1091.

     உண்டநஞ் சின்னும் கண்டம்விட் டகலா
          துறைந்தது நாடொறும் அடியேன்
     கண்டனன் கருணைக் கடல்எனும் குறிப்பைக்
          கண்டுகண் டுளமது நெகவே
     விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே
          விடத்தினும் கொடியன்நான் அன்றோ
     அண்டர்கட் கரசே அம்பலத் தமுதே
          அலைகின்றேன் அறிந்திருந் தனையே.

உரை:

     தேவர்கள் வேந்தனே, அம்பலத்தில் ஆடல் புரியும் அமுது போன்றவனே, நீ முன்பு உண்டதாகிய கடல்விடம் இன்னும் நின் கழுத்தினின்றும் மறையாமல் இருப்பதை நாடோறும் அடியேன் கண்டு, நீ கருணைக் கடலாவாய் என்னும் கருத்தை அதனால் பன்முறையும் உணர்ந்து மனம் உருகி, நீலகண்டா என ஓதினேன்; ஓதிய என்னை நீ அருளாமற் கைவிடுதலால் சிவனே, நஞ்சினும் கொடியவனாய்க் கருதி உலகில் துன்புற்று அலைகின்றேன்; நீயும் அதனை அறிந்திருக்கின்றாய்; என்னால் ஆற்ற முடியவில்லை. எ.று.

     என்னால் ஆற்றமுடியவில்லையென்பது குறிப்பெச்சம். மண்ணுலகுக்கேயன்றி விண்ணுலக்குக்கும் வேந்தாய் முறை செய்யும் தெய்வமாதலின் சிறப்புப்பற்றி “அண்டர்கட் கரசே” என்கின்றார். “வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகி” (ஐயா) என ஞானசம்பந்தர் கூறுவர். அம்பலத்தில் ஆடும் கூத்தப்பெருமான் காண்பார் கண்ணாற் பருகியின்புறும் பொருளாயிருத்தலால் “அம்பலத்தமுது” என்று புகழ்கின்றார். முன்னை நாளில் தேவர்கள் கடைய எழுந்த கடல்விடத்தையுண்டு கழுத்திடத்தே சிவன் உலகெலாம் கண்டு கொள்ளுமாறு நிறுத்திக் கொண்டமைபற்றி, “உண்ட நஞ்சின்னும் கண்டம் விட்டகலா துறைந்தது” என்றும், அதனைக் காணும்போதெல்லாம் அஃது அவனுடைய பெரும் கருணைத் திறத்தை நினைவுறுத்தும் நீர்மையிலிருப்பது உணர்ந்து அன்பால் உள்ளம் உருகுதல் விளங்க, “நாடொறும் அடியேன் கண்டனன் கருணைக் கடலெனும் குறிப்பைக் கண்டுகண்டு உளமது நெகவே” என்றும், அதனால் “நீலகண்டா நீலகண்டா” என்று ஓதியதை “விண்டனன்” என்றும் இயம்புகின்றார். இங்ஙனம் ஓதியோதி யுள்ளுருகும் என்னைக் கைவிடின் கையொழியாது உண்டருளிய கடல் நஞ்சினும் நான் கொடியன் என்பது கருதப்படுகிறது என்பார், “கைவிடின் சிவனே விடத்தினும் கொடியன்நான் அன்றோ” என்று கூறுகின்றார். எதிர்மறை அன்றும் எதிர்மறை ஓவும் கூடி ஆம் எனப் பொருள் தந்தன. இந் நினைவால் மனம் வருந்தி அலைகின்றேன்; இது நின் திருவுள்ளம் அறிந்தது என்பாராய், “அலைகின்றேன் அறிந்திருந்தனையே” என மொழிகின்றார்.

     இதனால், அருளாமை நஞ்சினும் கொடியனாதலை யுணர்த்துதலின் ஆற்றாது மனம் அலைகின்றேன் என்பதாம்.

     (4)