11.

    நாம்பிரமம் நமையன்றி யாம்பிரமம் வேறில்லை
        நன்மை தீமைகளு மில்லை
        நவில்கின்ற வாகியாந் தரமிரண்டினு மொன்ற
        நடுநின்ற தென்று வீணாள்
    போம்பிரம நீதி கேட்போர் பிரமையாகவே
        போதிப்பர் சாதிப்பர் தாம்
        புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினையொன்று
        போந்திடிற் போக விடுவார்
    சாம்பிரமமா மிவர்கள் தாம் பிரமமெனு மறிவு
        தாம்பு பாம்பெனு மறிவு காண்
        சத்துவ வகண்டபரி பூரணா காரவுப
        சாந்த சிவசிற் பிரம நீ
    தாம்பிரிவில் சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     தாம் என்றும் பிரிவின்றி யிருக்கின்ற சென்னைக் கந்த கோட்டத்துள் கோயில் கொண்டு ஓங்குகின்ற கந்தப் பெருமானே, தண்ணிய முகத்தையுடைய தூய மணிகளில் ஒளிமிக்க சைவமணியாகிய ஆறுமுகங்களை யுடைய தெய்வ மணியே, சத்துவ குணமே வடிவமாய் அளவுக் ககப்படாத முற்ற நிறைந்த உபசாந்தப் பெருவெளியில் விளங்கும் பரசிவமாய் ஞானப் பெரிய பொருளாகிறவன் நீ; அங்ஙனமிருக்க, நாமே அப்பிரமமாகிய பெரிய பொருள்; நம்மை யன்றிப் பிரமம் என வேறே இல்லை; நன்மை தீமை என்பவை இல்லை; சொல்லப்படுகின்ற பாகியம், அந்தரம் என்ற இரண்டும் பொருந்த வழிபாடு நடுநிலையாயது என நாளை வீணாக்குவர்; பிரம நீதிகள் என்ற பலவற்றைக் எடுத்துக் காட்டிக் கேட்போர் அறிவு மலைக்குமாறு கூறித் தருக்க நெறியிற் சாதிப்பர்; அந்நிலையில் தாம் மேற்கொண்ட புல்லிய நெறிகளைக் கைவிட மாட்டார்; செய்வினை புகுந்து துன்பம் விளைக்குமிடத்துத் தமது பிரமக் கொள்கையைக் கைவிடுவர்; சாகும் பிரமங்களாகிய இவர்கள் தம்மைப் பிரமம் என்று சொல்லும் அறிவு தாம்புக் கயிற்றைப் பாம் பென்று எண்ணி யுரைக்கும் மயக்க அறிவே யாகும், எ. று.

     பிரமம் என்னும் வடசொல்லுக்கு பெரியது, பெரிய பொருள் என்று பொருள் கூறுவர். பொருளாயின் அதற்குக் குணமுண்டு; பரசிவம் பிரமமாகவே அதற்குச் சத்துவமே குணம் என்றும், அளவைகளால் அளந்தரிய வொண்ணாதது என்றும், அது குறைவே யில்லாத நிறைவாய் அமைந்தது என்றும், அது காட்சி தருமிடம் மாயா மண்டலத்துக் கப்பாலான பெருவெளி என்றும், அந்நிலையில் அது ஞானமயமாய்த் திகழ்வதென்றும் கூறுவாராய், “சத்துவ அகண்ட பரிபூரணாகார உபசாந்த சிவசிற்பிரமம்” என்று மொழிகின்றார். அந்தச் சிவமாகிய பிரமமே முருகன் எனற்குச் “சிவசிற் பிரமம் நீ” என்று தெரியக் கூறுகின்றார். கண்டம், அளக்கப்படுவது. பரிபூரணாகாரம், குறைவிலா நிறைவாய வடிவம். சாந்தமாகிய சிவத்துக்கு உபசாந்தம் அருட்சக்தி யாகலின், அதனை யுடைமை பற்றி “உபசாந்த சிவசிற் பிரமம்” எனச் சிறப்பிக்கிறார். “சக்திக்கு வித்துத் தனது உபசாந்தமே” (திருமந். 2506) என்று திருமூலர் கூறுவது காண்க. சித்தும் அசித்துமாகிய பொருள் வகைக்கு முதற் காரணம் பிரமம் என்னும் பிரமவாதிகள் உரைக்கும் கூற்றை மறுத்துச் சின்மயம் பிரமம் என்று வற்புறுத்தற்குச் “சிற்பிரமம்” என்று இயம்புகின்றார். நீர் நிறைத்து வெயிலில் வைத்த பலவேறு குடங்களிலும் வானில் விளங்கும் ஒரு சூரியனே காணப்படுவதும், உலகில் உள்ள உடம்பு தோறும் பிரமம் ஒன்றே உயிராய் இலங்குகின்றது; அந்த உயிர் வேறாகவும் பிரமம் வேறாகவும் இருத்தற்கில்லை; அதனால் நாமெல்லாம் பிரமம்; நம்மின் வேறாகப் பிரமம் இல்லை யென்ற பிரமவாதிகளின் கூற்றைக் கொண்டெடுத்து மொழிகின்றாராதலின், “நாம்பிரமம் நமையன்றி ஆம்பிரமம் வேறில்லை” எனவும், குடத்துள் தோன்றும் சூரியன் நீரலையால் அசையினும் அவ்வசைவு வானத்துச் சூரியனுக் காகாதவாறு போல, நமக்குறும் நன்மை தீமைகள் பிரமத்துக் கில்லை என்னும் அவர்களது வாதத்தை உள்ளத்திற் கொண்டு, “நன்மை தீமைகளும் இல்லை” எனவும் ஓதிக் காட்டுகின்றார். நம்மின் வேறாகத் தெய்வமொன் றுண்டென்று அதற்குரிய வழிபாட்டு முறைகளைக் கூறும் நூல்கள், புறப்பூசை, அகப்பூசை யென இரண்டினைக் கூறுதலால், அவற்றை யெடுத்துச் சொல்லி, நீவிர் செய்யும் பூசை யாது எனக் கேட்டால், அவர்கள், இரண்டுமின்றிப் பிரமத் தியானம் செய்து ஆன்மப் பிரமத்தை எண்ணுவதே பூசை யென்று உரைப்பர்; அது புறப்பூசையுமாகாது அகப்பூசையு மாகாது இரண்டிற்கும் இடைப்பட்டது என மொழிந்து வீண் பொழுது போக்குவர் என்பாராய், “நவில்கின்ற வாகியாந்தரம் இரண்டிலும் ஒன்ற நடுநின்றது என்று வீணாள் போம்” என்கின்றார். ‘பாகியம்’ என்ற வடசொல் வாகியம் எனத்திரிந்தது. பாகியம்-புறம். அந்தரம்-அகம். பிரமவாதிகட் குரிய நல்லொழுக்கங்கள் யாவை யென்று கேட்கலுறின், எளிதிற் பொருள் விளங்காத சொற்களால் ஆரவாரம்படப் பேசிக் கேட்போர் அறிவை மயக்குவர் என்பார், “பிரமநீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர்” என்றும், கேட்போர் பிரமிக்காமல் அவர் கொள்கைகளை நுணுகிக் காணலுறின், காரண காரியங்களைக் கைவிட்டு வெறும் திட்டாந்தங்களையே சொல்லிச் சாதிக்க முயல்வர் என்பார், “சாதிப்பர்” என்றும் இயம்புகின்றார். காரண காரியங்களால் சாதிக்க மாட்டாத விடத்துத் தமது கொள்கை தவறாவ துணர்ந்தாராயினும், அதனைக் கைவிடுவதில்லை என்றற்கு, “தாம் புன்மைநெறி கைவிடார்” என்று கட்டுரைக்கின்றார். வினை வயத்தால் அவர்கள் துன்ப மெய்தி வருந்தக் காண்பவர், “இந்தப் பிரமத்துக்குத் துன்பமேது” என்று கேட்டால், வாய் வாளாது ஒழிகுவர் என்பார், “வினை யொன்று போந்திடில் போக விடுவார்” என்று கூறுகின்றார்.

     இதனாற் பிரமவாதிகளின் புன்மை கூறியவாறு காணலாம்.

     (11)