1094.

     சரணவா ரிசம்என் தலைமிசை இன்னும்
          தரித்திலை தாழ்த்தனை அடியேன்
     கரணவா தனையும் கந்தவா தனையும்
          கலங்கிடக் கபமிழுத் துந்தும்
     மரணவா தனைக்கென் செய்குவம் என்றே
          வருந்துகின் றனன்மனம் மாழாந்
     தரணமூன் றெரிய நகைத்தஎம் இறையே
          அடியனை ஆள்வதுன் கடனே.

உரை:

     அசுரர்களின் மூன்றாகிய மதில்களைக் குறுநகை செய்தழித்த எங்கள் இறைவனே, நின்னுடைய திருவடித் தாமரைகள் இரண்டினையும் என் தளைமேல் இன்னும் வைக்காமல் காலம் தாழ்த்து விட்டாய். அதனால் அடியவனாகிய யான் கரணவாதனையும் கந்தவாதனையும் நிலைகலங்கவும் கபம்மிகுந்து கைகால்களை யிழுத்து வருத்தும் மரணவாதனை எய்துங்கால் என் செய்வோமென மனம் மயங்கி வருந்துகிறேன், அடியேனை விரைந்து ஆட்கொள்வது உனக்குக் கடனாம். எ.று.

     திரிபுரத் தசுரர்கள் இரும்பு பொன் வெள்ளி என்ற மூன்றால் தனித்தனி வகுத்துக்கொண்டிருந்த மதில்கள் மூன்றும் “அரண மூன்று” எனவும், சிவன் மலையை வில்லாகக் கொண்டு அவற்றை முறுவல் நகை புரிந்து நோக்கியதும் அவை எரிந்து சாம்பரான செய்தியை “எரிய நகைத்தே இறையே” எனவும் கூறுகின்றார். மூன்று என்றவிடத்து முற்றும்மை தொக்கது. திருநாவுக்கரசர்க்கும் நம்பியாரூரர்க்கும் இறைவன் திருவடி தலைமேல் வைக்கப் பெற்ற வரலாறு பற்றித் தமது தலையிலும் திருவடித் தாமரையைச் சூட்ட வேண்டுமென விரும்புகின்றாராதலின் “சரண வாரிசம் என் தலைமிசை யின்னும் தரித்தலை தாழ்த்தனை” என்று உரைக்கின்றார். “நனைந்தனைய திருவடி யென்தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார்” (நல்லூர்) என நாவுக்கரசர் நவில்வது காண்க. நம்பியாரூரர், “கறை கொண்ட கண்டத் தெம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்” (கெடில வீரட்) என உரைப்பது அறிக. வள்ளற் பெருமான் ஆர்வமிகுதி தோன்றத் “தாழ்த்தனை” என மொழிவதுடன், மரணவேதனையை ஒரு காரணமாகக் காட்டுகின்றார். கரணவாதனை - மனம் முதலிய அந்தக் கரணங்களின் செயல்; கந்தவாதனை - பொறி புலன்களின் செயல். புத்தர்கள் கூறும் கந்த வாதனை வேறு; அது சுக வுணர்வு, துக்கவுணர்வு, சுகதுக்க உணர்வு என மூவகையாம். இறந்துபாடு எய்துங்கால் பொறிபுலன்களும் மன முதலிய காரணங்களும் நிலை குலைந்து உணர்விழந்து செயலற் றொழிவது பற்றிக் “கரண வாதனையும் கந்த வாதனையும் கலங்கிட” என்றும், சிலேத்துமம் மிக்குற்று நாவெழாவாறு அடைத்துவிடுதல்கண்டு, “கபம் இழுத்து” என்றும், மேனோக்கி மூச்சுக் காற்றைத் தள்ளுதலால், “உந்தும் மரணவாதனை” என்றும், உயிரிருந்தும் உணர்வு செயலறுதல் பற்றி, “என் செய்குவ” மென்றும் எடுத்துக் கூறி, அந்நிலையை நினைந்து மனம் வருந்தும் திறத்தை, “மனம் மாழாந்து வருந்துகின்றனன்” என்றும் மொழிகின்றார். மாழாத்தல் - உணர்வு மயங்குதல். “புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவழிந் திட்டைம் மேலுந்தியலமந்த போதாக, அஞ்சே லென்றருள் செய்வான்” (ஐயாறு) என்று ஞானசம்பந்தர் கூறுவர். “தன் கடன் அடியேனையும் தாங்குதல்” (கடம்பூர்) எனப் பெரியோர் கூறுதல் கொண்டு, “அடியேனை ஆள்வதுன் கடன்” என்று ஆற்றாமை தோன்றக் கூறுகிறார் வள்ளலார்.

     இதனால், மரணவாதனைக் கஞ்சி தம்மை ஆட்கொள்ள வேண்டுமென ஆற்றாமையால் முறையிட்டவாறு.

     (7)