமல் நினைந்து வாழ்த்தினேன்; அங்ஙனமிருந்தும், மனம் நைந்து வருந்த வேண்டா என உரைத்தருள்கின்றா யில்லை; உனக்கும் வஞ்சகம் உண்டோ? உண்டாயின் நான் ஆற்றேன். எ.று.

     நினைவார் நெஞ்சமே இடமாகக் கொண்டிருக்கும் நிமலனாதலின், சிவனை “இருந்தனை எனது நெஞ்சினுள்” என்றும், அங்கு நிகழும் என் துயரத்தை நீ நன்கு அறிந்திருப்பாய் என்றற்கு, “என் துயர் அறிந்திலை போலும்” என்றும் கேட்கின்றார். ‘போலும்’ என்பது ஈண்டுப் போல்கின்றாய் என்னும் பொருள்பட வந்தது. முருந்து - வேரின் மேற்றண்டு. அடிசிவந்து மேற்றண்டு வெண்மையாய் இருத்தலாற் மகளிர் பற்கு அதனை சான்றோர் உவமம் செய்கின்றனர். “அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப்பொலிந் திலங்கும் எயிறுகெழு துவர் வாய், (அகம். 62) என்பது காண்க. முறுவல் - பல்; பல்போன்ற நகைத்தலையும் முறுவலென்பர். முலைத்தலை யுருளலாவது, முலைமேற் கிடந்து கூடியிருத்தல். மகளிரொடு கூடிக் கிடப்பார்க்குப் போக நுகர்ச்சி அவரது உணர்வு செயலறுவித்தலின், மனம் மயங்கி யொழியும்; யான் அந்நிலையிலும் உணர்வு இழக்காமல் உன் திருவடித் தாமரைகளியே எண்ணி வாழ்த்துவேன் என்பார், “மங்கையர் முலைத்தலை யுருண்டனனேனும் உன் திருவடி மலரை மறந்திலேன் வருந்துகின்றனன் காண்” என வுரைக்கின்றார். தலை, ஏழனுருபின் பொருள்பட வந்த இடைச் சொல். மருந்து - தேவரமுது; சாதற் பிணியைத் தீர்க்கும் இயல்பிற் றென்பது பற்றி மருந்தெனப்படுகிறது. பிறப்பிறப்புக்களைப் போக்குதலால் சிவனை “மருந்தனையாய்” என்று சிறப்பிக்கின்றார். வருந்தல் நையேல் என்பதை நையல் வருந்தேல் என மாற்றி, நைந்து வருந்தேல் எனக் கொள்க. வந்துளோர் பலராய வழி ஒருவர்க்கொன்றும் பிறர்க்குப் பிறிதும் மறைத்துவைத்துக் கொடுப்பது வஞ்சகம்; நின்பால் வந்தடைந்த சுந்தரர் முதலியோர்க்கு நல்லருள் வழங்கிய நீ என் போன்றார்க்கு அருளாமை வஞ்சகம்; அது நின்பால் இருத்தல் ஆகாதென்பார், “வஞ்சகம் உனக்கும் உண்டேயோ” என வுரைக்கின்றார்.

     இதனால், நினைக்கும் கருவியாகிய நெஞ்சின்கண் இருந்தும் அங்கு நிகழும் துன்ப வுணர்வை நோக்காதிருக்கின்றாய்; என் செய்வேன் என ஆற்றாமல் இரங்கியவாறாம்.

     (3)