1097. கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக்
கல்விகற் றுழன்றனன் கருணை
சொற்பன மதிலும் காண்கிலேன் பொல்லாச்
சூகரம் எனமலம் துய்த்தேன்
விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன்
வீணனேன் விரகிலா வெறியேன்
அற்பனேன் தன்னை ஆண்டிநின் அருளை
ஆயந்திடில் அன்னையின் பெரிதே.
உரை: கற்றற்கு உரியவற்றை அறிந்து கல்லாமல் குற்றம் செய்தற்கேற்புடைய கல்வியைக் கற்று வருந்தினேனே யன்றிச் சிவனே நின் கருணை நலத்தைக் கனவிலும் கண்டறிகிலேன்; பொல்லாத பன்றிபோல உண்டவழி மலமானவற்றையே யுண்டு வாழ்ந்தேன்; விற்பன்னன் என்று பலர் முன் நிற்பதையே விழைந்த யான் வீண்பொழுது போக்குவேனாய், செயலறிவில்லாத வெறியனாய் அற்பனாகிய என்னை அடியனாய் ஆண்டுகொண்ட நின்னுடைய திருவருளை ஆராய்ந்து பார்க்குமிடத்துப் பெற்ற தாயின் அருளினும் பெரிதாகும். எ.று.
கற்பன - கற்றற்குரிய ஞான நூல்கள்; பல சமயத்தவரும் தத்தம் சமய நூல்கள் என்பாரேனும், சைவம் கூறும் ஞான நூல்களைத் தேர்ந்து கற்றல் வேண்டுமாகலின், கற்பனை வறிந்து “கற்கிலேன்” என்று கூறுகின்றார். கல்வி யுலகிற் பலவேறு நூல்கள் பொருளியல் அரசியல் முதலியனபற்றிக் கூறலால் அவற்றின் நீக்கற்கு “அறிந்து” எனல் வேண்டிற்று. கற்ற கல்வியை விளம்புதற்குச் “சழக்குக் கல்வி கற்று” என்றும், அவற்றின் விளைவால் மனவமைதியின்றி வருந்தியுழன்றமை தோன்ற, “உழன்றனன்” என்றும் இயம்புகின்றார். இந்நூலறிவு குற்றம் செய்தற்கும் அதனை மறைத்தற்கும் வேண்டிய சூழ்ச்சி புரியத் துணை செய்தலால், அதனைச் சழக்கு கல்வியென்று சாற்றுகின்றார். இறைவன் அருளையோ அதனைப் பெறும் நெறியையோ அக்கல்வி கனவிலும் காட்டாமைப் பற்றி “கருணை சொற்பன மதிலும் காண்கிலேன்” என்று கூறுகின்றார். பொல்லாச் சூகரம் - அழகில்லாத பன்றி, உண்பன யாவும் வயிற்றிற் செரிப்புண்டு மலமாதலால், உண்பனவற்றை “மலம்” என்று குறிக்கின்றார். சழக்குடையதாயினும், உலகியற் கல்வி உணவு தேடிக் கோடற்குதவுதலின், அவ்வுணவுண்டு பின்னும் அதனையே நாடு திறம் உண்டானமை குறித்தற்கு, கருணை காணேனாயினும், “பொல்லாச் சூகரமென மலம் துய்த்தேன்” என்று கூறுகின்றார். விற்பனன் - புலமை மிக்கவன். கண்டோர் “இவன் கல்வி வல்ல விற்பன்னன்” என்று வியந்துரைக்குமாறு, அவர் முன்பு உயர்ந்தோங்கி நிற்றற்கு விரும்பினேன் என்பார், “விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன்” என்கின்றார். எனவே - என்று வியந்துரைக்கவே; அதனால் கண்டோர் என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. இச்செயல் இறைவன் திருவருளைப் பெறுதற்குப் பயன்படாமை கண்டு, “வீணனேன்” என்றும், அருட்பேற்றுக்குரிய நுண்ணிய அறிவும் செயலும் எய்தாமையால், “விரகிலா வெறியேன்” என்றும், ஏனை விலங்குகட்குள்ள சிற்றறிவே தன்பால் உண்மை கண்டு “அற்பன்” என்றும் பழித்துக் கொள்கின்றார். இப்போது மனத்தில் திருவருள் நினைவும், வாயில் திருவடி பராவலும் தோன்றியுள்ளமை, திருவருட் செல்வம் தமக்கு எய்தியிருப்பதை நன்கு புலப்படுத்துதலின், “அற்பனேன் தன்னை ஆண்ட நின்னருளை ஆய்ந்திடில் அன்னையிற் பெரிதே” என்று இயம்புகின்றார். வீண்படல், விரகின்மை, அற்பப் பண்பு முதலியன வுடையனாயின், மகனாயினும் தாய் வெறுப்பள்; நீ அவளினும் பேரருளாளனாவாய் என்பது வலியுறுத்தற்கு, “நின் அருளை யாய்ந்திடில் அன்னையிற் பெரிதே” எனத் துணிந்துரைக்கின்றார். நற்பண்பும் நல்லொழுக்கமும் இல்லாயின் அவனை ஈன்றாளாயினும் தாய் வேறாக நினைப்பள் என்று திருவள்ளுவர் முதலிய சான்றோர் கூறுவர்.
இதனால், உரியன கல்லாது அருள் நெறிக்கு வேறான கற்று உணவே யுண்டு வீணனாய் ஒழுகிய என்னையும் ஆண்டருளியது சிவத்தின் தாயிற் பெரிதாய தாயுடைமை என விளம்பியவாறாம். (10)
|