1093. ஏன்றுகொண் டருள வேண்டும்இவ் எளியேன்
இருக்கினும் இறக்கினும் பொதுவுள்
ஊன்றுகொண் டருளும் நின்னடி யல்லால்
உரைக்கும்மால் அயன்முதல் தேவர்
நான்றுகொண் டிடுவ ரேனும்மற் றவர்மேல்
நாஎழா துண்மையீ திதற்குச்
சான்றுகொண் டருள நினைத்தியேல் என்னுள்
சார்ந்தநின் சரண்இரண் டன்றே.
உரை: பெருமானே, எளியவனாகிய யான் உயிரோடிருப்பினும், இறந்தாலும் அம்பலத்தில் காலூன்றி யாடி யருளும் நின்னுடைய திருவடியை யன்றிச் சிறப்பாகக் கூறப்படும் திருமால் பிரமன் முதலிய தேவர்கள் என் முன்னே தூக்குப் போட்டுக் கொண்டாலும் அவர்களைப் பாடிப் பரவுதற்கு என்னுடைய நா முன் வராது; இது முக்காலும் உண்மை; இதற்குச் சான்று வேண்டுமெனத் திருவுள்ளத்தில் நினைப்பாயாயின் என் மனத்தின்கண் உறையும் நின்திருவடிகளே சான்றாகும்; ஆகலின், என்னை அடியனாக ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும். எ.று.
அறிவாற்றல்களில் மிகவும் குறைந்தவன் என்பதற்கு “இவ்வெளியேன்” என்று தம்மைச் சுட்டி யுரைக்கின்றார் வள்ளற் பெருமான். பிற தேவர்களைப் பாடிப் பரவாவிடின் இத்துன்ப வுலகில் பன்னாள் நெடிது உயிரோடு இருக்க வேண்டுமாயினும், அல்லது இறந்துபட வேண்டி வருமாயினும் என்பார், “இருக்கினும் இறக்கினும்” என்றும், யான் பணிந்து பரவுதல் செய்யேனாயில், திருமால் முதலாய தேவர்கள் என் கண்முன்னே எதிரில் தூக்குப் போட்டுக் கொண்டு சாகுமுகத்தால் என்னைப் பெரும்பழியும் பாவமும் சூழச் செய்வாராயினும் நின் திருவடியை யொழியப் பாடிப் பணிந்து பரவமாட்டேன் என்றற்கு “நின்னடி யல்லால் மால்அயன் முதல்தேவர் நான்று கொண்டிடுவரேனும் மற்று அவர்மேல் நா எழாது” என்றும் கூறுகின்றார். திருவடியின் சிறப்பை வற்புறுத்தற்குப் “பொதுவுள் ஊன்று கொண்டருளும் நின்னடி” எனவுரைக்கின்றார். ஊன்றிய திருவடி திரோதத்துக் குரிய தென்பர் சான்றோர். “ஊற்றமா ஊன்று மலர்ப் பதத்தில் உற்ற திரோதம்” (உண். விளக்.36) காண்க. மலத்தொடு கலந்து அதன் மறைக்கும் சக்தியைக் கெடுப்பது திரோத சக்தி என அறிக. மலமறைப்பின் நீங்கிச் சிவஞான விளக்கம் நல்குவது பற்றி அதனை அம்பலத்தில் பரமன் ஆடும் திருக்கோலத்தாற் காட்டுகின்றானாதலின் “பொதுவுள் ஊன்று கொண்டருளும் அடி” என வுரைக்கின்றார். “நற்றவாவுனை நான் மறக்கினும் சொல்லும் நா” (பாண்டிக்) என நம்பியாரூரர் கூறுவது போல, “நா எழாது” எனக் கூறுகின்றார். என் மனவுறுதிக்குச் சான்று வேண்டுமெனில், அறிவுருவாய் என் அறிவினுள் மன்னியிருக்கும் நின் திருவடியே சான்றாகும் எனத் தெளிவித்தற்கு, “இதற்கு சான்று கொண்டருள நினைத்தியேல் என்னுள் சார்ந்த நின் சரண் இரண்டன்றே” என மொழிகின்றார்.
இதனால், மறந்தும் புறந் தொழாத மன மாண்புரைத்துக், கைவிடின் ஆற்றாமை குறிப்பெச்சத்தாற் புலப்படுத்தவாறாம். (6)
|