1092.

     தனையர்செய் பிழையைத் தந்தையர் குறித்துத்
          தள்ளுதல் வழக்கல என்பார்
     வினையனேன் பிழையை வினையிலி நீதான்
          விவகரித் தெண்ணுதல் அழகோ
     உனையலா திறந்தும் பிறந்தும்இவ் வுலகில்
          உழன்றிடுந் தேவரை மதியேன்
     எனையலா துனக்கிங் காளிலை யோஉண்
          டென்னினும் ஏன்றுகொண் டருளே.

உரை:

     பெற்ற தந்தையர் தங்கள் மக்கள் செய்யும் பிழைகளை மனத்திற்கொண்டு வெறுத்து நீக்குதல் முறையல்ல என்று கூறுவர்; வினையுடையவனாகிய என்னுடைய பிழைகளை வினைத்தொடர்பில்லாதவனாகிய நீ நீதிமுறைப்படி யாராய்ந்து பார்ப்பது அழகாகாது; உன்னையன்றி உலகிற் செத்துப்பிறந்து வருந்தும் தேவர்களை யான் பொருளாகக் கொள்ளேனாகலின் என்னையொழிய வேறே உனக்கு ஆளாவார் இல்லை; பலர் உளராயினும், என்னையும் ஒருவனாக ஏற்றுக்கொள்ளவேண்டுகிறேன், மறுப்பாயேல் எய்தும் துயரை ஆற்றேன். எ.று.

     தனையர் - மக்கள். பெண்மகளைத் தனயை என்பவாகலின், இது ஆண்மக்களைக் குறிக்கின்றது. குறித்தல் - மனத்திற் கொள்ளுதல். நன்று செய்தாரை விரும்பி யாதறித்தலும், பிழை செய்தாரை வெறுத்து நீக்குதலும் முறைமையாயினும், பெற்ற மக்களிடத்து இது செல்லுவதில்லை என்றற்குத் “தனையர் செய்பிழையைத் தந்தையர் குறித்துத் தள்ளுதல் வழக்கல” என்றும், இஃது உலகியல் நடைமுறையாதலால், “என்பார்” என்றும், உலகவர் மேல் வைத்து உரைக்கின்றார். அறிகருவி செயற்கருவியும் மன முதலிய கரணமும் கொண்டு இமைப்போதும் விடாது அறிவன அறிதலும் அறியாமையும், செய்வன செய்தலும் செய்யாமையும் ஆகிய வினைத் தொடர்புடையேன் என்பது விளங்க, “வினையேன்” என்றும், இறைவன் வினைத் தொடர்பில்லாதவ னாதலால், “வினையிலி” என்றும் குறித்து, வினையுடைய என்பிழையை நீ ஆராய்ந்து நோக்குதல் பொருந்தாது என்றற்கு “வினையனேன் பிழையை வினையிலி நீ தான் விவகரித் தெண்ணுதல் அழகோ” என்றும் இயம்புகின்றார். விவகரித்தல் - காரணகாரிய விதிவிலக்கு முறையில் ஆராய்தல். செத்துப் பிறக்கின்றவர் தேவராயினும் மக்களோடு ஒத்தலால், அவரை வழிபடுதலால் உய்தி எய்தாதாகையால் திருவருள் ஞானச் செல்வர்கள் பிறப்பிறப்பில்லாத சிவபெருமானையே வழிபடுகின்றமையின், “உனையலாது இறந்தும் பிறந்தும் இவ்வுலகில் உழன்றிடும் தேவரை மதியேன்” என உரைக்கின்றார். இக் கொள்கையாற் சிறந்தவர் திருஞானசம்பந்த ரென்பாராய், “மதுமலர் நற் கொன்றையான் அடியலாற் பேணா, எம்பிரான் சம்பந்தன்” (தொண்டத் தொகை) என்று சுந்தரர் கூறுவர்; அவரும், “விரும்பேன் உன்னையல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால்” (கழிப்) என்பர்; மாணிக்க வாசகர், “உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லவா தெங்கள் உத்தமனே” (சதக) என்று இசைப்பர். இவ்விடத்தே என்னைப் போல் தக்க ஆள் வேறு இல்லை; இருப்பரேல் அவரிடையே என்னையும் சேர்த்துக் கொள்வதால் ஆள் தொகையில் மிகுதியோ, அருள் நிறைவில் குறைவோ உண்டாகாது என்பாராய், “எனையிலா துனக்கு இங்கு ஆளிலை; உண்டென்னினும் ஏன்று கொண்டு அருளே” என இயம்புகின்றார். ஆளிலையோ என்றவிடத்து ஓகாரம், அசைநிலை.

     இதனால், என்னை உனக்கு ஆள் என ஏன்று கொண்டு அருள் புரிக; மறுத்தால் துயர் ஆற்றேன் என்பதாம்.

     (5)